counter create hit லொகார்னோ திரைப்பட விழாவின் முதல் நாளில் பெருமுற்றத்தை ஆக்கிரமித்த Netflix திரில்லர்

லொகார்னோ திரைப்பட விழாவின் முதல் நாளில் பெருமுற்றத்தை ஆக்கிரமித்த Netflix திரில்லர்

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் முதல் நாள் பியாற்சே கிராண்டே திறந்த வெளி பெரு முற்றத்தில் திரையிடப்பட்ட திரைப்படம் 'Beckett'.

இத்தாலிய இயக்குனர் Ferdinando Cito Filomarino வும், Blackkklansman, Tenet திரைப்படங்களின் நாயகனாக நடித்த John David Washington னும் இணைந்து உருவாக்கிய திரைப்படம் இது.

' நாம் சரணடையவே மாட்டோம் ', 'மீண்டு வந்திருக்கிறோம்', 'Cinema is Back' எனும் திரைப்பட விழாக்குழுவின் கோட்பாடுகளுடன் கொரோனா தாக்கத்தின் ஒருவருட இடைவெளியின் பின்னர் நேற்று தொடங்கப்பட்ட லொகார்னோ திரைப்பட விழாவில், முதல்நாளே மழை குறுக்கிட பியாற்சே கிராண்டே திறந்த வெளி நிகழ்வுகள் அனைத்தும் வழமை போல் உள்ளக அரங்கிற்கு மாற்றப்பட்டது.

பிரெஞ்சு கிலாசிக்கல் ஹிட்ஸ் 'Asterix & Obelix vs.Caesar ' இன் கதாநாயகியும், நடிகையுமான Laetitia Casta க்கு இம்முறை Locarno வின் Excellence Award கௌரவம் கொடுக்கப்பட்டு விழா தொடங்கப்பட்டது. திரைப்படக்குழு தலைவர் மார்கோ சொலாரி, சினிமா டிஜிட்டலிசேசன் குறித்து பெருமிதத்துடன் கூறி படவிழாவை தொடக்கிவைக்க, Beckett திரைப்படத்தின் முதல் செக்கனை அலங்கரித்தது Netflix logo. இது ஒரு முரண் விசித்திரம், ஆனால் சமகால யதார்த்தம்.

லோகார்னோ என்றால்லே பிரமாண்டத் திறந்தவெளித்திரை. அந்தத்திரையின் தன்மைக்கு நேரெதிரான பண்புடைய OTT எனும் இணையத்திரை. கடந்த ஐந்தாறு வருடங்களாக லொகார்னோ திரைப்பட விழா முதல் அனைத்து பிரதான திரைப்பட விழாக்களும் OTT தளங்களின் வருகையையும், சிறிய தொலைக்காட்சித் திரைக்குள் சினிமா சுருங்கிப் போக விடக்கூடிய ஆபத்தையும் பல விவாதக் கருத்தரங்குகளில் கொட்டித்தீர்த்திருந்தனர். ஆனால் OTT தளங்களின் தவிர்க்கமுடியாதஆளுமையை இப்போது அரவணைக்க மட்டுமே அவர்களால் முடிந்திருக்கிறது.

கிரீஸ் நாட்டில் இனந்தெரியாத மர்ம மாஃபியா கும்பலின் பிடியில் சிக்கும் ஒரு அமெரிக்க சுற்றுலாப்பயணி (ஒரு மாற்றத்திற்காக அமெரிக்கராக கறுப்பினத்தவரை காண்பித்திருக்கின்றனர்), எப்படி சின்னாபின்னமாகின்றார் என்பதே படத்தின் திரில்லர் கதை. Netflix இன் தயாரிப்பில் வெளியான இத்திரைப்படம் ஏமாற்றத்தை தவிர பெரிதாக வேறெந்த உணர்வையும் தரவில்லை.

கிரீஸின் அரசியல், கம்யூனிசம், பாசிசம், தீவிரவாதம் ஆகியவற்றின் பிடியில் Beckett எனும் கதாநாயகன் தற்செயலாக சிக்குகிறான். அவனை ஏன் அனைவரும் கொல்ல நினைக்கின்றனர் என படம் முடியும் வரை Beckett க்கும் தெரியவில்லை. நமக்கும் சரிவர புரியவில்லை. இயக்குனர் Ferdinando, 1970 களின் இத்தாலிய சினிமா கலாச்சாரமாக இருந்த அரசியல் திரில்லர் கதைகளின் சாயலில் அவற்றிற்கு பெருமை சேர்க்கும் வகையில், Sydney Pollack, Alan J.Pakula, Dario Argento ஆகியோரின் கதைத் தழுவல்களில் தனது திரைப்படத்தை காண்பிக்க முற்பட்டிருக்கிறார்.

ஒரு கிரைம் திரில்லரை கிரீஸ் போன்ற இதுவரை ஐரோப்பிய, அமெரிக்க சினிமா உலகுக்குள் பெரிதாக காண்பிக்கப்படாத கதைக்களத்தில் நகர்த்தியிருக்கிறார்கள். அதற்காகவே கிரீஸையும், அதன் இயற்கையையும், அங்கு அன்றாட வாழ்வில் நகரும் மாந்தர்களையும், அந்நியப் பேய்களாகவே சித்தரித்திருக்கின்றனர்.

ஒரு பக்கா தென்னிந்திய காமர்ஷியல் தமிழ்த்திரைப்படம் பார்ப்பது போன்றே உணர்வு. அல்லது இலங்கைத் தமிழர் விடுதலைப் போராட்டங்களை தமது தேவைக்காக கொச்சைப்படுத்தும் வட இந்திய திரில்லர் போன்ற படங்களை பார்க்கும் உணர்வு. படம் பார்த்து முடிக்கையில், இதே John David Washington தானா ஸ்பைக் லீயுடனும் கிரிஸ்டோபர் நோலனுடமும் இணைந்து நடித்தார் எனும் கேள்வி எழுகிறது. அந்தளவு நடிப்பு பெரும்பாலான இடங்களில் ஒட்டவில்லை. இயக்குனர் கையில் தான் ஒரு நல்ல நடிகனின் எழுச்சி இருக்கிறது என்பதை மறுபடியும் இந்தப்படம் நிரூபிக்கிறது.

இம்முறை புதிய கலை இயக்குனர் Giona A.Nazzaro வுடன் களமிறங்கும் லோகார்னோ திரைபப்ட விழாவில் பெரும்பாலான திரைப்படங்கள் Noir, Crime, Thriller, Emancipation இவற்றுடன் அரசியல் திரைப்படங்களாக இருக்கின்றன. அவரது ரசணை அதுபோலும்.

இன்றைய இரண்டாம் நாள் திரைப்பட காட்சிகளில் சர்வதேச போட்டிப் பிரிவில் திரையிடப்படவிருக்கும், செர்பிய சினிமா மாஸ்டர் என அழைக்கப்படும் Srdan Dragojevic வின் Heavens Above திரைப்படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. கம்யூனிச கொள்கைகளிலிருந்து விடுபட்டு, திடீரென தீவிர வலதுசாரிக் கொள்கைகளை கடைப்பிடிக்கத் தொடங்கும் மக்களுக்கு ஒருவர் குருவாக மாறுகிறார். அவரை பற்றிய Comedy Noir திரைப்படமாக இது வெளிவருகிறது.

அதோடு இன்றைய Piazza Grande திறந்த வெளி முற்றத்தில் காண்பிக்கப்படும் Rose எனும் பிரெஞ்சு மொழித் திரைப்படமும் ஆவலைத் தூண்டுகிறது. 80 வயதில் ஒன்றுமே செய்ய முடியாது என கைவிரிக்க, அதன் பின்னரும் வாழ்வை வாழலாம் எனும் கதைப்பின்னல். அதோடு இன்றைய நிகழ்வுகளில் Vision Award, லொகார்னோவின் உயரிய விருதுகளில் ஒன்றை பெறப்போகிறார் Phil Tippett.

1977 களில் வெளியான முதல் Star Wars திரைப்படத்தின் Chess game ஐ காண்பிக்கும் Hoslographic செட்டை போட்டவர் இவர் தான். அதன் பின்னர் Robocop திரைப்படத்தின் ரொபோ உருவாக்கம், சமீபத்தில் பின்னர் Jurassic Park இன் dinosaur உருவாக்கம் என அனைத்தையும் அந்தக்காலத்திலேயே தன் சக கலைஞர்களுடன் உருவாக்கி Motion Graphic இற்கு வித்திட்டவரே இவர் தான். இவருக்கு விருது கொடுத்து கௌரவிக்கும் போது, அதை நேரில் காண்பதில் ஒரு சந்தோஷம் தான்.

- லொகார்னோவிலிருந்து 4தமிழ்மீடியாவிற்காக : ஸாரா

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.