counter create hit பியாற்சா கிரான்டே பெருமுற்றம் முழுவதும் வாசத்தை நிரப்பிய Rose திரைப்படம் !

பியாற்சா கிரான்டே பெருமுற்றம் முழுவதும் வாசத்தை நிரப்பிய Rose திரைப்படம் !

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ திரைப்பட விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வில் பியாற்சே கிராண்டே திறந்த வெளித் திரையரங்கை பிரெஞ்சு திரைப்படம் ' Rose' அலங்கரித்தது.

78 வயது நிரம்பிய Rose இன் கணவனின் பிறந்த நாள் யூதர்களின் கலாச்சார முறையிலும், நவீன மேற்கத்தேய முறையிலும் பிரமாண்டமாகவும், குதூகலமாகவும் கொண்டாடப்படுகிறது. படத்தின் முதல் 10 நிமிடங்கள் அக்கொண்டாட்டத்தின் குதூகலக் காட்சிகளால் நிரம்பி வழிகிறது. அந்நிகழ்வின் முடிவில் தான் தெரிகிறது. இறக்கப்போகும் கணவன், மனைவியிடம் அதை காட்டிக் கொள்ளாமல் அவளுக்கு கொடுத்த கடைசி அழகான ஞாபகமே அந்நிகழ்வு.

அடுத்தடுத்த நாட்களில் கணவன் இறந்து வீட்டுக்கு பூதவுடல் கொண்டுவரப்படுகிறது. யூத முறைப்படி இறுதிச் சடங்குகள் அனைத்தும் நிறைவு பெற தனித்துப் போகிறாள் Rose பாட்டி. மூன்று வளர்ந்த பிள்ளைகள். ஒருவர் திருமணமாகி பிரிவு, இன்னொருவர் பழைய காதலியின் அன்பைத் தேடும் ஏக்கம், மூன்றாவது நபர் தாயுடன் வீட்டில் வாழும் இளைஞன். இவர்களுக்கு இடையில் இதுநாள் வரையில் கணவனின் கவனிப்பில் தங்கி வாழ்ந்த Rose பாட்டி தனக்கென என்ன செய்வதென தெரியாமல் சோர்வடைந்துவிட தற்செயலாக ஒரு விருந்துபச்சார நிகழ்வில் அவளை விட வயதான ஒரு கிழவி எந்தளவு வாழ்வை கொண்டாடுகிறாள் என்பதை பார்த்து ரசிக்கிறாள். அவளை மாடலாக கொண்டு தானும் தான் நினைத்த அனைத்தையும் செய்யத் தொடங்குகிறாள்.

இதுவரை பரீட்சயமில்லாத, சிகரெட்டுக்கள், மதுபான வகைகள், சாப்பட்டு வகைகள், தனது மகனின் வயதை ஒத்த ஒருவருடன் இனம்புரியாத நட்பும் காதலும், துனீசிய வகையிலான நடனம் என அனைத்தையும் செய்து பார்க்கிறாள். மகன்களும், மகளும் அச்சப்படுகின்றனர். இந்தக் கிழவி இந்த வயதில் என்ன செய்கிறாள் என ஏங்கத் தொடங்குகின்றனர்.

படத்தின் முடிவில், நீங்கள் பயப்பட்டால் நான் இதையெல்லாம் விட்டுவிட்டு வீட்டோடு ஒதுங்கிக் கொள்கிறேன். ஆனால், இதை இப்படி வாழ்ந்து பார்க்கவே விருப்பமாக இருக்கிறது என Rose பாட்டி சொல்லி முடிப்பதுடன் படம் முடிவடைகிறது.

'எந்த வயதிலும் வாழ்வை வாழ்தல்' என்பதை கவித்துவத்துடனும், பாட்டு மற்றும் நடனத்துடனும், உணவுவகைகளுடனும் மனம் முழுவதும் மகிழ்வை நிரப்பிச் செல்லும் படம் இது. இம்முறை லொகார்னோவில் Prix du Public மக்கள் விருதை வெல்லக் கூடிய அனைத்து தகுதிகளும் இந்த திரைப்படத்திற்கு இருக்கிறது. பிரெஞ்சு இயக்குனர் Aurelie Saada வின் இயக்கத்தில் François Fabian நடிப்பில் உருவான இத்திரைப்படத்தின் பல காட்சிகள் இயக்குனரின் நிஜ வாழ்க்கையில் இடம்பெற்ற சம்பவங்கள்.

படத்தில் நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள் improvise செய்த நடிப்பும், அடுத்து என்ன நடைபெறலாம் என கணிக்க முடியாத கதைப்போக்கும் படத்திற்கு மிகப்பெரும் பலம்.

ஐந்து வருடங்களுக்கு முன்னர் எனது வீட்டுக்கு ஒரு முறை விருந்துணவுக்கு வந்த 90 வயது பாட்டியும், Holocaust நிகழ்வில் தப்பிப் பிழைத்து வாழ்ந்த கடைசி நபருமான என் மைத்துனியின் பாட்டியை நேரில் சந்தித்த போது, அவளது உற்சாகமும், குதூகலமும் இந்தக் கதையை எழுதத் தூண்டியது என சொல்கிறார் Aurelie Saada. இயல்பில் இசைக்கலைஞர் என்பதால் படத்தின் வரும் மெலிதான அரேபிய, ஐரோப்பிய இசைக்கலவையும் படத்திற்கு கூடுதல் பலம்.

நேற்றைய அனைத்து நிகழ்வுகளிலும் இப்படம் பார்த்து முடித்த போது ஒரு நல்ல படம் பார்த்தத்திற்கான திருப்தியை மீண்டும் பரிசளித்தது பியாற்சே பெரு முற்றம்


- 4தமிழ்மீடியாவுக்காக: லொகார்னோவிலிருந்து ஸாரா

Comments powered by CComment

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

We use cookies

We use cookies on our website. Some of them are essential for the operation of the site, while others help us to improve this site and the user experience (tracking cookies). You can decide for yourself whether you want to allow cookies or not. Please note that if you reject them, you may not be able to use all the functionalities of the site.