free website hit counter

கோலங்கள் !

வினோதம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கோலங்கள் பெண்களுக்கானது, அவர்களின் அழகியல் உணர்ச்சிக்கான வெளிப்பாடு அது என தவறான கருத்தியல் உருவாகிவிட்டது. ஆனால் அவை சமூகத்துக்கானவை.

கோலங்கள் மிகு சிறப்பும், பெருந்திறனும் கொண்டவை. இயற்கையின் இயங்குதல் அலைவரிசையோடு இயைந்து கொண்ட ஆன்மீக தன்மை வாய்ந்தவை.

கோலங்களின் கோடுகளில் இயற்கையின் அலைவரிசை அல்லது சக்தி வாய்ந்த யந்திரங்கள் மறைந்திருக்கின்ற. நிறைந்த மன ஒருங்கினைவையும், தியான மனநிலையினையும் தருபவை. திபெத்திய பௌத்த துறவிகளின் வழிபாட்டில் மந்திர யந்திர பூர்வமான கோலமிடுதல் முக்கியம் பெறும்.

இந்து சமய வழிபாடுகளிலும், கிரிகைகளிலும், பண்டிகைகளிலும், கோலங்களுக்கான முக்கியத்துவம் மிகுதியாகவே உண்டு. அதனாற்தான் நாள் தோறும் வீடுகளில் போடவேண்டிய கோலங்கள், சுப காரியங்களில் போடவேண்டிய கோலங்கள், பண்டிகைக் காலங்களில் போட வேண்டியகோலங்கள், கோவில்களில் ஹோமம்,பூஜைகளின்போது போடவேண்டிய கோலங்கள், என கோலங்களில் வலவகைகள் உண்டு.

நமது சமய வழிபாடுகளுக்குரிய தேவதைகளின் அருட்சக்தியை நமக்கு ஈர்த்துத்தரும் வகையில் அத் தெய்வங்களுக்கான சக்திமிகு யந்திரங்களை கோலங்களாக நமது முன்னோர்கள் தந்துள்ளார்கள். உரிய காலங்களில், உரிய கோலங்களை வீடுகளிலும், முற்றங்களிலும், கோவில்களிலும், போடுவது மிகச் சிறந்த பலனைத் தரும்.

 

இன்று நமது இல்லக் கொண்டாட்டங்களிலும், பண்டிகைகளின் போதும், கலர்பொடிகளைத் தூவி இடும் வண்ணக் கோலங்களான ரங்கோலிக் கோலங்கள் முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளன. ஆனால் ரங்கோலிக் கோலம் அடிப்படையில் ஒரு வட இந்திய கலாச்சாரம் சார்ந்த பழக்கமாகும். மலர்களைக் கொண்டு அலங்கரிக்கப்படும் கோலம் கேரளத்தின் சிறப்புமிகு அடையாளமாகும். தானியங்களால் கோலமிடும் பழக்கமும் சில பகுதிகளில் உள்ளது. தமிழர் வழக்கத்தில் சிறப்புற்றிருந்த கோலமிடும் வகை புள்ளிக் கோலமாகும்.

அரிசிப் பொடி, கல் பொடி, மஞ்சள் பொடி, ஊறவைத்து அரைத்த பச்சரிசி மாவு என்பவற்றால் இடப்படும் புள்ளிக் கோலங்களுக்குப் புனையா ஓவியங்கள் எனும் சிறப்புண்டு. இவ்வாறான புள்ளிக் கோலங்கள், நடுவிலுள்ள புள்ளியில் தொடங்கி, பின்னர் வட்டமாகவோ, முக்கோணமாகவோ, வளை கோடுகளாகவோ நீட்டப்படும். இத்தகைய கோலங்களின் வடிவங்களில் ஒருவகை நேர்த்தியும், அழகியலான கட்டுப்பாடுகளும் உண்டு. அவற்றினடிப்படையில், இவற்றினை கம்பிக் கோலம், புள்ளிக் கோலம், என வகைப்படுத்துவர்.

 

கம்பிக் கோலங்கள், கோடுகளை எளிமையான வடிவிலும், அழகியல் ஒழுங்குகளிலும் வரைவதாகும். பெரும்பாலும், ஆலயங்களில், மண்டபங்களில் இவ்வாறான கோலங்களைக்காணலாம். புள்ளிக் கோலங்களின் முக்கியமானவை வரைவதற்கு முன்னதாக இடப்படும் புள்ளிகள். இவ்வாறு இடப்படும் புள்ளிகளுக்கு எண்ணிக்கையும், வடிவ அமைப்பும் இருக்கும். இவற்றின் அடிப்படையில் கோலம் இடுவதற்கு இருவிதமான வரைமுறைகள் உள்ளன. அந்த இரு வழிமுறைகளில், புள்ளிகளைக் கோடுகளால் இணைப்பதன் மூலம் உருவாக்குவது நேர்ப் புள்ளிக் கோலம். ஊடு புள்ளிக் கோலத்தில் புள்ளிகளைத் தொடாது, அவற்றுக்கு இடையால் வரையப்படும் , நேர் அல்லது வளை கோடுகள் மூலம் தோற்றங்களை உருவாக்குவதாகும்.

இவ்வாறான கோலங்களை இடுவதனால், இடுபவர்களின் மனலயிப்பு, கைகளுக்குப் பயிற்சி, மூளைக்கு வேலை. குனிந்து நிமிர்வதால் உடலுக்கு பயிற்சி என்பன ஒருங்கே கிடைக்கும். அரிசி மாவால் கோலமிடுகையில் சிற்றுயிர்களுக்கு உணவிடும் பலனும், கருணை மிகு காருண்ய சிந்தனையும், மஞ்சள் பொடி, மூலிகைப்பொடிகளால் கோலமிடும் போது தொற்றுநீக்கி, சுகாதாரம் பேணும் அனுபவமும் வாய்க்கப்பெறும். தற்காலத்தில் சுன்னாம்புக் கட்டிகளாலும் புள்ளிக் கோலங்கள் வரையப்படுகின்றன. ஆயினும் அவற்றின் மூலம் மேற்குறித்த பயன்கள் யாவும் முழுமையாகக் கிடைப்பதற்கான வாய்ப்பில்லை.

 

இது தவிர, நமது உடம்பினை வண்ணப்பூச்சுகளாலும், குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அழகுபடுத்துவதுபோல், இயற்கையின் தாயாகிய பூமியை, கோலங்கள் அழகுபடுத்துகின்றன என்பதால் கோலங்களிற்று தொய்யில் என்றும், மனதுக்கும் வாழ்க்கைக்கும், நம்பிக்கை ஒளி தருவதால், ஒளி என்றும் அழைக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

காலை வேளைகளில் கோலங்கள் போடும்போது, தெரிந்த பதிகங்களை சொல்லிக் கொண்டு இறை சிந்தனையுடனும், முழுக் கவனத்துடன் போடும் கோலங்களால் மனதில் அமைதியும், தெய்வீகமும் மிகுந்துவரும் என்பது முன்னோர் நம்பிக்கை.

 

தமிழகத்திலும், ஈழத்திலும், மார்கழி மாதத்தில், வீடுகளின் வாசல்களை, புள்ளிக் கோலங்களும், பொடிக் கோலங்களும், அலங்கரிக்கும். இக்கோலங்களின் நடுப்புள்ளியில், பசுவின் சாணத்தை உருட்டி பிள்ளையாராக்கி, அதன் மேல் பூசணிப் பூவை வைத்து அலங்கரிப்பது வழக்கம். காலை வேளைகளில் புரியும் ஒரு மௌனத் தவம் போன்ற இந்தக் கலை கைவரப்பெற்ற தமிழ்சமூகம், வண்ணப்பொடிகளிலும், அச்சிடப்பட்ட ஸ்ரிக்கர் கோலங்களிலும், தொலைக்காட்சித் திரையினிலும், தொலைத்துவிடத் துடிக்கிறது. ஆனாலும் அற்புதமான அந்தக் கலைமறைந்திடக் கூடாது என்பதற்காக ஆர்வலர்களம், மன்றங்களும் ஆங்காங்கே கோலமிடல் போட்டிகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction