free website hit counter

பொது வேட்பாளர் முன்னெடுப்புக்கு தமிழரசு இன்று முடிவுரை எழுதுமா?! (புருஜோத்தமன் தங்கமயில்)

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் முன்னிறுத்துவது என்பது முட்டாள்தனமான பைத்தியக்காரத் திட்டம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் வவுனியாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கின்ற நிலையில், பொது வேட்பாளர் தொடர்பிலான சம்பந்தனின் நிலைப்பாடு வெளியாகியிருக்கின்றது.

"...ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தமிழினத்துக்கு பேராபத்தானதாக அமையும். ஆகவே, அந்த முன்னெடுப்புக்களுக்கு தமிழரசுக் கட்சி இணங்கக் கூடாது. உறுதியாக எதிர்த்து நிற்க வேண்டும்..." என்று தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் சம்பந்தன் வலியுறுத்தியிருக்கிறார். இந்தச் செய்தியை மத்திய குழுக் கூட்டத்திற்கு எடுத்துச் செல்லுமாறும் அவர், மாவையிடம் கூறியிருக்கிறார். 

பொது வேட்பாளர் விடயம், அடுத்த கட்டத்திற்கு நகர்வதில் தமிழரசுக் கட்சியின் தீர்மானம் முக்கியமானதாக அமையும். ஏனெனில், பொது வேட்பாளர் விடயத்தில் ஒரு சில தனிநபர்களைத் தாண்டி, அதில் அவ்வளவு உறுதிப்பாட்டோடு எந்தத் தரப்பும் இல்லை. குறிப்பாக, பொது வேட்பாளர் விடயத்தை முதன் முதலில் அரங்கிற்கு கொண்டு வந்த ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் உள்ள கட்சிகள், தற்போது அதிலிருந்து பின்வாங்கத் தொடங்கிவிட்டன. குறிப்பாக ரெலோ, புளொட் என்பன தமிழரசுக் கட்சியின் தீர்மானத்தை அறிந்து கொண்டு முடிவெடுக்கும் நிலையில் இருக்கின்றன. பொது வேட்பாளர் விடயத்தை தமிழரசுக் கட்சி ஒதுக்கிவிட்டால், அதனைக் காட்டிக் கொண்டு ரெலோவும் புளொட்டும் விலகிவிடும். அப்படியான கட்டத்தில், அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் ஒரு சிலரும், ஊடக முதலாளி ஒருவரும்தான்  பொது வேட்பாளர் விடயத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சாத்தியம் உண்டு. 

தமிழ்ப் போது வேட்பாளர் விடயத்தில் தமிழரசுக் கட்சிக்குள் சிவஞானம் சிறீதரன், ஞா.சிறீநேசன், பா.அரியநேத்திரன் உள்ளிட்ட சிலர் ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள், பொது வேட்பாளர் விடயம் காலத்துக்கு அவசியமான ஓர் அரசியல் நகர்வு என்று எழுதியும் பேசியும் வருகிறார்கள். அத்தோடு, தங்களின் நிலைப்பாட்டுக்கு கட்சியின் மத்திய செயற்குழு அங்கீகாரம் அளிக்கும் என்றும் நம்புகிறார்கள். அதனால்தான், யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற பொது வேட்பாளர் ஆதரவுக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த சிலர், "...மத்திய குழுவில் எங்களுக்குத்தான் பெரும்பான்மை இருக்கின்றது. ஆகவே, பொது வேட்பாளர் விடயத்தை கட்சி அனுமதிக்கும்.." என்ற தோரணையில் பேசியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய மத்திய குழுக் கூட்டத்தில், பொது வேட்பாளர் விடயத்துக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்து யார் வாதிடப்போகிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது. ஏனெனில், பொது வேட்பாளர் விடயத்துக்கு எதிரான கருத்தை சம்பந்தன் தீர்க்கமான முன்வைத்திருக்கிறார். அத்தோடு, 'உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கில் சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வுடனான தீர்வு' என்பது தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒஸ்லோவில் காணப்பட்ட சர்வதேச இணக்கப்பாடு. அதனைத் தாண்டிய எந்த இணக்கப்பாடும் சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தோடு தமிழ் மக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் அதன்பின்னர் இடம்பெறவில்லை. அப்படியான நிலையில், அதனை சிதைக்கும் முயற்சிகளில் தமிழரசுக் கட்சி இணையக்கூடாது என்பதுவும் சம்பந்தன் வாதம். இதற்கு எதிராக எப்படியான கருத்துக்களை பொது வேட்பாளர் ஆதரவுத் தரப்பினர் எடுத்து வைக்கப்போகிறார்கள்? அத்தோடு, பொது வேட்பாளர் தொடர்பில் காணப்படும் சந்தேகங்களை மத்திய குழு உறுப்பினர்கள் எப்படியும் எழுப்புவார்கள். அவற்றுக்கு யார் பதிலளிப்பது? 

குரு சிஷ்ய கூடாரம்

தமிழ்ப் பொது வேட்பாளர் தொடர்பில் எதிர்க்கருத்துக்களை வெளியிடுவோரும், சந்தேகங்களை எழுப்புவோரும் 'அரசியல் அறிவற்றவர்கள்' என்ற வகையிலான பத்திகளை, அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் சிலர் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, "...நாங்கள் நீண்ட காலமாக எழுதி வருகிறோம். எங்களின் எழுத்துக்களை தாயகத்தில் உள்ளவர்கள் படிப்பதில்லை. புலம்பெயர் தேசத்தில் உள்ளவர்கள்தான் அதிகம் படிக்கிறார்கள். தாயகத்தில் உள்ளவர்களுக்கு வாசிப்புப் பழக்கமும் இல்லை. அரசியல் அறிவும் இல்லை..." என்ற ஒப்பாரி வைக்கப்படுகின்றது. யார் வேண்டுமானாலும் கருத்துச் சொல்லலாம் என்ற நிலை தாயகத்தில் ஏற்பட்டுவிட்டது என்றும் அரசியல் ஆய்வாளர் (எ) பத்தியாளர்கள் சிலர் கோபங்களை வெளிப்படுத்துகிறார்கள். குறிப்பாக, பொது வேட்பாளர் தொடர்பில் கேள்வி எழுப்புவோருக்கு எதிராக வன்மவாதிகள், அறிவிலிகள் என்ற தோரணையில் நிலாந்தன் எழுதுகிறார். 

இதுவொன்றும் ஆயுதப் போராட்ட காலம் அல்ல. தமிழினம் மிகமோசமான பின்னடைவுகளோடு இருந்தாலும் சமூக பொருளாதார ரீதியில் அதன் விழுமியங்களின் வழியான முன்னோக்கிய பயணத்தை மெல்ல மேற்கொண்டிருக்கின்றது. யார் விரும்பினாலும் இல்லையென்றாலும் ஜனநாயக அரசியல் (தேர்தல் அரசியல் என்று வைத்துக் கொண்டாலும் கூட) கருத்து மோதல்களினால் வலுப்பெறுவது. எதிர்க்கருத்துக்கள் இல்லையென்றால், ஜனநாயக அரசியல் செத்துவிடும். எதிர்க்கருத்துக்களுக்கு அச்சம் கொள்வோர், ஏதேச்சதிகார நிலைப்பாடுகளின் புள்ளியில் நிற்பவர்கள். அவர்களினால் சில சிறு குழுக்கள் அல்லது தனி நபர்கள் வேண்டுமானால் ஆதாயம் அடையலாம். மாறாக, எந்தவொரு மக்கள் கூட்டமும் நன்மை அடையாது. ஏதேச்சதிகாரம் என்பது எப்போதுமே பேரழிவின் அடையாளம். எதிர்க்கருத்துக்களை ஏதிர்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாமல், எதிர்க்கருத்தாளர்களை நோக்கி வன்மவாதிகள், அறிவிலிகள் என்று அடையாளப்படுத்துவதற்கான துணிவு, எந்தவொரு ஜனநாயகவாதிக்கும் வராது. 

இன்னொரு பக்கம், இந்த அரசியல் ஆய்வாளர்கள் (எ) பத்தியாளர்கள், குரு சிஷ்ய மரபில் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அரசியல் கருத்துக்களை பேசுவதற்கும் எழுதுவதற்கும் ஒரு தகுதி வேண்டும். அந்தத் தகுதி, குரு ஒருவரிடம் ஆசிபெற்றுவதன் ஊடாக வர வேண்டும். அப்படியான நெறிமுறைகளுக்கு அப்பால், நின்று கருத்து வெளியிடுவோர், அரசியல் பேசுவதற்கு தகுதியற்றவர்கள் என்ற எண்ணம்  அவர்களிடத்தில் உண்டு. அத்தோடு, இந்த ஆய்வாளர்கள், இன்னமும் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னாலேயே இருக்கிறார்கள். இப்போது 2024, சமூக ஊடகங்களும் இலத்திரனியல் ஊடக வெளியும் வியாபித்திருக்கின்ற காலம். ஒவ்வொரு மணித்துளியும் ஊடக வெளி தன்னைப் புதுப்பித்துக் கொள்கின்றது. கடந்த காலங்களில் நீண்ட கட்டுரைகளை எழுதி கருத்துச் சொல்லிக் கொண்டிருந்த விடயங்களை, இன்றைக்கு சில வரிகளுக்குள்ளும் எழுதியும் பேசியும் செல்லக் கூடிய நிலை வந்துவிட்டது.  நீட்டி முழக்கி, தங்களின் தனிப்பட்ட மேதாவிலாசங்களைக் காட்டுவதற்கான களத்தினை இப்போது யாரும் கொண்டாடுவதில்லை. அதற்கு யாருக்கும் நேரமும் இல்லை. ஒவ்வொரு நொடியும் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய போட்டி உலகு இது. அதனை புரிந்து கொள்வதற்கு, குரு சிஷ்ய மரபினருக்கு பிரச்சினை இருக்கலாம். அத்தோடு, இவர்களுக்கு தங்களை எல்லாரையும் விட உயர்ந்தவர்களாக சிந்திக்கின்ற ஒருவகை தன்முனைப்பு மனநிலையும் உண்டு. அதனால்தான், கருத்துச் சொல்வதற்கு தகுதி வேண்டும் என்ற விடயத்தைக் குறித்து அக்கறை கொள்கிறார்கள். 

குரு சிஷ்ய மரபு, அரசியல் ஆய்வாளர்கள் முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னராக கடந்த 15 ஆண்டுகளில் ஆற்றிய பணி என்ன என்று நோக்கினால் போதும், அவர்களின் அரசியல் ஆய்வு திறனைக் குறித்து அறிந்து கொள்ளலாம். 2010க்குப் பின்னரான அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மாற்றுத் தரப்பாக யாரை முன்னிறுத்தலாம் என்பதுதான், அவர்களின் பிரதான அரசியலாக இருந்தது. 2015 வரையில், கூட்டமைப்புக்கு மாற்றாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை முன்னிறுத்தியவர்கள். அதன் பின்னராக சி.வி.விக்னேஸ்வரனை தமிழின மீட்பராக அறிவித்தார்கள். அவருக்காக தமிழ் மக்கள் பேரவையை உருவாக்கிக் கொடுத்தார்கள். விக்னேஸ்வரனுக்கு அரசியல் பத்திகள் மூலம் ஜனவசியம் பூசினார்கள். இறுதியில், விக்னேஸ்வரன் தனிக்கட்சி ஆரம்பித்து, உதிரி வாக்குகளினால் பாராளுமன்ற உறுப்பினர் ஆனார். இதன்பின்னராக போக்கிடமின்றி இருந்த, ஆய்வாளர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது தமிழ்ப் பொது வேட்பாளர் என்கிற விடயம். அது தொடர்பிலும் மக்களை தெளிவு படுத்தும் ஆற்றல் இருக்கின்றதா என்றால், அதுவும் இல்லை. மாறாக, அரசியல் கட்சித் தலைவர்களை குற்றம் சொல்வதோடு கடந்துவிடுகிறார்கள். கடந்த காலத்தில், இந்த ஆய்வாளர்களை பெரும் அரசியல் அறிஞர்களாக கருதி கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.விக்னேஸ்வரன், சிவஞானம் சிறீதரன் உள்ளிட்டவர்கள் ஆலோசனை கேட்டு வந்திருக்கிறார்கள். இந்த அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களில் இழைத்த அரசியல் தவறுகளை, ஆலோசனை வழங்கிய தரப்பினர் எடுத்துக் கொள்ளாமல் தப்பித்தது ஏன்? 

முள்ளிவாய்கால் முடிவுக்குப் பின்னரான அரசியலில் அரசியல் தலைவர்களின் தவறுகளை மாத்திரம் காட்டி குளிர்காய்ந்துவிட முடியாது. அவர்களின் முடிவுகளுக்குப் பின்னால் இருந்தவர்களையும் அடையாளம் காண வேண்டும். குறிப்பாக, நம்பிக்கையோடு மெல்ல விரிந்து வந்த தமிழ் சிவில் சமூக வெளியை, இந்த ஆய்வாளர்கள் கூட்டம் பல பல பெயர்களில் அமைப்புக்கள், பேரவைகள் என்று தொடங்கி சிதை்தார்கள். இன்றைக்கு, தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் எந்தவொரு சிவில் அமைப்புத் தோன்றினாலும், ஆய்வு மையங்கள் தொடர்பில் சிந்தித்தாலும் அவை தொடர்பில் ஆரம்பத்திலேயே மக்கள் சந்தேகம் கொள்ளும் சூழலே இருக்கின்றது. இந்த முன்னெடுப்புக்களின் பின்னால் யார் இருக்கிறார்கள்? யாரை பாராளுமன்றத்துக்கு அனுப்புவதற்காக இந்த அமைப்பு? எந்த தூதுவராலயத்தின் செயற்றிட்டத்தை முன்னெடுக்க இந்த ஆய்வு மையம்? என்பதெல்லாம் இயல்பாக எழும் சந்தேகங்கள். இந்தச் சூழலை, அரசியல்வாதிகள் உருவாக்கவில்லை. மாறாக, தங்களை அரசியல் ஆய்வாளர்களாகவும், புலமையாளர்களாகவும் முன்னிறுத்திய தரப்பினர் உருவாக்கியது. ஒரு அமைப்பை ஆரம்பிப்பது, பின்னர் அதனைக் கைவிட்டு இன்னொரு அமைப்பை ஆரம்பிப்பது என்பது தமிழ் சிவில் வெளியில் நிகழும் நாளாந்த நடவடிக்கை. இவற்றுக்கு இருப்பவர்கள் எல்லோரும் ஒரே தரப்பினர். அதிலும், குரு சிஷ்ய மரபினர். இவர்கள், தங்களின் கடந்த கால அரசியல் - சமூக தவறுகளை ஒருபோதும் சுய விமர்சனம் செய்வதில்லை.மாறாக, எதிர்க்கருத்துக்களை வெளியிட்டதும் பதற்றமடைந்து, அடையாளப்படுத்தும் அரசியலுக்குள் செல்கிறார்கள்.

பொது வேட்பாளருக்கான முடிவு

பொது வேட்பாளர் என்கிற விடயத்தை அரசியல் கட்சிகளிடம் திணித்து, இணங்கப் பண்ண வேண்டும் என்ற அரசியல் நிலைக்குப் பின்னால், தமிழ் சமூக கட்டமைப்புக்களின் சிதைவு வெளிப்படையாக தெரிகின்றது. தமிழ்த் தேசிய அரசியலின் தூண்களின் ஒன்றாக அரசியல் கட்சிகளும் இருக்கின்றன. ஆனால், அந்தக் கட்சிகளின் செயற்பாடுகள் கேள்விக்குரியதாக மாறும் போது, தமிழ்த் தேசியம் சிவில் கட்டமைப்புக்களினூடாக தன்னுடைய அரசியலை நகர்த்தியிருக்கின்றது. ஆயுதப் போராட்டத்தின் ஆரம்பமும் நிலைபெறுகையும்கூட அப்படித்தான் நிகழ்ந்தது. அது கிட்டத்தட்ட மூன்று தசாப்த காலம் அரசியல் கட்சிகளை அவ்வளவுக்கு தமிழ்த் தேசிய போராட்டத்துக்குள் அண்ட விடவில்லை. அப்படியான நிலையில், தமிழ் மக்களின் சமூகக் கட்டமைப்புக்களை சீர் செய்து, கட்சிகளைத் தாண்டிய நிலைபெறுகை தொடர்பிலான முயற்சிகளை ஆய்வாளர்களோ, புலமையாளர்களோ இதுவரை முன்னெடுக்கவில்லை. அவர்கள் எப்போதுமே எல்லா விடயங்களுக்கும் அரசியல் கட்சிகளையே பிடித்துத் தொங்குகிறார்கள். அந்த நிலை மாறாத வரையில், காலத்தைக் கடத்தும் காட்சிகள் ஒவ்வோரு கால கட்டத்திலும் மேல் எழுந்து கீழே விழும். தமிழ்ப் பொது வேட்பாளர் விடயமும் அப்படியான ஒன்றுதான்.

எந்தவொரு அதிர்வையும் உண்டுபண்ண முடியாத, சில தனிநபர்களின் சுயநல நிகழ்ச்சி நிரலுக்காக முன்னெடுக்கப்படும் தமிழ்ப் பொது வேட்பாளர் என்கிற விடயத்துக்காக தமிழ்த் தேசிய அரசியலும், அதுசார் ஊடக வெளியும் அதிக நேரத்தை செலவிடுகின்றது என்ற ஆதங்கம் இந்தப் பத்தியாளருக்கு உண்டு. தமிழ்த் தேசியப் பரப்பின் முதன்மைக் கட்சியாக இன்றும் இருக்கும் தமிழரசுக் கட்சி, பொது வேட்பாளர் தொடர்பில் தன்னுடைய இறுதி முடிவை, இன்றே அறிவித்து விடயத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையென்றால், பேசுவதற்கு வேறு முக்கிய விடயங்கள் இல்லை என்பதுபோல, பொது வேட்பாளர், பொது வேட்பாளர் என்று தொடர்ந்தும் அரசியல் வெளியையும் ஊடக வெளியையும் நிரப்பி, பல முக்கிய விடயங்கள் புறந்தள்ளப்படும் சூழல் நீடிக்கும். அதற்கு முதலில் முடிவு கட்டி, தமிழ்த் தேசிய அரசியல் வெளியை முக்கியமான பிரச்சினைகளின் பக்கத்துக்கு திருப்பி விட வேண்டும். 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction