free website hit counter

பொது வேட்பாளர் அடையாளத்தோடு கரையேற முயற்சிக்கும் விக்கி!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
வாக்கு அரசியலை முதன்மைத் தெரிவாகக் கொண்டவர்களில் அநேகர், அடுத்தவர் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்கும் உத்தியை அரசியல் செல்நெறியாகக் கொண்டவர்கள். அவர்களினால் சமூகத்துக்கு எந்த நன்மையும் எந்தக் காலத்திலும் ஏற்படுவதில்லை. மாறாக, அவர்கள் தங்களின் சுயநலனுக்கான ஓட்டத்தில் குறியாக இருப்பார்கள். அதற்காக யாரையும் எந்த நேரத்திலும் முதுகில் குத்துவதற்கும் தயங்க மாட்டார்கள். அப்படியானவர்கள், அர்ப்பணிப்போடு எழுந்த தமிழ்த் தேசிய அரசியலையும் ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்பதுதான், பெரும் சாபக்கேடு. 
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கான தியாகத்தை தங்களின் சுயநல அரசியலுக்காக காட்சிப் பொருளாக்கி விற்று மக்களை ஏமாற்றும் நபர்கள், இன்று அரசியலில் முதன்மை இடங்களை அடைய முயல்கிறார்கள். அவர்கள், அதிக நேரங்களில் தலைவர் பிரபாகரனைத் தாண்டி தாங்கள் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது போல பேசுகிறார்கள். ஆனால், விடுதலைப் புலிகள் போராட்டக்களத்தில் கோலொச்சிய சந்தர்ப்பத்தில், அந்தப் போராட்டத்தை புறக்கணித்து ஓடுவதிலேயே குறியாக இருந்திருக்கிறார்கள். அதுபோல், தமிழ்த் தேசியக் கட்சிகளும் இயக்கங்களும் மக்களோடு மக்களாக நின்று போராடிச் சேர்த்த பெயரைக் கொண்டு அரசியல் அதிகாரப் பதவிகளில் அமர்ந்துவிட்ட சிலர், மீண்டும் மீண்டும் அடுத்தவர்களின் உழைப்பைக் கொண்டு அதிகாரத்தில் அமரும் உத்தியை தெரிவாகக் கொள்கிறார்கள். அதில்,  வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முதலிடத்தில் இருக்கிறார். இப்போது, மீண்டும் அவர், ஜனாதிபதி தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தைப் பிடித்துக் கொண்டு அதில், எப்படி தனிப்பட்ட ஆதாயத்தை அடையலாம் என்று அலைந்து கொண்டிருக்கிறார்.

நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற விக்னேஸ்வரன், கொலை மற்றும் பாலியல் குற்றங்களுக்காக இந்தியாவில் தண்டிக்கப்பட்ட பிரேமனந்தாவின் சீடராக இருந்து தன்னுடைய காலத்தைக் கழித்து வந்தார். அதுபோல, சமூகத்தில் அந்தஸ்துள்ள ஓய்வூதியர்களைத் தேடி அலையும் கம்பன் கழகத்தின் முக்கிய விருந்தினராகவும் அவர் இருந்து வந்தார். இந்த விடயங்கள் தாண்டி, விக்னேஸ்வரன் எந்தவொரு சமூகத் தொண்டையும் ஆற்றியதாக வரலாறு இல்லை. வடக்கு மாகாண சபைத் தேர்தல், இந்தியாவின் அழுத்தங்களை அடுத்து 2013ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்தல் நடைபெற்ற போது, முதலமைச்சராக மேல்தட்டு முகமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனுக்கு தேவைப்பட்டது. அந்தக் கட்டத்தை கம்பன் கழகமும், கொழும்பு வாழ் தமிழ் வர்த்தகர்களும், சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனக -ஈஸ்வரன் போன்றவர்களும் விக்னேஸ்வரனைக் கொண்டு பிரதியிட்டார்கள். கம்பன் கழகத்தினர், விக்னேஸ்வரனை வீராதி வீரராக காட்டி பல கட்டுரைகளையெல்லாம் எழுதித் தள்ளினார்கள். இந்த சமூக அந்தஸ்து - மேல்தட்டு வர்க்கத்தினர் இணைந்து, சம்பந்தனின் எதிர்பார்ப்பாக விக்னேஸ்வரனை முன்னிறுத்தி வடக்கு மாகாண தமிழ் மக்களின் தலையில் கட்டினார்கள். தமிழரசுக் கட்சி மற்றும் கூட்டமைப்பினரின்  எதிர்ப்புக்களை மீறி விக்னேஸ்வரனை, சம்பந்தனும், அவருக்குத் துணையாக நின்று எம்.ஏ.சுமந்திரனும் யாழ்ப்பாணம் அழைத்து வந்து, இலகுவாக முதலமைச்சராக்கினார்கள். விக்னேஸ்வரனைப் பொறுத்தளவில் அவருக்கு அரசியல் அனுபவம் என்பது சுத்தமாக இல்லை. நீதித்துறையில் நீண்ட காலம் பணியாற்றி ஓய்வுபெற்றவர், மூன்று மொழிகளும் அறிந்தவர் என்ற தகுதியைத் தாண்டி அவர், எப்படி தமிழ்த் தேசிய அரசியலில் முதன்மைத் தெரிவாக முன்மொழியப்பட்டார் என்பதை, இன்று வரையில் சம்பந்தனும் சுமந்திரனும் கூறவேயில்லை. ஆனால், விக்னேஸ்வரனுக்காக பல கட்டுரைகளை எழுதி பிம்பக் கட்டமைப்புச் செய்த கம்பன் கழகம், கொஞ்சக் காலத்திலேயே, தங்களின் கடந்த கால செயலுக்காக அழுது வடிக்கத் தொடங்கிவிட்டது. 

வடக்கு முதலமைச்சரான காலம் முதல் விக்னேஸ்வரனின் எதிர்பார்ப்பு என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் சம்பந்தன் வகித்து வந்த நிலையைக் குறித்ததானது மட்டுமே. எப்படியாவது, சம்பந்தனுக்கு கிடைக்கும் அரசியல் அந்தஸ்தும் முடிவெடுக்கும் அதிகாரமும் தனக்கும் வேண்டுமென்று அங்கலாய்ந்தார். ஆனால், சம்பந்தனுக்கு என்று நீண்ட அரசியல் வரலாறு உண்டு. அவர், தேர்தல்களில் நின்று வென்றும் தோற்றும் இருக்கிறார். அவர், தன்னுடைய அரசியல் நிலைப்பாடுகளோடு ஒத்துழைக்காதவர்கள் என்று கருதியவர்களுடன்கூட பேசுவதற்கு தயாராக இருந்த அரசியலைத் தெரிவாக் கொண்டவர். விடுதலைப் புலிகளின் கருத்தியலுக்கு நேர் எதிராக நின்று, 2000களில் புலிகளின் நிலைப்பாடுகளின் பக்கத்திற்கு வந்து, புலிகளினாலேயே, கூட்டமைப்பின் தலைவராக ஏற்கப்பட்டவர். புலிகளின் காலத்துக்குப் பின்னரும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அனைத்தும் சம்பந்தனை எதிர்த்துக் கேள்வி எழுப்புவதற்கு தயக்கம் கொள்ளும் அளவுக்கான அரசியல் ஆளுமையாக தன்னை நிலை நிறுத்தியவர். அப்படிப்பட்ட நீண்ட அரசியலைக் கொண்ட சம்பந்தனுக்குக் கிடைக்கும் அரசியல் அந்தஸ்தினை, அரசியலுக்கு திடீரென்று அழைத்து வரப்பட்டு பதவியில் அமர்த்தப்பட்ட விக்னேஸ்வரனும் எதிர்பார்த்ததுதான், சிறுபிள்ளைத்தனமானது. அதன்பின்னராக காலத்தில் அவர் செய்தது முழுவதும் முன்பள்ளி மாணவருக்கான அறிவுள்ள அரசியலும், அதிகாரத்துக்காக அடுத்தவர் உழைப்பை அபகரிக்கும் முயற்சிகளும் மாத்திரமே.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் என்ற அடையாளம் கிட்டத்தட்ட தமிழ்த் தேசிய அரசியலில் பொது வேட்பாளர் என்ற வகையில் அமைந்திருந்தது. ஆனால், விக்னேஸ்வரன் மாகாண சபையை ஒழுங்காக நடத்தாமல், தீர்மானங்களை இயற்றும் சபையாக மாத்திரம் நடத்தத் தலைப்பட்டார். அத்தோடு, முதலமைச்சர் என்ற பதவி நிலையினைக் கொண்டு, தனக்கு என்றொரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கும் திட்டங்களில் குறியாக இருந்தார். அந்தக் கட்டத்தில்தான், தமிழ் மக்கள் பேரவை என்ற பெயரில் தமிழ் சிவில் சமூக அமையத்தின் நீண்ட கால காத்திருப்பின் பேரில், அமைப்பொன்று தோற்றம் பெற்றது. அந்த அமைப்பின் நோக்கம் தெளிவானது, அதாவது, தமிழ்த் தேசிய அரசியலில் சம்பந்தனுக்கு மாற்றான தலைவரைத் தேடிக் கண்டடைவது. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை புலம்பெயர் தேசத்திலுள்ள சில கட்டமைப்புக்கள் மாற்றுத் தலைவராக உணர்ந்தாலும், அவரோடு தமிழ் சிவில் சமூக அமையம் இணங்கிச் செயற்பட்டாலும் சம்பந்தனுக்கு மாற்றான தலைவராக கஜேந்திரகுமாரினால் தாக்குப் பிடிக்க முடியாது என்ற கள யதார்த்தம் முகத்தில் அறைந்தது. அந்தத் தருணத்தில்தான், சம்பந்தனின் நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டு அரங்கிற்கு வந்த விக்னேஸ்வரனை, மாற்றுத் தலைமைக்கான தெரிவாக தமிழ் மக்கள் பேரவையின் மூல கர்த்தாக்கள் முன்னிறுத்தினார்கள். அவர்கள், விக்னேஸ்வரன்தான் மாற்றுத் தலைவர் என்று கஜேந்திரகுமாரைக் கூட நம்ப வைத்திருந்தார்கள்.ஆனால், சிவில் சமூக அமையத்திடமோ, அதன்பின்னராக பெயர் மாற்றம் பெற்று வந்த தமிழ் மக்கள் பேரவையிடமோ களத்தில் இறங்கி  வேலை செய்வதற்கான அர்ப்பணிப்பு ஏதும் இல்லை. அந்த இடத்தை, ஈபிஆர்எல்எப், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, புளொட் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்டு நிரம்பினார்கள். இந்தக் கட்டமைப்பின் தலைவராக விக்னேஸ்வரன் அமர்த்தப்பட்டதும், அவர் தன்னை சம்பந்தனாக உணர்ந்தார். அவரை அன்று சுற்றியிருந்த வைத்தியர்கள், புலமையாளர்கள் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள் என்று தங்களை முன்னிறுத்தும் தரப்பினரும், விக்னேஸ்வரனை சுற்றி ஒளிவட்டங்களை வரைந்து, தலைவர் பிரபாகரனுக்கு பின்னரான தமிழ்த் தேசியக் காப்பாளன் என்று முன்னிறுத்தின. ஆனால், இந்தப் படங்காட்டல்கள் எல்லாமும் சில மாதங்களுக்குள் காணாமற்போயின. ஏனெனில், விக்னேஸ்வரன் யாரோடும் இணக்கமாக வேலை செய்வதற்கு தயாராக இல்லாதவர். தான் நினைத்தது நடக்கவில்லை என்றால், யாரையும் விலக்கிவிடும் எண்ணத்தினைக் கொண்டவர். அந்த மனநிலையினால், 'எழுக தமிழ்' தொடங்கி பேரெழுச்சியோடு தமிழரசுக் கட்சிக்கு அச்சுறுத்தலை விடுத்த தமிழ் மக்கள் பேரவை கலகலத்துப் போனது. அதிலிருந்து கஜேந்திரகுமாரின் முன்னணி வெளியேறியது. சித்தார்த்தன் கூட்டமைப்பை விட்டு விலக தயாராக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில் போக்கிடமின்றி இருந்த சுரேஷ் பிரேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப்பும், தமிழரசுக் கட்சிக்குள் இருந்து வெளியேறிய அருந்தவபாலன் போன்வர்களும் விக்னேஸ்வரனைக் காப்பாற்றினார்கள். அதனால்தான், அவரினால் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உதிரி வாக்குகளைக் கொண்டு வெற்றிபெற முடிந்தது. 

இன்னொரு தேர்தலென்று வந்தால், விக்னேஸ்வரனால் வெற்றிபெற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். அந்தக் கட்டத்தில்தான், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முன்னிறுத்தியது. எப்படிக் கரையேறுவது என்று காத்திருந்த விக்னேஸ்வரன், பொது வேட்பாளர் என்ற கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அதன்மூலம், அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெறும் ஏற்பாடுகளின் போக்கில் இப்போது செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற ஏற்பாடு ரணில் - ராஜபக்ஷக்கள் கூட்டினை பெற்றிபெற வைக்கும் முயற்சி என்று இந்தப் பத்தியாளர் ஏற்கனவே எழுதியிருக்கிறார். அது தற்போதைய சூழலில் தமிழ் மக்களின் தெரிவாக இருக்கவும் போதில்லை. அப்படியான நிலையில், அது ஒருசில தரப்பினரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றும் திட்டமாகவே கொள்ள முடியும். அந்தக் கட்டத்தை இப்போது, விக்னேஸ்வரன் தெளிவாக அபகரித்து முன்னெடுக்கிறார். யாழ்ப்பாணத்தில் சிலரினால், ஆரம்பிக்கப்பட்ட மக்கள் மனு என்ற கட்டமைப்பு பொது வேட்பாளர் விடயத்தை முன்னிறுத்துவதில் குறியாக இருக்கின்றது. அந்தக் கட்டமைப்பு பொருத்தமான பொது வேட்பாளரை  தேடிக்கொண்டிருந்தது. இந்த நிலையைக் பிடித்துக் கொண்ட விக்னேஸ்வரன், தானே பொருத்தமான பொது வேட்பாளர் என்று இப்போது முன்வந்திருக்கிறார். அவரின் இந்த நடவடிக்கைகளினால் மக்கள் மனு குழுவினர், விடயத்தை விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாத கட்டத்தை அடைந்திருக்கிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை விக்னேஸ்வரனின் அழைப்பில் பொது வேட்பாளர் விடயத்தைக் கையாளுவதற்கான குழுவும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்தக் கூட்டத்தில் விக்னேஸ்வரனைத் தாண்டி எந்த அரசியல்வாதியும் கலந்து கொள்ளவில்லை. அது, விக்னேஸ்வரன் தொடர்பில் அவர்கள் கடந்த காலத்தில் பெற்ற  அனுபவங்களின் வழி வந்ததாக இருக்கலாம். 

விக்னேஸ்வரன் தன்னை ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னிறுத்தி, அதனூடாக அடுத்த பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சேகரிப்பைச் செய்ய முடியும் என்று நம்புகிறார். ஆனால், இந்தப் பொது வேட்பாளர் விடயம் தமிழ்ச் சூழலில் எந்தவொரு அதிர்வையும் ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக, சில கட்சியினரும் குழுக்களும் கூடிக் கதைத்து பிரிந்து போவதோடு முடிந்து போகும். ஏனெனில், தமிழ் மக்களின் மனங்களை அறிந்து கொள்ளாமல், யாரோ வெளித்தரப்புக்களின் தேவைகளை நிறைவேற்ற முன்னெடுக்கப்படும் நாடகங்களாகவே இவை பார்க்கப்படும். அதனால், விக்னேஸ்வரனின் கனவும் பலிப்பதற்கு வாய்ப்புக்கள் இல்லை. 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction