இஸ்ரேல்-காசா இடையேயான போர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன் மொழிந்த 20 அம்சங்கள் கொண்ட ஒப்பந்தத்தால் முடிவுக்கு வந்துள்ளது.
இருதரப்பிலும் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்து உள்ளனர்.டிரம்ப் அறிவித்த காசா அமைதி ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக எகிப்தில் கையெழுத்தாகி உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையில், உலகத் தலைவர்கள் ஆதரவுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி தலைமையில் நடைபெறும் காசா அமைதி மாநாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்பதற்காக டிரம்ப் எகிப்து வந்து சேர்ந்தார். இந்த மாநாட்டில் ஐநா பொதுச் செயலாளர் குட்டரெஸ் மற்றும் 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள், அவர்கள் சார்பில் அனுப்பப்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை இணை மந்திரி கிர்த்தி வர்தன் சிங் கலந்து கொண்டு இருக்கிறார். உச்சி மாநாட்டின் போது எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசியை சந்தித்து பேசினார்.
முன்னதாக இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பேசியதாவது:-
இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் வேதனை முடிவுக்கு வந்துள்ளது. அமைதியை விரும்பிய மக்களுக்கு ஒப்பந்தம் உறுதுணையாக இருக்கும். புனித பூமியான ஜெருசலத்தில் அமைதி நிலை நாட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் இருந்த பயங்கரவாதம் அழிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தில் இருந்து திரும்ப பாலஸ்தீனியர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. பெருமைமிக்க, பொறுப்பான நாடுகளின் புதிய கூட்டணி உருவாகிறது. காசாவின் மறுகட்டமைப்புக்கு உதவ முன் வந்த அரபு நாடுகளுக்கு நன்றி. நீண்ட கடினமான போர் முடிவுக்கு வந்துள்ளது. காசா ராணுவ மயமாக்கபப்ட்டு ஹமாஸ் நிராயுதபாணியாக்கப்படும். நான் பதவியேற்ற பின் அமெரிக்கா சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.