free website hit counter

கூட்டமைப்பு கைக்கூலிகளின் கூட்டு ஆகிறதா? (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ‘ரணில்- ராஜபக்ஷ’ கூட்டிடம் விலை போய்விட்டதாக புகைந்து கொண்டிருந்த சந்தேகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எண்ணைய் ஊற்றியிருக்கிறார். சர்வகட்சி அரசாங்கத்தினை அமைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளை அழைத்து ரணில் சந்தித்து வருகிறார். அதன் ஒரு கட்டமாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை கடந்த வாரம் நிகழ்த்தினார்.

இதன்போதே, ஜனாதிபதித் தெரிவின் போது, டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிப்பது என்ற கூட்டமைப்பின் தீர்மானத்தினை மீறி சில பாராளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்தாக கூறியிருக்கிறார். இதனை, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் ரணிலிடம் மறுத்த போதும், அவர் அதனை நிராகரித்து தமிழ் மக்களின் நலனுக்காக சில கூட்டமைப்பு உறுப்பினர்கள் தனக்கு வாக்களித்ததாகவும், அவர்கள் யாரென்பது தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜனாதிபதித் தெரிவுக்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் என்ன தீர்மானத்தினை எடுப்பது என்பது தொடர்பில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, ரணிலுக்கு வாக்களிக்க முடியாது என்ற ஒரே நிலைப்பாட்டில் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இருந்தார்கள். சில பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாது புறக்கணிப்போம் என்ற நிலைப்பாட்டை முன்வைத்தார்கள். ஆனால், நாட்டு மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து ராஜபக்ஷக்கள் இல்லாத ஆட்சிக்கான நிலைப்பாடு எனும் நோக்கில் டளஸை ஆதரிப்பது என்று கூட்டமைப்பு இறுதியில் தீர்மானித்தது. அதனை டளஸ் – சஜித் பிரேமதாச கூட்டோடு இணைந்து படம் எடுத்து ஊடகங்களிடம் அறிவிக்கவும் செய்தது. ஆனால், அந்தப் படங்கள் வெளிவந்த சில நிமிடங்களிலேயே ரணிலுக்கு ஆதரவளிக்கும் நிலைப்பாட்டில், ரணில் அணியை கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியின் தலைவர் ஒருவரும் அவரின் கட்சி உறுப்பினர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியமை வெளிவந்தது.

ஜனாதிபதித் தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படும் ஏற்பாட்டை தமக்கு சாதகமாகக் பயன்படுத்திக் கொண்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களும் அங்கம் வகிப்பது, வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு முன்னாலேயே தெரியவந்துவிட்டது. கூட்டமைப்பின் நிலைப்பாட்டை மீறி, அதன் உறுப்பினர்கள் சிலர் வாக்களிக்கப் போவதாக ஊடகங்களில் செய்தி பரவியதும், கூட்டமைப்பின் தலைமை அஞ்சத் தொடங்கியது. ஆனாலும், அவ்வாறான நிலையொன்று இல்லை என காட்டிக் கொண்டது. வாக்கெடுப்பு முடிந்து, ரணில் வெற்றிபெற்றதும் கூட்டமைப்பின் தீர்மானத்தினை அதனை கூடி எடுத்த உறுப்பினர்களில் குறைந்தது நான்கு பேராவது மதிக்காமல், ரணிலை ஆதரித்து வாக்களித்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் மேலும் வலுத்தது. அதனை, ரணில் அணியின் ஹரீன் பெர்னாண்டோ வெளிப்படுத்தினார். இதன் தொடர்ச்சியைத்தான் ரணில், கூட்டமைப்பினருடனான கடந்த வாரச் சந்திப்பின் போதும் செய்தார்.

தமிழ் மக்களின் பிரதான கட்சியாக ஒரு கட்டம் வரையில் தன்னை நிரூபித்து வந்த கூட்டமைப்பு, கடந்த சில ஆண்டுகளாக மிக மோசமான தரகு அரசியலை செய்வதாக குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் உண்டு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட் என்று எந்தக் கட்சியும் எந்தப் பாகுபாடும் இன்றி, தரகு அரசியலின் பங்காளிகளாக மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் அரசியலை கூச்சமின்றி செய்து வருகிறார்கள். அதுதான், கடந்த பொதுத் தேர்தலில் மிக மோசமான பின்னடைவைச் சந்திக்கவும் காரணம். தேர்தல் முடிவுகளைப் பார்த்தாவது, கூட்டமைப்பின் தலைவர்கள், தங்களைத் திருத்திக் கொண்டு மக்களை நோக்கிய அரசியலுக்கு தங்களைத் தயார்ப்படுத்துவார்கள் என்று நம்பினால், அதில் அவர்களே நாளாந்தம் மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கூட்டமைப்பு இரா.சம்பந்தனின் காலத்துக்குப் பின்னரான காலத்தில் தமிழரசுக் கட்சி என்கிற ஒற்றைக் கட்சிக்குள் சுருங்கிவிடும் கட்டமும் வந்துவிட்டது. மாறாக, பங்காளிக் கட்சிகளுக்கு இடையில், ஒரு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றமை தொடர்பிலான ஒழுக்கம் ஏதும் இல்லை. அதனை, ஆரம்பித்து வைத்ததில் தமிழரசுக் கட்சியே பிரதான பங்கை வகித்தது. ஒரே கூட்டணிக்கு இருந்து கொண்டே பங்காளிக் கட்சியின் உறுப்பினர்களை திருடி தங்களின் கட்சி வேட்பாளர்களாக அறிவித்தது முதல், தமிழரசுக் கட்சி கசடுத்தனமான அரசியலை செய்து வந்திருக்கிறது. அதனை, மாவை சேனாதிராஜா தனது அரசியல் நெறியாகவே முன்னெடுத்து வந்திருக்கிறார். தங்களை விட்டால் யாரும் இல்லை என்ற நினைப்பில் தமிழரசுக் கட்சி கடந்த காலங்களில் ஆடிய ஆட்டத்திற்கு அந்தக் கட்சி சற்று பின்னடைவைச் சந்தித்ததுமே பங்காளிக் கட்சிகள் ஆட்டங்காட்டத் தொடங்கியிருக்கின்றன.

இன்றைக்கு, தமிழரசுக் கட்சி ஒரு பக்கத்திலும் ரெலொவும் புளொட்டும் இன்னொரு பக்கத்திலும் நின்று கூட்டமைப்பின் அரசியலைச் செய்கின்றன. அதிலும், தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களுக்குள்ளேயே குறைந்தது மூன்று அணி இருக்கின்றது. இப்படியான நிலையில், கூட்டமைப்பினை மக்களை நோக்கி மீண்டும் நகர்த்திச் செய்வது என்பது எவ்வளவு அபத்தமான நம்பிக்கை. ரணில் – ராஜபக்ஷ கூட்டினை ஆதரித்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் அதற்கான சன்மானங்களை பெற்றுக் கொண்டதான தகவல் மக்களிடம் பரவியிருக்கின்றது. இந்த நிலையில், ஒவ்வொரு தரப்பினரும் தங்களுக்கு வெள்ளையடித்துக் கொள்ளும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் தனக்கு வாக்களித்ததாக அவர்களின் முன்னாலேயே ரணில் கூறும்போது, அமைதியாக இருந்துவிட்டு வந்த சிலர், இன்றைக்கு ஒலிவாங்கிகளுக்கு முன்னால் நின்று தாங்கள் ‘புலிகளின் வாரிசுகள்’ என்ற தோரணையில் முழங்குவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கின்றது.

சமாதானப் பேச்சுவார்த்தை எனும் போர்வையில் விடுதலைப் புலிகளை ரணில் துண்டாடினார். அதுதான், புலிகளை ராஜபக்ஷக்கள் அழித்து ஒழிக்க காரணமானது எனும் உணர்நிலையொன்று தமிழ் மக்கள் மத்தியில் உண்டு. அதனால்தான் ரணிலை நரி என்ற அடையாளப்படுத்தல் பலம்பெற்றது. கூட்டமைப்பினை பிரித்தாளுவதற்காக ரணில் இப்போது, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் மத்தியில் எண்ணெய் ஊற்றி அனுப்பியிருக்கிறார் என்ற வாதம் வைக்கப்படுகின்றது. பௌத்த சிங்கள அடிப்படைவாத அரசியலில் ஐம்பது ஆண்டுகளாக பயணிக்கும் ரணிலுக்கு கூட்டமைப்பினை பிரித்தாளும் தேவை இருக்கிறது. ஏனெனில், தமிழ் மக்கள் ஓரணியில் திரள்வது என்பது எப்போதுமே பௌத்த சிங்கள பேரினவாதத்துக்கு சிக்கலானது. அப்படியான நிலையில், ரணில் கூட்டமைப்பை பிரித்தாள நினைப்பார் என்பது தர்க்கரீதியிலானது. ஆனால், ரணில், அதனைச் செய்வதற்காக கூட்டமைப்பினருடனான சந்திப்பை பயன்படுத்திய போது, கலந்து கொண்ட உறுப்பினர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அமைதி காத்தது ஏன் என்பதுதான் முக்கிய கேள்வி. அத்தோடு, ரணில் பிரித்தாளும் கட்டத்தை முன்னெடுக்க முன்னரேயே கூட்டமைப்பு பல முனைகளில் துருத்திக் கொண்டு நிற்கத் தொடங்கிவிட்டது. அப்படியான நிலையில், ரணிலின் தந்திரத்துக்கு கூட்டமைப்பு ஆளாகக் கூடாது என்று மேம்போக்காக பேசிக் கடக்க முடியாது.

கூட்டமைப்பின் தலைவர்களுக்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் தங்களுக்குள் யார் யார் விலை போனார்கள் என்பது தெளிவாக தெரியும். ஆனால், அதனை அவர்கள் முழுமையாக வெளிப்படுத்தவோ, கூட்டமைப்புக்குள் இருக்கும் கறுப்பு ஆடுகளை களை எடுக்கவோ விரும்பமாட்டார்கள். ஏனெனில், கூட்டமைப்பின் தலைவர்களில் பலரும் ஒவ்வொரு கட்டத்தில் கறுப்பு ஆடுகளாக வலம் வருபவர்கள். தற்போதைய கறுப்பு ஆடுகளை பகிரங்கப்படுத்தினால், பகிரங்கமாக்கப்பட்டவர்கள் வெளியே வந்து மற்றவர்களையும் காட்டிக் கொடுப்பார்கள் என்பதுதான் உண்மை. ஏனெனில், கூட்டமைப்புக்குள் இருக்கும் கட்சிகளுக்கு காட்டிக் கொடுத்தல் என்கிற கடந்த கால கறுப்பு வரலாறு உண்டு. அப்படியான நிலையில், மக்களை ஏமாற்றும் கூத்துக்களை மாத்திரம் மேடைகளைப் போட்டு நிகழ்த்துவார்கள். தமிழ்த் தேசிய அரசியலை அயோக்கியர்களின் கூடாரமாக்கிவிட்டு கூட்டமைப்பு கலைந்து போகும் காலம் தொலைவில் இல்லை.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction