free website hit counter

தமிழ் அரசுக் கட்சியின் தலைமை மாற்றத்தின் அவசியம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக மாவை சேனாதிராஜாவை தொடர்ந்தும் பேணுவதற்கான முயற்சிகள், தமிழ் அரசுக்கு கட்சிக்கு வெளியில் இருந்து சில தரப்புக்களால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) சிரேஷ்ட தலைவர்கள் அண்மைக்காலமாக அந்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுத் தலைவராக இன்னமும் பதவி வகித்துவரும் இரா.சம்பந்தன் வயது மூப்பினால் உடலளவில் தளர்ந்து போயிருக்கின்றார். அதுபோலவே, மாவை சேனாதிராஜாவும் முன்னரைப் போலல்லாது வயது மூப்பினால் ஏற்படும் உபாதைகளினால் அல்லற்படுகிறார். அப்படியான நிலையில், தமிழ்த் தேசிய அரசியலில் இன்னமும் முதன்நிலையில் இருக்கும் கூட்டமைப்பினதும், தமிழ் அரசுக் கட்சியினதும் தலைவர்கள் இருவரும் செயற்படும் நிலையில் இல்லாது இருப்பது என்பது, தமிழ்த் தேசிய அரசியலில் பெரும் பின்னடைவாகும்.

குறுகிய காலத்துக்கு பிரதித் தலைவர்களோ, வேறு யாரோ கூட்டமைப்பையோ, தமிழ் அரசுக் கட்சியையோ வழிநடத்த முடியும். ஆனால், எப்போதும் பிரதிகள் ஒரு அரசியல் தளத்தில் முழுமையான ஆளுமையை செலுத்த முடியாது. உறுதியான தலைமைத்துவம் இல்லாத அரசியல் தரப்பு, குழப்பங்களினால் நிறையும். அது, பொது எதிரிக்கும், ஏனைய கட்சிகளுக்கும் அதிக வாய்ப்புக்களை வழங்கும். கூட்டமைப்பின் தலைவர் (பாராளுமன்றக்குழுத் தலைவர்) சம்பந்தன், பாராளுமன்ற அமர்வுகள் தொடங்கி எந்தவித அரசியல் செயற்பாடுகளிலும் நேரடியாக சென்று பங்கேற்க முடியாத மூப்பினால் அல்லற்படுகிறார். அவரது அரசியல் செயற்பாடு என்பது, அவரது வதிவிடத்தில் நிகழும் சந்திப்புக்கள் என்ற அளவில் சுருங்கிவிட்டது. அது, பெரும் வெற்றிடத்தை இலங்கை அரசியலிலும் தமிழ்த் தேசிய அரசியலிலும் ஏற்படுத்தியிருக்கின்றது.

தமிழ் அரசுக் கட்சியைப் பொறுத்தளவில் உத்தியோகபூர்வமாக மாவை சேனாதிராஜாதான் இன்னமும் தலைவராக இருக்கிறார். ஆனால், அவர் கட்சியின் தொகுதிக்கிளை உறுப்பினர் ஒருவர் கொண்டிருக்கின்ற அதிகாரத்துக்கு ஒத்த அதிகாரத்தையே கொண்டவர் போல செயற்படுகின்றார். அவரின் கருத்துக்கள் கட்சிக்குள் எந்தத் தரப்பினாலும் உள்வாங்கப்படுவதில்லை. மதிக்கப்படுவதும் இல்லை. அவரை தலைமைத்துவத்தில் இருந்து மாற்ற வேண்டிய நேரம் ஏப்போதோ வந்துவிட்டதான உணர்வு தமிழ்த் அரசுக் கட்சிக்குள் ஏற்பட்டு சில ஆண்டுகளாகின்றன. கட்சியின் பிரதித் தலைவர், செயலாளர் தொடங்கி பெரும்பான்மையினர் மாவை சேனாதிராஜா தலைமைத்துவ ஆளுமையற்று இருக்கின்றார் என்று பொதுவெளியில் குற்றஞ்சாட்டியும் இருக்கிறார்கள். தமிழ் மக்களின் முதன்நிலைக் கட்சியின் தலைமைத்துவம் செயற்பாட்டு ஆளுமையின்றி இருப்பதாக சொந்தக் கட்சியினரே கூறிவிட்ட பின்னர், அந்தக் கட்சி மீதான அபிமானத்தை எப்படி மக்களிடம் வளர்ப்பது என்ற கேள்வி எழுகின்றது. அத்தோடு, மதிப்பிறக்கம் செய்யப்பட்ட ஒருவரின் கூற்றுக்களை தென் இலங்கையோ, சர்வதேசமோ கண்டு கொள்ளுமா? இவ்வாறான சாதாரண கேள்விகளுக்கே பதில் இல்லை என்கிற நிலையில், மாவை சேனாதிராஜாவை தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் தொடர முன்னெடுக்கப்படும் முயற்சிகள், தமிழ் அரசுக் கட்சியை இன்னும் மோசமாக அழிக்கும் முயற்சிகளாகவே பார்க்கப்பட வேண்டியிருக்கின்றது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் (DTNA) சிரேஷ்ட தலைவர் ஒருவர் அண்மையில் சம்பந்தனை கொழும்பிலுள்ள அவரது வதிவிடத்தில் வைத்து இரண்டு தடவைகள் சந்தித்து பேசியிருக்கிறார். இதன்போது, மாவை சேனாதிராஜாவை தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக இன்னும் சில காலத்துக்கு பேணுமாறு கோரியிருக்கின்றார். சம்பந்தனைப் பொறுத்த வரையில் யார் அவரைச் சென்று சந்தித்து என்ன பேசினாலும் அதனைக் கேட்டுக் கொண்டிருப்பார். ஆரம்பம் முதல் அவர் அந்த அணுகுமுறையை கையாண்டு வந்திருக்கிறார். அப்படித்தான், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சிரேஷ்ட தலைவரின் கருத்துக்களையும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதனையடுத்து, குறித்த தலைவர், மாவை சேனாதிராஜாவிடம் சம்பந்தரோடு தான் பேசிய விடயங்களைக் கூறி, அவருக்கு தெம்பளித்திருக்கிறார். தமிழ் அரசுக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து விரைவிலேயே தான் மாற்றப்படப்போகிறோம் என்ற ஏமாற்றத்தோடு இருக்கும் மாவை சேனாதிராஜாவுக்கு, குறித்த தலைவரின் நம்பிக்கை வார்த்தைகள் வரமாக அமைந்திருக்கும். அந்த நம்பிக்கை வார்த்தைகளை உள்வாங்கிய மாவை சேனாதிராஜா, தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தை கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் கூட்டினார். ஆனால், கூட்டம் ஆரம்பித்த தருணத்திலேயே, எந்தவித அவசர காரணங்களும் இல்லாத நிலையில், ஏன் அரசியல் குழு இப்போது கூட்டப்பட்டிருக்கிறது என்று சம்பந்தன், மாவை சேனாதிராஜா உள்ளிட்டவர்களை நோக்கி கேட்டிருக்கிறார். அத்தோடு, அவர் ஒரு மணித்தியால நேரம் வரையில் பேசியிருக்கிறார். அதனையடுத்து, மாவை சேனாதிராஜாவும் வெகுநேரம் பேசியிருக்கிறார். இருவரும் பேசி முடித்ததும் கூட்டம் முடிவுக்கு வந்திருக்கின்றது. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சிரேஷ்ட தலைவரின் பேச்சைக் கேட்டு பெரும் நம்பிக்கையோடு கொழும்பு சென்ற மாவை சேனாதிராஜா ஏமாற்றத்துடன் யாழ்ப்பாணம் திரும்பியிருக்கிறார்.

தமிழ் அரசுக் கட்சி தனித்து நிற்பதோ, தேர்தலை எதிர்கொள்வதோ ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எப் உள்ளிட்ட கட்சிகளை வெகுவாக பதிக்கும். அதுவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாங்கள் தான் என்று அந்தக் கட்சிகள் சொல்லிக் கொண்டாலும், அவர்களை முழுமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் திணைக்களத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (DTNA) என்ற பெயரை தமிழ்த் தேசியக் கூட்டணியாக (TNA) மாற்ற முன்னெடுக்கப்பட முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கின்றது. அவ்வாறான நிலையில், தமிழரசுக் கட்சி இன்றி, தனித்து நின்றால் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்கிற நிலை உணர்ந்து, எப்படியாவது தமிழரசுக் கட்சியை இணைத்துக் கொள்ளும் முயற்சிகளை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் முன்னெடுக்கிறார்கள். அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வீட்டுச் சின்னம் என்ற நிலையை மாற்றி, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்குள் தமிழரசுக் கட்சியை கொண்டுவந்து, புதிய சின்னத்தில் தேர்தல்களை எதிர்கொள்ளல் என்ற திட்டம். அப்படியாக நிகழ்ந்துவிட்டால், தங்களை ஒத்த கட்சியாக தமிழ் அரசுக் கட்சியையும் நடத்தலாம், அதனை வைத்துக் கொண்டு தேர்தல்களில் வென்றும் விடலாம் என்பது எண்ணம். அதற்காக, தங்களினால் கையாளப்படக்கூடிய ஒருவர் தமிழ் அரசுக் கட்சியின் தலைவராக தொடர வேண்டும். அதற்கு, மாவை சேனாதிராஜாவை விட்டால் வேறு ஆட்கள் இல்லை. எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மாவை சேனாதிராஜவை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு தாங்கள் முன்னிற்போம் என்று யார் கூறினாலும் அவர்களோடு இணக்கமாக இருக்க மாவை தயாராக இருக்கிறார். அந்த துருப்புச் சீட்டைக் கொண்டே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியினர், தங்களை ஒத்த கட்சியாக தமிழ் அரசுக் கட்சியை வளைக்க முயல்கிறார்கள். அதற்கு, அவர்களுக்கு மாவை சேனாதிராஜா தலைவராக தொடர்வது முக்கியம்.

தமிழ் அரசுக் கட்சியில் தலைமைத்துவ மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது. கூட்டமைப்பின் தலைவர் என்ற அடையாளம் சம்பந்தனோடு போய்விடும். அதன்பின்னர், அவ்வாறான தலைமைத்துவம் இருக்காது. அப்படியான நிலையில், தமிழ் அரசுக் கட்சி தன்னை நிலை நிறுத்துவதற்கும் செயற்பாட்டு அரசியலில் முன்னோக்கி பயணிப்பதற்கும் ஆளுமையுள்ள தலைவர் ஒருவரை கண்டு அடைய வேண்டும். அது, தேர்தல் அரசியலுக்குள் மாத்திரம் கட்சியைச் சுருக்கி, மக்களிடம் இருந்து அன்னியப்படும் வேலைகளைச் செய்யாத பிரதேச வாதங்கள் கடந்த செயற்பாட்டாளரை தலைவராக ஏற்க வேண்டும். மாறாக, ஓய்வூதியர்களின் தங்குமிடமாக கட்சியின் செயற்பாட்டுக் குழுவைப் பேணுவது என்பது கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் செய்யும் துரோகமாகும். ஏனெனில், தமிழ் அரசுக் கட்சியையும் வீட்டுச் சின்னத்தையும் பெரும் விமர்சனங்களோடும் மக்கள் தங்களின் முதன்மைக் கட்சியாக இன்றளவும் முன்னிறுத்தியிருக்கிறார்கள். அப்படியான நிலையில், அதற்கான அர்ப்பணிப்பை அந்தக் கட்சி வெளிப்படுத்த வேண்டும்.

தமிழ் அரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற இருக்கின்றது. இதன்போது, கட்சியின் யாப்பில் சில திருத்தங்களைச் செய்வது தொடர்பில் ஆராயப்பட இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப கட்சியின் யாப்பில் மாற்றங்களைச் செய்ய தயாராவது போல, காலத்தில் தேவை உணர்ந்து தலைமைத்துவ மாற்றத்தையும் தமிழ் அரசுக் கட்சி செய்ய வேண்டும். இல்லையென்றால், சுயநலவாதிகளும், சிறு குழுக்களும் தங்களின் தனிப்பட்ட நலனுக்காக தமிழ் அரசுக் கட்சி என்ற தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தோடு எழுந்த கட்சியை சிதைத்துவிடுவார்கள்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction