மனிதர்களுடன் மனிதர்கள் பேசலாம் என்பது இயல்பானது. ஆனால் அதுவே பெரும்பாலும் இப்போது இயல்பும் உண்மையுமற்றுப் போயுள்ளது. இந்நிலையில் மனிதர்கள் மரங்களுடன் பேசுதல் என்பது சாத்தியமா ?.
அறிவியல் ரீதியாக இதுவரை மரங்களுடன் பேசுதல் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் மரங்களுடன் பேசுதல் என்பது மனித வாழ்வியல் ஒரு கூறாக இருந்து வந்துள்ளது என்கிறார்கள். உலக நாடுகள் பலவற்றில் மரங்களோடு பேசி மரங்களை கட்டிப்பிடிக்கும் நடைமுறை, இன்றளவும்ட மக்களின் பயன்பாட்டில் உள்ளது என்கிறார்கள்.

மரங்களுடன் பேசுதல் என்பது இயற்கையோடு ஒரு ஆழ்ந்த தொடர்பை ஏற்படுத்தி, மனதிற்கு ஆறுதலையும் புத்துணர்வையும் பெறலாம் என்கிறார்கள். மரங்கள் சுற்றுச்சூழலில் உள்ள மாசுக்களை அகற்றி, கார்பன் டை ஆக்சைடை சுவாசித்து ஆக்ஸிஜனை வெளியிடுகின்றன எனப்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல். சில மரங்களின் பாகங்களில் நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும், மருத்துவ குணங்களும் உள்ளன என்பது தமிழ் மரபில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. உதாரணமாக, வேப்ப மரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன என்பது தமிழ் மக்களின் வாழ்வியலில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மரங்களுடன் பேசுதல் என்பது எவ்விதம் சாத்தியமாகும்?. இது நேரடியாக மனிதர்களுடன் பேசுவது போலன்றி, அவை தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் விதத்தைப் புரிந்துகொள்வதாகும். மக்கள் செடிகளுடன் பேசுவது அவற்றுக்கு உணர்ச்சிபூர்வமான ஊக்கத்தை அளிக்கிறது என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் தாவரங்கள் மனிதர்களின் பேச்சின் மீது எப்படி செயல்படுகின்றன என்பது பற்றி அறிவியல் ரீதியாக இன்னும் விவாதிக்கப்படுகிறது. மலைவாழ் மக்கள் தங்கள் தகவல் பரிமாற்றங்களை மரங்களின் வழி கடத்துகின்றார்கள் என்பதை நேரில் கண்டவர்களும் உண்டு.
மரம் செடிகளுடன் பேசும்போது, அது நமக்கு மனநிறைவைத் தருகிறது மற்றும் அவற்றுடன் ஒரு தொடர்பை உருவாக்குகிறது என்பது ஏற்புடையதாக கருதப்படினும், தாவரங்கள் மனிதர்களின் பேச்சின் மீது எப்படி செயல்படுகின்றன என்பதை அறிவியல் உலகம் ஆராய்ந்து வருகிறது.

மரங்கள் ஒன்றோடு ஒன்று பேச முடியும் என்பது அறிவியல்ரீதியாக நிரூபணமாயிருக்கிறது என்று சொல்வோரும் உண்டு. ஆனால், அவை நாம் பேசுவதைவிடச் சற்று வித்தியாசமான முறையில் பேசுகின்றன. இந்த மரங்கள் தங்கள் வளங்களைக் காடு முழுவதும் பகிர்ந்துகொள்கின்றன. வயதான மரங்கள், கன்றுகள் வளர்வதற்கு உதவுகின்றன. ஆரோக்கியமான மரங்கள் நோயுற்ற மரங்கள் குணமடைவதற்கு உதவுகின்றன. நம்மாலும் மரங்களுடன் உரையாட முடியும். அதனால், தாவரங்களின் வாழ்க்கையை அவை வாழ்க்கைச் சுழற்சியின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் மதிக்க வேண்டியது முக்கியம். அவை உலகில் மிக முக்கியமான பணியைச் செய்துகொண்டிருக்கின்றன. அவற்றுடன் உரையாடுவதற்கான நேரத்தை ஒதுக்கத் தயாராக இருந்தால், அவற்றிடமிருந்து பெரிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும் என்கிறார்கள் இயற்கையியல் ஆர்வலர்கள்.
ஒரு மரத்தின் மீது உங்கள் கைகளை வையுங்கள் அல்லது அந்த மரத்தின் கீழே அமர்ந்துகொள்ளுங்கள். “நீ எனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமென்று நினைக்கிறாயா?” என்று ஒரு மரத்திடம் கேட்கலாம். இதை நாம் சத்தமாகப் பேச வேண்டுமென்ற அவசியமில்லை. நம்முடைய சிந்தனைகள் ஆற்றல் வடிவத்தில் இருப்பதால் மரங்களால் அவற்றைக் கேட்க முடியும். ஆதலால் சிந்தித்தாலே போதும்.மரம் உங்களுக்குப் பதிலளிப்பதை நீங்கள் கேட்கலாம் அல்லது உங்களால் மரத்தின் உணர்வுகளை உணர முடியும் எனச் சொல்கின்றார்கள்.

இயற்கை நம்முடன் தொலைஉணர்வால் (Telepathy) உரையாடுகிறது. அது பெரும்பாலும் படங்களாக நமக்குக் கிடைக்கின்றன. அதனால் கண்களை மூடியவுடன் நீங்கள் படங்களைப் பார்ப்பதுபோல இருக்கும். மரங்களில் முகங்களையும் தோற்றங்களையும் கண்டுபிடிப்பது சுவாரசியமான அனுபவம். இதில் சில நேரங்களில் ஒரேயொரு கண்ணை மட்டுமே உங்களால் கண்டுபிடிக்க முடியும். சில நேரங்களில் மரத்தின் முழு முகத்தையும்கூட அடையாளம் காண முடியும்.
அவ்வாறு மரத்துக்கு ஒரு முகத்தைக் கற்பனை செய்துகொண்டால் உரையாடுவது இன்னும் எளிமையாக இருக்கும். ஆனால், அதற்கு மனித முகம் இருக்காது. சில நேரங்களில் மரங்களில் உயிரினங்களின் முகங்களை அடையாளம் காண முடியும். வயதான மரங்களில் நிறைய முகங்களை அடையாளம் காண முடியும்.நாம் திறந்த மனதுடன் இருந்தால், எந்த உருவக் கற்பனையும் இல்லாமல் நம்மால் மரங்களுடன் உரையாட முடியும். மரங்களின்மீது கைகளை வைத்து, அவற்றுடன் நமது ஆற்றலைப் பகிர்ந்துகொள்ள முடியும். இந்த உணர்வில் கவனத்தைக் குவிக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது, மரத்துடனான உரையாடல் இன்னும் எளிமையாகிறது.
மரங்களுக்கு மத்தியில் நடப்பது, அவற்றுடன் நேரத்தைச் செலவிடுவது, அவை பேசுவதைக் கவனிக்கத் தயாராக இருப்பது போன்றவற்றால் மரங்களுடன் நாம் எளிமையாக உரையாடலாம், உறவாடலாம். இயற்கையை மனத்தூய்மையுடன் அணுகும்போது, அதனுடன் உரையாடுவதற்கான திறனை நாம் பெறுகிறோம். இந்த மரங்களுடனான உரையாடல் நமது ஆன்மிக வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் தன்விழிப்பை ஏற்படுத்தவும் உதவுகிறது என்பது ஆன்மீகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவே இருக்கிறது. அதனால்தான் இந்துக்கள் கல்லாலின் கீழ் தெட்சனாமூர்த்தியையும், பௌத்தர்கள் போதிமரத்தின் கீழ் புத்தரையும், காண்பதில் மனம் மகிழ்கின்றார்கள். இது தவிர தலங்கள் தோறும் தல விருட்சங்கள் எனவும் மரங்களைப் போற்றிக் கொண்டாடுகின்றார்கள்.
நீள நெடிதுயரந்த பெருமரங்களிடம், வரலாற்றின் கதைகள் பலவும் மறைந்திருக்கும். மரங்களுடன் பேசுதல் சாத்தியமானால், அக்கதைகளின் சில வரிகளையேனும் நம் சிந்தை எட்டிடவும் கூடும்....
- 4தமிழ்மீடியாவிற்காக: மாதுமை
