காலங்கள் மாறுகின்றன. காற்றின் வாசனையும் மாறுகிறது. மரங்கள் பழைய இலைகளை உதிர்த்து, புதுத் தளிர் தரிக்கின்றன. இயற்கை தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் அந்த இடைவெளிக் காலமே மாசி மாதம்.
தமிழ் ஆண்டின் இந்த மாதம் வெறும் நாள்காட்டி மாற்றமல்ல; அது ஒரு ஆன்மீக அழைப்பு. “உள்ளத்தைச் சுத்தப்படுத்திக் கொள்… இறைவனை நோக்கித் திரும்பு…” என்று மனித மனத்தைக் கண்ணியமாகத் தட்டிக் கேட்கும் சிவனின் மெளன உபதேசம். அதனால் தான் சைவ மரபில் மாசி மாதம், “சிவபக்தியின் வசந்தம்” எனப் போற்றப்படுகிறது.
சிவனருள் பொழியும் நாட்கள்
மாசி பிறந்தவுடன் ஆலயங்களில் ஓர் அலைபேசல் நிகழும். அதிகாலையின் மணி ஒலி, திருவாசகப் பாடல்கள், அபிஷேக நீரின் சலசலப்பு , எல்லாம் சேர்ந்து ஒரு புனிதச் சூழலை உருவாக்கும்.
இந்த மாதத்தில் செய்யப்படும் ஒவ்வொரு பூஜையும், ஒவ்வொரு “நமசிவாய” ஜபமும், ஒவ்வொரு வில்வ அர்ச்சனையும் —
பல மடங்கு பலன் தரும் என்று ஆகமங்கள் கூறுகின்றன. ஏனெனில் இது கர்மங்களை கரைக்கும் காலம். உள்ளம் மென்மையாவதற்கான தருணம்.
மாசி மகம் – பாவங்களைப் பறிக்கும் புனித நீர்
மகம் நட்சத்திரமும் பௌர்ணமியும் இணையும் நாள் மாசி மகம். அன்று நதிகள் வெறும் நீரோட்டமல்ல; அவை பாவங்களைப் பறிக்கும் பரிசுத்தத் தாய்மார்கள்.
கடற்கரையில் சூரிய உதயத்தை நோக்கி நின்று, ஒரு கைப்பிடி நீரைத் தலைமேல் ஊற்றும் பக்தன் நீராடுவது உடலால் மட்டுமல்ல, மனத்தாலும். அதனால் தான் அந்த நாள் தீர்த்தவாரி ஒரு விழா அல்ல; ஒரு ஆன்மீக மறுபிறப்பு. தமிழகத்தில் கும்பகோணம் முதல் ராமேஸ்வரம் வரை, ஈழத்தில் கீரிமலை முதல் பாலாவி வரை, நீரும் பக்தியும் கலந்து பெருகும் காட்சி மகத்தானது. அது ஒரு பக்திக் கடல்.
மகா சிவராத்திரி – இரவு முழுவதும் விழிக்கும் பக்தி
மாசியின் இதயம் என்றால் அது மகா சிவராத்திரி.. அன்று இரவு கோயில்கள் தூங்காது. மணிகள் நின்றுவிடாது. தீபங்கள் அணையாது. “ஓம் நமசிவாய… ஓம் நமசிவாய…” என்ற மந்திர ஓசை, இரவின் அமைதியைப் பிளந்து விண்ணை எட்டும். அந்த இரவு, கண் விழிப்பது உடலுக்கு அல்ல, ஆன்மாவுக்கு.
லிங்கோத்பவ ஜோதி நினைவு கூறும் அந்த நேரத்தில், மனிதன் தன்னை மறந்து சிவத்தில் கரைகிறான். ஒரு இரவு பக்தி, பல பிறவி புண்ணியம் . இதுவே சிவராத்திரியின் அதிசயம்.
பிரதோஷ வேளை – அருள் இறங்கும் தருணம்
மாலைக்கதிர் சுருங்கும் வேளை. சூரியன் தாழ்ந்து, வானம் சிவந்த நிறம் பூசும், அந்த நேரமே பிரதோஷம். நந்தியைச் சுற்றி நடக்கும் பக்தர்கள், கையில் வில்வமாலை, உதடுகளில் சிவநாமம், மனதில் ஓர் அமைதி. அந்த சில நிமிடங்கள்
வாழ்க்கைச் சுமைகள் அனைத்தும் உருகிப் போகும் தருணங்கள்.
மாசி மாதம் நமக்கு எளிமையாகக் கற்றுத்தருவது, பழையதை விடு. பாவங்களை கழுவு. உள்ளத்தைத் தூய்மைப்படுத்து.
சிவனை அணுகு. வசந்தம் பூமிக்குத் தளிர் தருவது போல, சிவபக்தி மனித உள்ளத்துக்கு ஒளி தருகிறது. மாசி மாதம் வருவது ஒவ்வொரு ஆண்டும் தான். ஆனால் அதைக் உள்ளம் மாற்றும் வாய்ப்பாக எடுத்துக் கொள்வோர் அரிது.
ஒரு நிமிடம் நின்று சிவனை நினைத்தால் போதும் வாழ்க்கையின் சலனங்களில் இருந்து நிம்மதி மலரும். அதனால் தான் சான்றோர் சொன்னார்கள்: “மாசி வந்தால் மனம் மலரும் ; சிவனை நினைத்தால் வாழ்வு சிறக்கும்." என்று.
சிவனைச் சிந்தித்திருப்போம்.
- யாத்ரா

