தமிழ் பக்தி இலக்கிய உலகில், சக்தி வழிபாட்டின் உச்ச வெளிப்பாடாக விளங்குவது “அபிராமி அந்தாதி”. இந்த மகத்தான நூலை இயற்றியவர் அபிராமிப் பட்டர். அவரது வாழ்க்கையும், அவர் அனுபவித்த தெய்வீக அனுபவங்களும், அபிராமி அந்தாதியில் உயிரோட்டமாகப் பதிந்துள்ளன. அந்த அருள் வரலாறு நிகழ்ந்தது தை மாத அமாவாசையில்.
அபிராமிப் பட்டர் கி.பி. 18ஆம் நூற்றாண்டில், திருக்கடையூர் என்ற சிவ–சக்தி தலத்தில் வாழ்ந்தார். அபிராமி அம்மன் மீது அளவற்ற பக்தி கொண்ட அவர், உலகியல் பற்றுகளிலிருந்து விலகி, முழுமையாக தேவியைத் தியானித்த மகானாக விளங்கினார்.
திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் அர்ச்சகராக இருந்தாலும், அவரது உள்ளம் எப்போதும் தேவியின் திருவடிகளில் லயித்திருந்தது. இந்த தெய்வீக லயமே “அபிராமி அந்தாதி” எனும் அமரக் காவியமாக உருவெடுத்தது.
ஆட்சி அதிகாரமுடைய அரசன், திருக்கடையூருக்கு வந்தபோது, அபிராமியை அர்ச்சகராகவிருந்த பட்டர் மனக்கண்ணில் முழுநிலவாக தரிசித்த நிலையில் இருந்த போது, அரசன் அவரது பக்திநிலையைச் பரீட்சிக்கும் பொருட்டு, இன்று என்ன திதி என வினவிய வேளை, அன்றைய தினம் அமாவாசை என்ற நிலையிலும், அபிராமிப் பட்டர் “இன்று பௌர்ணமி” எனக் கூறினார்.

தன் கூற்றில் தளவின்றி இருந்த அபிராமிப்பட்டர், அரசால் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும், கலங்காமல் அபிராமி அம்மனைப் புகழ்ந்து அந்தாதி பாடினார். அந்தப் பாடல்களின் கருணைப் பெருக்கில், நிலவு தோன்றியதாக மரபு கூறுகிறது. இவ்வாறு அபிராமி அந்தாதி தெய்வீக அனுபவத்தின் கனியாகப் பிறந்தது.
அபிராமி அந்தாதியின் அமைப்புச் சிறப்பு தெனில், மொத்தம் 100 வெண்பாசுரங்கள். அந்தாதி யாப்பு (ஒரு பாடலின் இறுதி சொல் அடுத்த பாடலின் தொடக்கமாக வரும்).
சக்தி தத்துவம், அத்வைத சிந்தனை, பக்தி – ஞான ஒருமை மிக்க அந்தக் கவிக்கோர்வையின் முக்கிய செய்யுள்கள் சிலவற்றை விதந்து பார்க்கலாம்.
முதல் செய்யுள் – அபிராமியின் திருவடிகள்
“உதிக்கின்ற செங்கதிர் உச்சித் திலகம்
உணர்வுடையோர் உள்ளத் தகலம்…”
இந்த முதல் செய்யுளிலேயே அபிராமிப் பட்டர், அபிராமியை சூரியனின் ஒளிபோல் உலகை ஒளிரச் செய்பவளாகவும், ஞானிகளின் உள்ளத்தில் ஒளிரும் பரம்பொருளாகவும் வர்ணிக்கிறார். அபிராமி வெளியில் மட்டுமல்ல, உள்ளத்தின் அகத்தில் பிரகாசிக்கும் தெய்வம் என்பதை இச்செய்யுள் உணர்த்துகிறது.
அபிராமியைத் தாயாகவும் பரம்பொருளாகவும் நினைந்துருகிப் பாடிய பாடலான “தாயும் ஆனாய், தந்தையும் ஆனாய்
தாரமும் ஆனாய்…” பாடலில், தாயாகக் கருணை அளிப்பவள் தந்தையாகப் பாதுகாப்பவள், நண்பன், வழிகாட்டி, பரம்பொருள் என அனைத்துமாக இருப்பவள், என்ற சரணாகதி தத்துவம் வெளிப்படுகிறது.
“கருணையே வடிவாய் கனிந்தாள்” எனும் பாடலில், அபிராமி தண்டிக்கும் தெய்வமல்ல;அவள் கருணையின் உருவம்.பாவம் செய்தவரையும் விலக்காமல்,அன்போடு அருளும் தாயெனவே அபிராமி பட்டர் அவளைப் பார்க்கிறார்.
நிலவு தோன்றியதாகக் கூறப்படும் செய்யுள் 79ம் செய்யுள்ளில் அபிராமிப் பட்டரின் பக்தி உச்சத்தை அடைகிறது. அவர் பாடிய அந்தாதியின் கருணைப் பெருக்கால்,அபிராமி அம்மன் அருளால் நிலவு தோன்றியது என்பது பக்தி மரபு கூறும் செய்தி. இதனூடு உலக நியதிகளும், இயற்கையும் கூட உண்மையான பக்திக்குத் தலை வணங்கும்.
அபிராமி அந்தாதியின் தத்துவ நோக்கம், பக்தி ஞானமாக மாறுவதற்கான பாதை சரணாகதி தான். அதுவே முக்திக்கான வழி.
தமிழ்ச் சமய இலக்கியத்தில் , தேவாரம், திருவாசகத்திற்கு இணையான பக்தி இலக்கிய உயர்வு கொண்டது அபிராமி அந்தாதி. இந்த உயர்வின் வழியிலேயே இலங்கையின் நயினாதீவு நாகபூஷணி அம்மன் அடியவர்கள், உலகின் எப்பாகத்திலும், திருமுறைகள் ஒதும் போது , ஈற்றில் அபிராமி அந்தாதியின் ஒரு பாடலையேனும் பாடி நிறைவு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள்.
அபிராமிப் பட்டர் தனது வாழ்வை அபிராமி அம்மனின் திருவடிகளில் கரைத்த மகான். அவர்பாடிய அபிராமி அந்தாதி அவரது தனிப்பட்ட அனுபவம் மட்டுமல்ல; அது மனித குலத்திற்கு வழங்கப்பட்ட ஆன்மிகச் செல்வம். அபிராமி அந்தாதியை தினசரி பாராயணம் செய்தால், மன அமைதி, துன்ப நிவாரணம் தரும் என்பது சமய மரபு வழி நம்பிக்கை.
