free website hit counter

தைப் பொங்கல் தமிழர் திருநாளும் - மகர சங்கிராந்தியும் !

செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

நம் கலாச்சார மரபுப் பண்பாட்டுச் செல்வங்களில் முக்கிய இடம் வகிப்பது விவசாயத்தையும் இயற்கையையும் போற்றும் பண்டிகைகள் ஆகும். அவற்றில் சிறப்பானது மகர சங்கிராந்தி,  தைப் பொங்கல். சூரியனின் இயக்கத்தையும், விவசாயியின் உழைப்பையும், மனிதன்–இயற்கை உறவையும் எடுத்துரைக்கும் பண்டிகை என்பதனால் தமிழர் திருநாளாக இது எழுச்சியும் முக்கியமும் பெறுகிறது.

மகர சங்கிராந்தி – பொருள் மற்றும் முக்கியத்துவம்

“சங்கிராந்தி” என்றால் மாற்றம் அல்லது இடப்பெயர்ச்சி என்று பொருள். சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு நகரும் நாளே சங்கிராந்தி ஆகும். சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் நாளே மகர சங்கிராந்தி என்று அழைக்கப்படுகிறது. இது பொதுவாக ஜனவரி 14 அல்லது 15ஆம்  திகதிகளில் வருகிறது.

இந்த நாளிலிருந்து சூரியன் வட திசை நோக்கி நகரத் தொடங்குவதால், இதனை உத்தராயணம் என்றும் கூறுவர். உத்தராயணம் ஆன்மீக ரீதியாக மிகச் சிறப்பான காலமாகக் கருதப்படுகிறது. ஒளி, அறிவு, செழிப்பு ஆகியவற்றின் தொடக்கமாக மகர சங்கிராந்தி பார்க்கப்படுகிறது.

தைப் பொங்கல் – தமிழர்களின் அறுவடைத் திருவிழா

மகர சங்கிராந்தி நாளை  தமிழர்கள் தைப் பொங்கல் எனப் பெருமையுடன் கொண்டாடுகின்றனர். “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழி தை மாதத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறது. தைப் பொங்கல் விவசாயிகள் தங்கள் உழைப்பின் பயனாக விளைந்த நெல்லை அறுவடை செய்து, அதனை இயற்கைக்கு நன்றி கூறும் பண்டிகையாகும்.

பொங்கல் பண்டிகையின் நான்கு நாட்கள்

தைப் பொங்கல் பொதுவாக நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அவை போகி, சூர்ய பொங்கல் அல்லது தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல் அல்லது பட்டிப்பொங்கல் , காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றன.

போகி : பொங்கல் தினத்துக்கு முதல் நாள் கொண்டாடுவார்கள்.
பழையவற்றை அகற்றி, புதுமையை வரவேற்கும் நாள். வீடுகள் சுத்தம் செய்யப்படுகின்றன. பழைய பொருட்கள் எரிக்கப்படுகின்றன.

தைப் பொங்கல் : சூரியனுக்காகக் கொண்டாடப்படும் நாள். 
புதிய மண் பானையில் பால் மற்றும் அரிசி வைத்து “பொங்கலோ பொங்கல்” என்று கூறி பொங்கல் தயாரிக்கப்படுகிறது. சூரியன், மழை, நிலம் ஆகியவற்றுக்கு நன்றி செலுத்தப்படுகிறது.

மாட்டுப் பொங்கல் அல்லது பட்டிப் பொங்கல் : பொங்கலுக்கு மறுநாள் கொண்டாடுவார்கள்.
விவசாயத்தில் துணை புரியும் மாடுகளுக்காகக் கொண்டாடப்படும் நாள். மாடுகளை அலங்கரித்து, அவற்றுக்கு உணவு அளித்து மரியாதை செய்கிறார்கள்.

காணும் பொங்கல்: மேற்குறித்த விஷேடங்களின் பின்னதாக கொண்டாடுதல்.
உறவினர்கள், நண்பர்களுடன் கூடி மகிழ்ச்சியாகக் கழிக்கும் நாள். இயற்கை அழகை ரசிக்க வெளிப்புற சுற்றுலா செல்லும் வழக்கம் உள்ளது.

மகர சங்கிராந்தி – தமிழர்கள் மட்டுமன்றி, இந்தியாவின் பல பகுதிகளிலும், பல்வேறு  பெயர்களில் கொண்டாடப்படுகிறது:

பஞ்சாபில் – லோரி

ஆந்திரா, தெலுங்கானா – சங்கிராந்தி

கர்நாடகா – சங்கராந்தி

அசாம் – மகா பிஹு

குஜராத் – உத்தராயண் (காற்றாடி திருவிழா) இதுவே இலங்கையின் வடபுலத்தில் பட்டத்திருவிழா என்றழைக்கப்படுகிறது.

இவ்வாறாக ஒரே பண்டிகை பல்வேறு பண்பாட்டு வடிவங்களில் கொண்டாடப்படுவது இந்தியாவின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது.

சமூக மற்றும் பண்பாட்டு முக்கியத்துவம்

தைப் பொங்கலும் மகர சங்கிராந்தியும் மனிதனை இயற்கையோடு இணைக்கும் பண்டிகைகளாகும். சூரியன், மழை, நிலம், மாடு போன்றவற்றுக்கு நன்றி கூறும் பழக்கம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. குடும்ப ஒற்றுமை, அயலார் உறவு, பண்பாட்டு மரபுகள் ஆகியவை இப்பண்டிகைகளின் மூலம் வலுப்பெறுகின்றன.

மகர சங்கிராந்தியும் தைப் பொங்கல் பண்டிகையும் தமிழர்களின் வாழ்வியலை, விவசாய பாரம்பரியத்தை, இயற்கை மீதான மரியாதையை வெளிப்படுத்தும் திருவிழாக்களாகும். இவை மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த புதிய தொடக்கத்தை மனித வாழ்விற்கு அளிக்கின்றன. இத்தகைய பண்பாட்டு விழாக்களை பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லுதல் நமது கடமையாகும்.

அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் !

-4தமிழ்மீடியாவிற்காக: மலைநாடான்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula