free website hit counter

முதல் செந்தமிழர் தமிழ்ஞானசம்பந்தன் !

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று வைகாசிமூலம் (28-5-2021) வெள்ளிக்கிழமை. ஸ்ரீஞானசம்பந்தர்குருபூஜை. நமது கல்வெட்டுகளில் சம்பந்தபெருமான் ஆணைநமதென்றபிரான் என்று அழகாக குறிக்கப்படுகின்றார். சைவத் திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளை அருளியவர் ஸ்ரீ ஞானசம்பந்த பெருமான்.

சம்பந்த பெருமான் தமது பதிகங்கள் ஒவ்வொன்றின் திருகடைக்காப்பிலும் அப்பதிகங்களை ஒதுவதால் ஆன்மாக்கள் பெற்றுய்யும் பலன்களை எடுத்துரைப்பார்.பல பதிகங்களில், பயன்களை கூறினாலும், அவர் அருளிய நான்கு பதிகங்களில் மட்டும் ஆணைநமதே என்று திருகடைக்காப்பில் அருளிப்பாடுகின்றார்.

உலகவழக்கில் நாம் பலருக்கு உறுதிபாடுகளை அளித்தாலும், சில விஷயத்தில் நாம் நம்பும் அல்லது நமக்கு நன்றாக தெரிந்த செய்தியை சத்தியமாக என்று முக்கியத்துவம் கொடுத்து உறுதியளிப்போம்.காரணம் அந்த செய்தியின் மீது நமக்கு உள்ள நம்பிக்கை.மேலும் அது நடக்கும் என்ற நம்பிக்கை.

உலகவழக்கில் நாம் சத்தியம் என்று சொல்வதுபோல், பெருமான் ஆணை நமதே என்று திருமுறைகளில் நமக்கு உறுதியளிக்கின்றார்.திருநனிப்பள்ளி தேவாரத்தில்,
"இடுபறை யொன்ற அத்தர் பிரான்மேல் இருந்து இன் இசையால் உரைத்த பனுவல், நடுவிருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே " என்றும்,

திருவேதிக்குடி தேவாரத்தில், "சிந்தை செய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வெய்தி இமையோர், அந்தவுலகெய்தி அரசாளும் அதுவே சரதம் ஆணை நமதே என்றும்,

கோளறுபதிகத்தில், "தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய், ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே என்றும்,

சீர்காழி தேவாரத்தில், "வான்இடை வாழ்வர் மண்மிசைப் பிறவார் மற்று இதற்க்கு ஆணையும் நமதே " என்றும் ,நான்கு இடங்களில் ஆணை நமதே என்று உறுதியளித்து பாடி அருளியுள்ளார்.

சைவத்திருமுறைகளில் ஞானசம்பந்தபெருமான் மட்டுமே தேவாரங்களை பாராயணம் செய்வோர், ஓதுவோர் வினை கழியும், சிவபுண்ணியம் அடையலாம் என்பதை ஆணைநமதே என்று கூறிஉறுதிபட பாடியுள்ளார்.

சைவத்திருமுறைகளை தொகுத்த ஸ்ரீநம்பியாண்டார்நம்பிகளுக்கு இவ்வாக்கு பிடித்தமாகிவிட்டது போல. அவர் தாம் பாடிய ஆளுடைய பிள்ளையார் திருத்தொகையில், சம்பந்தரை, " ஆணைநமதுஎன்னவல்லான் " என்று புகழ்கின்றார். அவ்வரிகள்,"முத்திப் பகவன் முதல்வன் திருவடியை அத்திக்கும் பத்தர் எதிர் ஆணை நமது என்னவலான் "என்பதாகும்.

" ஆணை நமது " என்று அருளியதால் திருஞானசம்பந்த பெருமானை "ஆணை நமதென்ற பெருமான் "என்று குறிப்பிட்டனர்.
நம்பியாண்டார் நம்பிகள் போல் அக்கால மக்களுக்கும் இவ்வார்த்தை மிகவும் பிடித்துவிட்டது.அவர்கள் தங்கள் பெயராகவே வைத்துக்கொண்டனர்.

திருமயம் விராச்சிமலை கோயில், குலசேகர பாண்டியன் 16 ஆண்டு சாசனத்தில், "பெரிய திருக்கூட்டத்து தவணை முதலியார் மாணிக்கவாசகர் ஆணை நமதென்ற பெருமாள் ஆன கோவில் வாசகப் பிச்சு முதலியார் "என்று ஒருவர் குறிப்பிடப்படுகின்றார்.

"பிரான் மலை கல்வெட்டில், இத்தன்ம சாசனத்துள் கையெழுத்திட்டவருள் ஒருவர் "ஆணை நமதென்ற பொருமாள் "என்று உள்ளது. நார்த்தாமலையில் உள்ள திருமலைக் கடம்பர்கோயில், மாறவர்ம சுந்தர பாண்டியன் ஒன்பதாம் ஆண்டு கல்வெட்டில் கையொப்பம் இட்ட ஒருவர், "குடியுடையான் ஆணை நமதென்ற பெருமாள் " என்பதாகும்.

இவ்வாறு திருஞானசம்பந்த பெருமானின் ஆணை நமதே என்ற திருவாக்கினை மக்கள் பெயராக சூட்டிக்கொண்டதன் மூலம், சம்பந்தர் பெருமான் மீது அக்கால பக்தர்கள் கொண்ட அன்பும் பக்தியினையும், சம்பந்த பெருமான் மகத்துவத்தையும் நாம் உணர்ந்துக்கொள்ளமுடியும். இது மட்டுமன்றி தமிழகத்தின் முதல் செந்தமிழர் எனப் போற்றப்பட்டவரும்  தமிழ்ஞானசம்பந்தப் பெருமானே.

தேவாரம் பாடிய மூவர் முதலிகளில் ஸ்ரீ திருஞானசம்பந்தர் வைதிக அந்தணர்.அதாவது வைதிக சைவர். திருமூலர் காலம் முதல் வேதத்தோடு இயந்த சைவமாகவே நம் சைவசமயம் வளர்ந்துவந்தது.அந்த மரபை போற்றி வளர்த்தெடுத்தவர்,

வேதநெறி தழைத்தோங்க மிகு சைவத்துறை விளங்க அவதரித்தவர் சம்பந்தபெருமான். ஸ்ரீ சம்பந்த பெருமான் தீவிர சைவசமய ஸ்தாபனத்தில் இறையருளால் ஈடுபட்டு, சைவசமயத்தை நிலைநிறுத்தச் செய்தவர். கோயில் கோயிலாக சென்று பக்தி மார்க்கம் மூலம் சைவசமய உணர்வை ஏற்படுத்தியவர். ஆனால் வரலாற்றில், நேர்மையாக தீவிரமாக கொள்கைப் பிடிப்போடு, போராட்ட குணத்தோடு செயல்படுவர்கள் மீது ஏதேனும் குற்றம் சுமத்தி அவர்களின் போற்றுதலுக்குரிய தொண்டின் புகழை குறைக்க செயல்பட முனைவோர் சிலருக்கு தமிழகத்தில் ஞானசம்பந்த பெருமானின் சைவசமயஸ்தாபனம் என்ற செயற்கரிய செயல் பெரும் நெருடலாகவே இருந்து வந்ததுள்ளது. எனவே ஞானசம்பந்தரை ஆரியர் என்றும் (ஆரியர் என்பதன் அர்த்தம் வேறு) தெலுங்கு அந்தணன் என்றும், பல ஏசல்களை கூறி தமிழோடு அவருக்கு உள்ள பந்தத்தை சிதைக்க , தமிழர்கள் அவரை வெறுக்க பல பிரச்சாரங்களை செய்து அலைந்துகொண்டிருக்கின்றார்கள்.

உண்மையாதெனில், ஞானசம்பந்த பெருமான் தமிழ் வளர்த்த ஞானசம்பந்தர். இவர் நான்மறை வேதங்களை போற்றியது போல், தமிழை உயிராக போற்றியவர். தமது தேவாரம் பாடல்களில் ஒவ்வொன்றிலும் தம்மை, மறைஞானசம்பந்தன், சிவ ஞானாசம்பந்தன், என்றது போல், தமிழ்ஞானசம்பந்தன் என்று தம்மை கூறி பாடுகின்றார்.
"தழங்கெரி மூன்றோம்பு தொழில் தமிழ்ஞானசம்பந்தன் சமைத்த பாடல்,
வழங்கும் இசை கூடும்வகை பாடுமவர் நீடுலகம் ஆள்வார்தாமே " என்பது சீர்காழி தேவாரம்.
அதாவது, முத்தீ வளர்க்கும் வைதிக தொழில் செய்யும் மரபில் பிறந்த தமிழ்ஞானசம்பந்தன் என்று அடையாளப்படுத்துகின்றார். இவ்வாறு தம்மை தமிழ் ஞானசம்பந்தன் என்று கூறிய வாக்குகள் பல தேவாரங்களில் உள்ளன. சங்ககாலம் முதல் தமிழக வரலாற்றில் தமிழோடு தம்மை பெருமைபட அடையாளப்படுத்திக்கொண்டவர் ஞானசம்பந்தர் மட்டுமே.

சம்பந்தர் கொண்ட தமிழ் பற்றை கண்டு ஸ்ரீ சுந்தரர் பெருமான் தம் தேவாரத்தில்,
"நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தன்...."என்றும்,
"நல்லிசை ஞானசம்பந்தனும் நாவினுக்கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்துகப்பானை "
என்று சம்பந்தர் தமிழ் பரப்பினார் என்று போற்றுகின்றார்.
"திருத்தமாந் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ்,
ஒருத்தராகிலும் பலர்களாகிலும்
உரை செய்வார் உயர்ந்தவர்களே "
என்ற தேவாரத்தில் செந்தமிழ் என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு தம்மை தமிழ் ஞானசம்பந்தன் என்றும், செம்தமிழ் மாலை என்றும், சம்பந்தர் தமிழை போற்றி புகழ்வதை கண்டு மனம் லயம் கொண்ட மணவிற்கூத்தன்காலிங்கராயன் என்பவர், (இந்த காலிங்கராயனே சிதம்பரத்தில் தேவார பாடல்களை செப்பேட்டில் எழுதிவைத்தவர். முதற் குலோத்துங்க சோழன் அமைச்சர்) சம்பந்த பெருமானுக்கு தில்லையில் கோயில் எழுப்பி, கோயிலுக்கு பொன்வேய்ந்ததோடு அல்லாமல், சம்பந்தப் பெருமானை "செந்தமிழர் " என்று அடைமொழி கொடுத்து மகிழ்கின்றான்.

அந்த கல்வெட்டு பாடல் இதோ, "தென்வேந்தர் கூன் நிமிர்த்த செந்தமிழர் தென்கோயில்,
பொன்வேய்ந்து திக்கைப் புகழ் வேய்ந்தான் -ஒன்னார்க்குக்,
குற்றம் பலகண்டோன் கோளிழைக்கும் வேற்கூத்தன்,
சிற்றம்பலத்திலே சென்று."
இவ்வாறு தமிழக வரலாற்றில் செந்தமிழர் என முதலில் புகழப்பெற்றவர் சம்பந்த பெருமானே.
சிவார்ப்பணம்.

"ஆணை நமதென்ற பிரான் திருவடிகள் போற்றி "

"தமிழஞானசம்பந்தன் கழல் போற்றி "

சிவார்ப்பணம்.

- தில்லைகார்த்திகேயசிவம்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction