free website hit counter

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி எப்போது ?

குறிப்புக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த ஆண்டு ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி இரு வேறு நாட்களில் கொண்டாடப்படுவது அடியார்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.  இது இரண்டுமே சரியெனப் பல்வேறு சமயப்பெரியார்களும், ஜோதிடர்களும் தெரிவித்திருக்கின்றார்கள்.

சிவாகம ரீதியான வழிபாடுகளை மேற்கொள்ளும் சைவாலய பக்தர்கள் திதியையும், வைஷ்னவாலய பக்தர்கள் நட்சத்திரத்தையும் பிரதானமாகக் கொள்ளும் சம்பிரதாயங்கள் உட்பட பல்வேறு விடயங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

இது தொர்பாக யாழ்/இந்துசாதனம் ஆசிரியர் சிவஶ்ரீ. தியாக. மயூரகிரி குருக்கள் அவர்கள் சிறப்பான கட்டுரையினைத் தந்துள்ளார்கள். அவருக்கான நன்றிகளுடன் அதனை இங்கு பதிவு செய்கின்றோம்.-4TamilmediaTeam

ஶ்ரீ கிருஷ்ண ஜெயந்தி எப்போது ?

இந்த ஆண்டு இரு முறை கொண்டாடப்படவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி 11.08.2020 / 09.09.20. இந்துக்களின் பஞ்சாங்க கணிப்பில் இரண்டு முறை பேணப்படுகின்றது. ஒன்று சந்திரனை அடிப்படையாக கொண்ட கணிப்பு முறையான சாந்திரமான கணிப்பு. மற்றையது சூரியனை அடிப்படையாக கொண்ட கணிப்பு முறையான சௌரமான கணிப்பு.

நம் பஞ்சாங்கங்களில் பொதுவாக வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு முதலியன சூரியனின் சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்ட சௌரமானப்படி கணிக்கப்பட்டாலும், சில விழாக்களும் விரதங்களும் சாந்திரமானப்படியே கணிக்கப்படுகின்றன. ஆனால், ஆந்திரா முதல் வட இந்தியா எங்கும் வருடப்பிறப்பு முதல் அனைத்து விரதங்களும் வழிபாடுகளும் சாந்திரமானப்படியே அனுசரிக்கப்படுவதை அவதானிக்கலாம்.

தமிழகத்தில் நம்மைப் போலவே மாதங்கள், வருடப்பிறப்பு முதலியன சௌரமான அடிப்படையில் பேணப்படுகின்றன. ஆனால், நாமும் தமிழகத்தாரும் கேரள தேசத்தாரும் விநாயக சதுர்த்தி, நவராத்திரி, கேதார கௌரி நோன்பு, ஸ்கந்தசஷ்டி முதலியவற்றை சாந்திரமானப்படியே அனுஷ்டிப்பதை சிலர் அறிந்திருக்கலாம். அதனால் தான் சிலஆண்டுகளில் புரட்டாதி மாதத்தில் விநாயக சதுர்த்தியும் ஐப்பசி மாதத்தில் நவராத்திரியும் கார்த்திகை மாதத்தில் ஸ்கந்தசஷ்டியும் வருகின்றன.

இதிலும் சில விரதங்கள் சாந்திரமானப்படியா? சௌரமானப்படியா? அனுசரிக்கப்பட வேண்டும் என்பதில் அறிஞர்களிடையே சில கருத்து முரண்பாடுகள் உள்ளன.இதனால் தான் சில ஆண்டுகளுக்கு முன் வாக்கிய பஞ்சாங்கத்தார் மகாசிவராத்திரியை தை மாதத்தில் சாந்திரமானப்படியும் திருக்கணித பஞ்சாங்கத்தார் அதே விரதத்தை மாசி மாதத்தில் சௌர மானப்படியும் குறித்து பஞ்சாங்கத்தை வெளியிட்டனர். இது அக்காலத்தில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. நம் நாட்டில் இவை இரண்டு மரபிலும் தலா ஒவ்வொன்றாக இரண்டு பஞ்சாங்கங்களே வெளிவருவதால், அவை இரண்டும் வேறுபட்ட நாட்களில் முக்கிய விரதத்தை குறித்தமை குறித்து பலரும் கடுமையாக விவாதங்களை மேற்கொண்டனர். பொதுவாக இரண்டு முறைமையிலும் ஒரே நாளில் இப் பொதுப் பண்டிகைகள் வந்து விடுவதால் சிக்கல் இல்லாமல் போகிறது.

எப்பொழுதாவது, மகாசிவராத்திரி, ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி முதலிய சாந்திரமானப்படியும் சௌரமானப்படியும் தனித்தனியாக கணிக்கப்பட்டு கொண்டாடப்படும் பொது விழாக்கள் வேறு வேறு நாட்களில் ஒரு மாத இடைவெளியில் வந்து விடுவதால் அது தொடர்பில் அடியவர்கள் எது சரியென குழப்பமடைந்து விடுகின்றனர். ஏனெனில் வட இந்தியாவில் ஒரு நாளிலும் தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இரு பிரிவாகவும் ஒரே விழாவை அனுசரிக்கும் நிலை அப்பொழுது ஏற்படும். நம் நாட்டு பௌத்தர்களும் இவ்விரு முறைமையையும் அனுசரிக்கின்றனர் என்றே கருதுகிறேன்.

இவற்றை குறிப்பிட காரணம் இந்த ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தி இரண்டு நாட்கள் வருகிறது. சாந்த்ரமானப்படி எதிர்வரும் 11.08.2020 செவ்வாய்க்கிழமை வருகிறது.சௌரமானப்படி ஆவணி ரோகிணி ஆகிய 09.09.2020 புதன்கிழமை வருகிறது. எங்கள் நாட்டு பஞ்சாங்கங்களில் சௌரமான விதிப்படி 09.09.2020 புதனே குறிப்பிடப்பட்டிருக்கிறது. நம் விஷ்ணுவாலயங்களிலும் அதுவே கொண்டாடப்பட உள்ளது. ஆனால், கண்ணன் அவதரித்த வட மதுரை, கோகுலம், துவாரகை போன்ற தலங்களில் 11.08.2020 அனுசரிக்கப்படவுள்ளது. தமிழக வைணவ தலங்களில் எங்கள் நாடு போலவே, 09.09.2020 அன்றே கொண்டாடப்படுகிறது.

இவை இரண்டு கணிப்பு முறைகளும் சரியானவை. இரண்டு கணிப்பின் படியும், அவரவர் மரபுக்கேற்ற வகையில் கண்ணன் பிறந்த நாளை கொண்டாடலாம் என துறை சார் வல்லுனர்கள் சொல்கின்றனர். நாம் பேத் டே ( Birthday) என்று ஆங்கிலப்படியும், நட்சத்திரப் பிறந்த நாள் என்று மரபுப்படியும் இரண்டு நாட்கள் பிறந்த நாளை கொண்டாடுகிறோமல்லவா? எனவே, இம்முறை கண்ணனுக்கும் இரு நாள் அவதார வைபவத்தை கொண்டாடுவோம். ஆனால், நம் பஞ்சாங்கங்கள் சொல்வது போல, கோயில்களில் 09.09.2020 அன்றைய நாளை ஒட்டிக் கொண்டாடுவதே பொருத்தமானது.

இந்த 11.08.2020 கிருஷ்ண ஜெயந்தி பற்றி இன்னொரு தவறான தகவல் பரவி வருகிறது. அதாவது அன்று காலை சப்தமி- பரணியே இருக்கிறதாம் என்பதே அக்கருத்து. ஆனால், சாந்த்ரமான கிருஷ்ண ஜெயந்திக்கு சிராவண கிருஷ்ண பக்ஷ அஷ்டமி நள்ளிரவில் இருப்பதே பிரமாணம். எனவே, அன்று 11.08.2020 அன்றும் சில மரபுகளின் படி கிருஷ்ண ஜெயந்தி தான். இதனை கோகுலாஷ்டமி, ஸ்ரீ ஜெயந்தி என்றெல்லாம் பஞ்சாங்கங்களில் குறித்துள்ளனர். ஆகவே, அந்நாளும் கிருஷ்ண வழிபாட்டுக்கு முக்கியமான நாளென்பதில் ஐயமில்லை.

சிறையில் பிறந்தவன் அவன். பிறந்த அன்றே தன் தாயை நீங்கி, யசோதை வளர்ப்பில் வளர்ந்தவன். வளருமிடத்தும் மாடுகளை மேய்த்தவன். கம்சன் என்ற அரசனால் கொல்லுவதற்காக தேடப்பட்டவன். ஆனால், அத்தனை துன்பங்களையும் இன்பமாக்கிக் காட்டியவன். அத்தகு பெருமான்... தன்னை வணங்குவோருக்கு இன்பமருளும் பால கிருஷ்ணனுக்கு இந்த ஆண்டு நம் மரபுக் கணிப்புகளின் படி 11.08.2020, 09.09.2020 என இரு நாள் கொண்டாட்டம்...

கண்ணன் பிறந்த நாளை கொண்டாடுவோம். நம் கவலைகள் ஒழிந்தென்று நின்றாடுவோம்...

 

 

தியாக. மயூரகிரிக்குருக்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction