மகம் எனும் நட்சத்திரத்திற்கு ஒரு விசேசமான தன்மை உண்டு. அது என்னவெனில் ஜகத்தை ஆளும் தன்மை அவர்களிடம் நிறைந்திருக்கும். சிம்மராசியினர், ஆக இருப்பதும் அதற்கு ஒரு காரணமாகும்.
காட்டை ஆளும் சிங்கம் போல் கர்ஜனையோடு வீரத்தினை காட்டும் தன்மை இயற்கையாகவே அவர்களிடம் விளைந்து காணப்படும். துணிச்சலுடன் தைரியமாக வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்திட அவர்கள் செயல்களில் ஒரு உறுதி பளிச்சிடும். இருபத்தேழு நட்சத்திரங்கள் மனிதருடன் தொடர்பு பட்டதாக சோதிடவியலாளர்கள் கூறுவர். அதாவது குழந்தைகள் பிறந்ததும் அவர்களின் பிறந்த நேரத்தை வைத்து அவர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் என்று இந்துக்கள் சோதிடம் மூலம் அறிந்துகொள்வர்.
இருபத்தேழு நட்சத்திரங்களில் திரு என்று முன்னுக்கு வரும் திருவாதிரை, திருவோணம் இரண்டுமே தெய்வங்களுக்கு ஒப்பானவை. திருவாதிரை பரம் பொருளாகிய சிவனார்க்கும் திருவோணம் விஸ்ணுவுக்கும் விசேசமாக வழிபாடாற்றுவர். ஆனால் ரோகிணி எனும் நட்சத்திரம் கிஸ்ணருக்கு பிரியமானது. பூரம் எனும் நட்சத்திரத்தில் ஆண்டாள் அவதரித்தார். சித்திரை நட்சத்திரத்தில் சித்திரகுப்தன் அவதரித்தார். இப்படி இறை நட்சத்திரங்களாக தெய்வங்களும் தேவர்களும் அவதரித்துள்ளனர். அவர்கள் உயிர்களுக்கு அருள் புரியவும் அன்பை நிலைநாட்டவும் இப்பூவுலகில் எங்கும் நீக்கமற நிறைந்து காண்பர். நம்பிக்கை உள்ளவர்க்கும் இல்லாதவர்க்கும், உள்ளவராயும், நம் உள்ளே உறைபவராயும் இல்லாதவராயும் இருப்பர். அப்படி மாசில்லாத பழுது இல்லாத சிவம் எமது ஜீவனுள் உறைந்து உள்ளார்.
அப்படி உள்ளே இருப்பவரை வெளியே தேடிக் கொண்டிருக்கிறோம். மானிடராகிய எமக்கு எல்லாவற்றையும் அறிந்து கொள்ள ஆறாம் அறிவை அதாவது பகுத்தறிவை எம்மை படைத்த சக்தி எமக்கு கொடுத்துள்ளார். எனினும் நாம் இருக்கும், இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கேயோ அலைந்து திரிகின்றோம். பாவவினைகளைச் செய்து பாவத்தை கூட்டுகிறோம். புண்ணியம் செய்து ஈசன் கழலினை அதாவது அவன்பாதங்களே சரணாகதி என வணங்குவோம். அதற்கெனவே மாசிமாதத்தில் மகம் எனும் நட்சத்திரதினத்தில் நடராஜப்பெருமான் ஆனந்ததாண்டவம் ஆடுகின்றார். இவ்வுலகம் எனும் நாடக மேடையில் நாம் எல்லோரும் ஈசனின் விளையாட்டுப் பொம்மைகள் அவர் எம்மை ஆட்டி வைக்கிறார். நாமும் ஆடுகிறோம். அவரின் அசைவில் இவ்வுலகம் அசைகிறது. எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டவர். தாய்மையானவர்.
ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிர்களிடமும் மாசு மறுவற்ற அன்பு செலுத்தும் ஈசன் ஒருமுறை காட்டில் குட்டிகளுடன் வசித்து வந்த பன்றி ஒன்று வேடனின் அம்பு பட்டு இறந்து விடுகிறது. அக்குட்டிகள் தாய்ப்பன்றி இறந்தது கூட தெரியாது தாயின் மடியில் பாலைக் குடிக்க முயற்சிக்கின்றன .தாய்ப் பால் வராது பசியில் துடித்து அழுதன. உடனே சிவபெருமான் தாய்ப்பன்றியாக உருமாறி அக்குட்டிகளுக்கு பால்கொடுத்து அவற்றைக் காப்பாற்றினார். இப்படி ஆட்டுவிக்கும் ஈசன் மனிதர் மட்டும் இல்லாது உலகத்தின் உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பைச் செலுத்துபவர். கருணையுள்ளம் படைத்ததினாலேயே அவர் இறந்த தாய்ப் பன்றிக்குப் பதிலாக பன்றியாக உருவெடுத்து குட்டிகளுக்கு பால் கொடுத்து அவர்கள் பசியை போக்கி அருள் செய்தார்.
"சிவாய நம என்று சிந்தித்து இருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை" - ஆன்றோர் இறைநம்பிக்கை கொண்டு கூறிய வாக்கு. சிவாய நம எனும் பஞ்சாட்சரம் நமது வாழ்வில் அட்சரம் ஆக விளங்கி எம்மைக் காப்பாற்றி, வருந்தி துன்புறும் உயிர்கள் அனைத்தையும் காத்து படி அளக்கும் பரமன்.
பரமனவன் மாசில்லாது எம்மைக்காப்பது போலவே திருமுறைகளாக வகுத்து தேவாரங்கள் பாடிய நால்வரில் திருநாவுக்கரசரையும் மாசில்லாது காத்தருளினான். எப்படியெனில் நாவுக்கரசர் இந்து சமயத்தை மறந்து சமண சமயத்தில் சிறிது காலம் தருமசேனர் எனும் பெயரில் இருந்தார். சமண மதத்தை பரப்பி இருந்த காலமதில் நாவுக்கரசருக்கு சூலை நோய் ஏற்பட்டு அதை மாற்ற முடியாது தவித்தார். அந்நேரம் சிவனருளாலே விபூதி தமக்கையாரால் உடலெங்கும் பூசி சிவபெருமானை வழிபட நோய் நீங்கியது. சமணர்களால் தீர்க்கமுடியாத நோய் சிவசின்னமாகிய விபூதியைத்தரித்ததும் உடனே நீங்கி விட்டது. அதனால் சைவ சமயத்திற்கு மாறிவிட்டார். ஆனாலும் அப்பரடிகள் உள் மனதில் சமணர்களோடு கூடி அவர் தம் சோற்றைப்புசித்ததால் தன் உடம்பு மாசு பட்டது எனக்கருதினார். இந்தமாசைப் போக்க வேண்டும். இந்த மாசும் தூசும் போக்க இரு வழிகள் உண்டு. ஒன்று நீரால் கழுவுதல், மற்றது தீயால் சுட்டெரித்தல் இதில் நீரால்கழுவ திருக்கெடல் நதியில் நீராடி மாசுதூசு போக்கினார். ஆனாலும் அவர் உள்ளத்தில் எஞ்சிய மாசும் பாவமும் சுட்டெரிக்க எண்ணினார்.
பெண்ணாடகம் எனும் ஊரில் திருக்கெடில் நதிநீராடிய அப்பர், அவ்வூரின் சுடர் கெரிமுத்தீசர் என அழைக்கப்படும் சிவனைத் தொழுகிறார் அவரடி வணங்கி விண்ணப்பம் செய்கிறார். நாவுக்கரசர் பாடுவார் பணிவார் பின்விண்ணப்பம் செய்வார், நாயன்மார்கள் பாடிய தமிழ் தேவாரங்களுக்கு அடியவனாகிய நம்பெருமானும் அடிமை. அவர்கள் கேட்பது எது எனத்தெரிந்தும் அறிந்தும் அறியாதவராய் வீற்றிருப்பார். தூங்கானை மாடத்தில் வீற்றிருக்கும் சுடர்க்கொழுந்தீசரைப் பார்த்து வேண்டினார் நாவுக்கரசர், "பெருமானே உம்மிடம் ஒரு விண்ணப்பம்" என்றார்.
அதற்கு ஈசன் "நீ என்னை அப்படி அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்காத முற்றும் துறந்தவனல்லவா அப்படி என்ன விண்ணப்பம்?"
"ஆண்டவனே என் உயிர் உடலில் இருக்கவேண்டுமா? இல்லையா?" , உமது விருப்பம் எதுவென்று கூறும்?" அப்பர் சிவனிடம் கேட்டார்.
"அப்பரே உன்வாயால் செந்தமிழ்பதிகம் நான் நிறையக்கேட்கவேண்டும். நீ ஆற்றவேண்டிய உழவாரப்பணியும் சிவப்பணியும் நிறைய உள்ளதே, அதற்கு நீண்டநாள் உன் உயிர் இவ்வுடலில் இருக்கவேண்டும் அதிலே உனக்கு என்னசந்தேகம்?" சிவனும் உரைக்க
"எனுடலில்லுயிர் இருக்கவேண்டும் என்பது உமது விருப்பமாயின் எனது தோளில் இடபச்சூலக்குறி (முத்திரை) பதிக்க வேண்டும். நீரே அதற்குகுகந்தவர் அதனாலேயெ உம்மிடம் விண்ணப்பித்தேன்".என்று அப்பர் கூறியதும் அகம் குளிர்ந்து அவர் மாசு நீக்கிட சிவகணம் அச் சூலக்குறிகளை பொறிக்கும் எனக்கூறி அவற்றை நாவுக்கரசர் தோளில் பொறிக்கச் செய்தார்.
இப்படியாக மாசு நீங்கிய நாவரசனும் பலதலங்கள் தோறும் சென்று பதிகங்கள் பலபாடி தில்லையம்பலத்தில் நின்றாடும் நடராஜப்பெருமானின் தரிசனம் மாசிமக நன்னாளில் காண்பதற்கு சென்று பெரியதிருத்த்தாண்டகம், திருவிருத்தம், திருநேரசை, திருக்குறந்தொகை என பலபதிகங்களை நாவுக்கு சுவையாக செவிக்கு இனிமையாக ஆடவல்லான் தில்லையம்பலக்கூத்தன் அடிபணிந்து மகிழ்ந்து துதிசெய்தார். கன்னித்தமிழால் கல்லும் கரையும் தமிழ்பாடியவர் நாவுக்கு அரசர் என இறைவனால் சிறப்பு பெற்றவர் அவர்பாடல்கள் பாடி சிவனை வணங்க எம்மை மாசில்லாது வாழவைப்பார். சம்பந்தரும் மாசில்லாத பெருமானே என சிவனை "வாசிதீரவே காசு நல்குவீர் மாசின் மிழலையீர் ஏசவில்லையே...." என்று அவர்பாடிய பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆகவே நாமும் மாசி மகநன்னாளில் இறைசக்தி பெற்று வழிபடாற்றுவோம். நாவிற்கு சுவை உணவு மட்டுமல்லாது அருள் புகட்டும்வேதமும்,தமிழும் கற்று இனிமை இசையில் இன்நாவால் பாடி சுவை பெறுவோம்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    