free website hit counter

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை : ஓவியர் ஆசை இராசையா - பகுதி 3

ஆவணம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிறந்த மனிதனை உருவாக்குவது கலை, அனைவருக்குள்ளும் கலையுணர்வு இருக்க வேண்டும் என்கிறார் இலங்கையின் ஓவிய கலை வடிவ வரலாற்றில் முக்கியமான இடத்தினை வகிப்பவர்களில் ஓருவரான ஓவியர் ஆசை இராசையா.

வடக்கிலிருந்து வெளிவந்த ஓவிய ஆசான்களில் இராசையாவின் இடத்தினை தற்போது வரையில் பிரதியிட யாருமில்லை.

இன்றைக்கும், யாழ். நுண்கலை பீடத்தில் வருகை தரு விரிவுரையாளராக ஓவியம் பயிலும் மாணவர்களுடன் கோடுகளினூடும், வண்ணங்களினூடும் மனங்களை ஆட்கொள்வது பற்றி போதித்துக் கொண்டிருக்கிறார். யாழ்ப்பாணத்தின் அச்சுவேலியைப் பிறப்பிறமாக கொண்ட ஓவியர் ஆசை இராசையா,  தற்போது நல்லூரை வசிப்பிடமாக கொண்டிருக்கிறார்.  அவரின் ஓவியத்தின் மீதான காதல் பற்றி, மகள் காயத்திரியுடன் உரையாடுகிறார்.

ஓவியத்தின் மீது, பாரம்பரிய கலை வடிவங்களின் மீது அக்கறைகொண்டவர்களுக்கும் - ஒவியம் பயிலும் மாணவர்களுக்கும் இந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமையும் இந்த உரையாடலை 4தமிழ்மீடியா வாசகர்களுக்காகப் பதிவு செய்தவர் புருஜோத்தமன் தங்கமயில். உரையாடலில் பங்கு கொண்ட அனைவருக்குமான நன்றிகளுடன் - 4Tamilmedia Team

ஓவியர் ஆசை. இராசையா நேர்காணல் பகுதி 3 (பகுதி 2) (பகுதி 1)

காயத்திரி: தமிழர்களின் முப்பது வருட இன்னல்கள் தொடர்பில் பதிவுகளை மேற்கொண்டிருக்கிறீர்களா?

இராசையா: நாம் வாழும் சூழல் எங்களுடைய சுதந்திரமான கருத்தை வெளிப்படுத்தக்கூடிய வகையில் இல்லை. நாங்கள் கண்டுண்டிருக்கின்றோம். அந்த யாதார்த்ததின் அடிப்படையிலானால் எங்களின் இன்னல்களை அதிகளவில் பதிய முடியாமல் போயிருக்கிறது. ஆனாலும், எங்களுடைய போராட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகளைக் குறித்து ‘சிலுவை சுமத்தல்’ என்கிற ஓவியத்தை வரைந்திருக்கின்றேன். அது கலைமுகம் பத்திரிகையில் வெளிவந்திருக்கிறது. அதுபோல, ‘பாலன் பிறப்பு’ என்கிற தலைப்பில் இடப்பெயர்வுகளைச் சந்தித்து நிற்கிற கர்பிணிப் பெண் பிள்ளையைப் பெற்றெடுக்கின்ற வலியின் ஆழத்தைக் குறிக்கும் ஓவியமும் என்னால் வரையப்பட்டது. அது பரவலாகப் பாராட்டும் பெற்றது. அத்துடன் சுனாமி காலத்தில் என்னால் வரையப்பட்ட சுனாமியின் அவலத்தைக் குறித்து ஆக்கமும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது.

காயத்திரி: ஓவியத்துறையில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றிருக்கிறதா?

இராசையா: ஓவியர் ஆசை இராசையாவுக்கு அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. அது தொடர்பில் எனக்கு ஆத்ம திருப்தி இருக்கிறது.

காயத்திரி: இலங்கையில் கலைஞர்களுக்கும், கலைகளுக்கும் ஊடகங்களின் ஒத்துழைப்பும் அங்கிகாரமும் எப்படியிருக்கிறது?

இராசையா: உண்மையிலேயே கலைகளுக்கும், கலைஞர்களுக்கும் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவு; குறைவு. பத்திரிகைகளோ, மற்றைய ஊடகங்களோ அவற்றை பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. ஆனாலும், சில பத்திரிகைகளில் என்னுடைய ஓவியங்கள் சிறப்பாக வந்திருக்கின்றன. அதற்கான பாராட்டுதல்களையும் பெற்றிருக்கின்றேன்.

காயத்திரி: ஓவியத்தின் இரசனை, ஆளுமைகளை எம்முடைய சூழல் அதிகளவில் கொண்டாடுவதில்லை. இந்த நிலையில், அதனை நீங்கள் வளர்த்தெடுப்பதற்கு என்ன முன்னெடுப்புக்களை செய்து வருகிறீர்கள்?

இராசையா: கலையுணர்வைப் பொறுத்தவரை அது ஒவ்வொருவருக்கும் இயல்பாக இருக்க வேண்டியது. எம்முடைய இலக்கியங்களிலும், பரிணாம வளர்ச்சியிலும் கலைகள் முக்கியத்துவமாக இருக்க வேண்டும். ஓவியங்களின் பங்கே ஆதியில் இருந்து தொடர்கிறது. மனிதன் பேச ஆரம்பிக்க முன்னரே குகைகளிலும் மரங்களிலும் ஓவியங்களையும், சிற்பங்களையும் செய்து வைத்திருக்கின்றன். இதன் தொடர்ச்சியே இன்றும் தொடர்கிறது. இன்றும் எனக்கு ஆச்சரியமூட்டுபவை ஆதி மனிதன் வரைந்த இயல்பூக்கமுள்ள ஓவியங்கள். அதன்படியைத் தொட்டாலே நாம் சிறந்த ஓவியர்களாக வர முடியும். அதுபோல, இயல்பிலேயே கலைகள் மீதான இரசனையையும், உணர்வையும் பெற்றுக்கொள்ள முடியும். அதனை திணிக்க முடியாது. அப்படி திணித்தாலும் அதனை வளர்த்துக்கொள்ள முடியாது. ஆனாலும், சில ஆர்வத்தூண்டல்களை வேண்டுமானால் செய்யலாம்.

காயத்திரி: ஓவியம் தவிர்ந்த விடயங்களில் உங்களின் தனிப்பட்ட ஆர்வம்? (எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது பலர் சொல்லியும் இருக்கிறார்கள். நீங்கள் கவிதைகளை எழுது வந்திருக்கிறீர்கள். குறிப்பாக நான் பிறந்த தருணத்தில் வைத்தியசாலையில் வைத்து கவிதை எழுதியதையும் அறிவேன்.)

இராசையா: கலைஞராக இருக்கின்ற ஒருவருக்கு பல கலைவடிவங்களின் மீதும் ஈடுபாடு இருப்பதை தவிர்க்க முடியாது. இளம் வயதிலிருந்தே எனக்கு கவிதை உள்ளிட்ட இலக்கிய கலை விடயங்களில் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது. அது, இன்றுவரை தொடர்கிறது. நான் றோயல் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் தையல் கலையிலும் சிறந்து விளங்கியிருக்கிறேன். அந்த தருணத்தில் றோயல் கல்லூரியின் உத்தியோகஸ்தர்கள் பலரும் என்னுடைய வாடிக்கையாளர்களாக இருந்துள்ளனர். அதுதவிரவும், கைப்பைகள் வடிவமைப்பிலும் ஆர்வம் இருக்கின்றது. ஆனாலும், கழுத்திலே ஏற்பட்ட நோயினால் சில விடயங்களைத் தொடர்ந்து செய்ய முடியவில்லை. ஏனெனில், கழுத்தினை அதிகமாக அசைக்க கூடாது என்கிற வைத்தியர்களின் அறிவுறுத்தல் இருக்கின்றது.

அத்துடன், புகைப்படத்துறையிலும் எனக்கு ஆர்வமிருந்தது. 1983களின் பின்னர் சிறுது காலம் தொழில்முறை புகைப்படக்கலைஞராகவும் இயங்கினேன். ஆனாலும், அதில் இருக்கின்ற சில நடைமுறைச் சிக்கல்களினால் தொழில்முறையில் தொடர முடியவில்லை.

கவிதையில் எனக்கு சிறிய வயதிலிருந்தே ஆர்வம் வந்தது. மாணவராக இருந்த தருணத்திலிருந்து கவிதைகளை எழுதி வருகிறேன். கவிதை பாடுதல் என்பது நான் அதிகம் வாசிப்பதன் அடிப்படையிலேயே அது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. நடனக்கலைஞர்களுக்கு மேக்கப் கலைஞராகவும் பணியாற்றியிருக்கிறேன். அத்துடன், நடனத்தை விமர்சிக்கும் பணிகளிலும் ஏற்பட்டிருக்கின்றேன்.

காயத்திரி: மகளாக நான் உங்களிடம் கேட்க விரும்புகின்ற கேள்வி. அதாவது ஓவியத்தில் உங்களின் வாரிசாக நான் வரவேண்டும் என்று விரும்பியிருக்கிறீர்களா, அதனை தவிர்த்து நான் நடனத்துறையில் சென்றது தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள்?

இராசையா: உண்மையாகவே ஓவியத்துறையில் நீங்கள் வந்திருந்தால் ஒரு விடயம் நன்மையாக இருந்திருக்கும். அதாவது, என்னுடைய ஓவியத்தின் தொடர்ச்சியாக நீங்கள் இருந்திருப்பீர்கள். என்னுடைய கட்டத்தின் அடுத்த நிலையை நான் கண்டிருக்கலாம். நடனத்துறையில் நீங்கள் பெற்றிருக்கின்ற வெற்றி மற்றும் நடன ஆளுமை குறித்து நான் பெருமைப் பட்டுக்கொண்டிருக்கின்றேன். அது, தொடர்ச்சியாக மேலும் மேலும் வளர்ந்து வரவேண்டும் என்பதே என்னுடைய விரும்பம்.

காயத்திரி: நடனக் கலைஞராக ஒருகேள்வி, ஏதாவது நடனத்தை அல்லது கலை நிகழ்வுகளைப் பார்த்த பின்னர் ஓவியக் கலைஞராக இருக்கின்ற உங்களுக்கு அதனை வரைய வேண்டும் என்று தோன்றியிருக்கின்றதா?

இராசையா: அவ்வாறான சந்தர்ப்பங்கள் நிறைய உண்டு 1973ஆம் ஆண்டு யாழ் இந்துக்கல்லூரியில் பயிற்சி ஆசிரியராக இருக்கின்ற போது, கலைஞர் வேலானந்தனின் சிவநடனத்தை வீரசிங்கம் மண்டபத்தில் பார்த்த பின்னர் உருவானதுதான் ‘ருத்ரதாண்டவம்’ என்கிற என்னுடைய ஓவியம். அதுபோல, 1974ஆம் ஆண்டு கலைஞர் வீரமணி ஐயா அவர்களின் நெறியாள்கையில் உருவான ‘ஓவியன் கனவு’ நடன நாடகத்தை இலங்கை பூராகவும் நடத்தியபொழுது நானும் அந்தக் குழுவில் அங்கம் வகித்திருந்தேன். அதனையும் வரைந்திருக்கின்றேன். அது மறக்க முடியாதது.

காயத்திரி: கலைஞர்களுடன் வறுமையும் இணைந்திருக்கும் என்ற பொதுவான பார்வை இருக்கின்றது. இதுதொடர்பில் என்ன நினைக்கிறீர்கள்.

இராசையா: அப்படி முழுமையாகச் சொல்ல முடியாது. கலைஞர்களில் எத்தனையோ இலட்சாதிபதிகள் இருந்திருக்கிறார்கள். பிக்கஸோவிலிருந்து பலரை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனாலும், நலிந்த கலைஞர்களும் எம்மத்தியில் அதிகமான இருக்கவே செய்கின்றனர். அதற்கு அவர்களின் கலையை தொழில்முறையில் எம்முடைய சமூகம் கொண்டாடாமல் விட்டதும் முக்கியமான காரணம்.

காயத்திரி: எனக்குத் தெரிந்த வரையில் உங்களைச் சுற்றி அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். உறவினர்கள் உங்களிடம் ஒரு இடைவெளியை பேணுகின்றனர். ஆனாலும், எனக்கு ஞாபகமிருக்கிறது. நாங்கள் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த காலங்களை, அதிலிருந்து விலகியிருப்பதற்கான காரணங்கள் என்ன?

இராசையா: கலைஞனாக இருக்கின்றவன் பகுத்தறிவுவாதியாகவும் இருக்கவேண்டும். அதிக மூடநம்பிக்கைகள் இருக்கின்ற இடத்தில் கலைஞனால் இருப்பது சாத்தியம் இல்லை. என்னுடைய உறவுகளும் அந்த மூடநம்பிக்கையில் நாட்டம் கொண்டிருக்கின்றபோது என்னைப் புரிந்து கொள்வது மிகவும் சிரமம். எனவே, அவர்களுடன் தொடர்ந்தும் இருப்பது சாத்தியங்கள் இல்லை. அத்துடன், என்னுடைய உறவுகள் அச்சுவேலியை சேர்ந்தவர்கள். அந்தச் சமூகத்தில் பொருள்- பண்டங்கள் அதிக தாக்கத்தைச் செலுத்தும். செல்வந்தராக இருக்கின்றவர்கள். சமூகத்தில் அதிகம் தாக்கம் செலுத்துபவராகவும் இருக்கின்றார். அதனாலும், என்னால் அதிகம் அவர்களுடன் இருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், அவர்களுடன் என்னுடைய உறவு மிகவும் சுமூகமாகவே இருக்கின்றது.  நண்பர்களின் வட்டம் பெரிதானதுக்கு என்னுடைய ஆளுமையைத் தெரிந்துகொண்வர்கள் என்னுடன் இருப்பதே முக்கியமான காரணம்.

காயத்திரி: புதிதாக ஒருவர் ஓவியத்துறையில் வெற்றிபெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

இராசையா: கட்புலன் சார்ந்த கலைக்குள் புகுந்து கொள்கின்றேன் என்ற நினைப்பை அவர் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுவே, அவரை ஆக்கத்திறனுள்ள கலைஞராக உருவாக்கும். அத்துடன், ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களை சரியாக வழிகாட்ட வேண்டும்.

காயத்திரி: யாழ் மண்ணில் ஓவியக்கலை மற்றும் ஓவியர்களின் நிலை தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள்?

இராசையா: குறிப்பாக விமர்சகர் என்ற நிலையில் இருந்து பேசுகின்றேன். வெளிநாட்டிலிருந்து வரும் கலைஞர்கள் யாழ்ப்பாணத்தின் கலை வடிவங்களை பார்த்துவிட்டு இவ்வளவுதானா?, என்கிற கேள்விகளை கேட்கின்றனர். அதிகம் கலையுணர்வு இல்லாத படைப்புக்களை காண முடிகின்றது. துறைசார் கலைஞர்களைக் கொண்டு ஓவியங்களையோ, சிற்பங்களையோ வடிவமைக்கும் பழக்கம் யாழ்ப்பாணத்தில் குறைவு. யாழ்ப்பாணத்தில் கலைஞர் ரமணி மட்டுமே சிறப்பான ஓவியங்களையும் சிற்பங்களையும் செய்து வருகின்றார். அவரின் படைப்புக்கள் மிகவும் தனித்துவம் பெற்றவை. தந்தை செல்வாவின் சிலையையும் ரமணியே வடித்திருக்கின்றார். அதுவும் சிறப்பாக இருக்கின்றது.

புருஜோத்தமன் தங்கமயில் (ஆசிரியபீடத்தின் கேள்வி):

இந்த மண்ணில் கலைத்துறைகள் சார்ந்த உங்களை வெகுவாகப் பாதித்த அனுபவங்கள் - ஏதும் இருப்பின் பகிர்ந்து கொள்ள முடியுமா?

இராசையா: எனது துறை சார்ந்த அனுபவத்தை விட நடனத்துறை சார்ந்த சில சம்பவங்கள் என்னை மிகவும் பாதித்தவை அது சம்பந்தமாகக் குறிப்பிடுவது  இந்த மண்ணில் கலைச் சூழல் எவ்வளவு பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது. என்பதைக் காட்டுவதற்குப் போதுமானது என நினைக்கிறேன்.

மனித சமுதாயத்தின் உன்னதநிலை எது என்றால் அது  கலை உணர்வு தான். பிற உயிரினங்களை விட மனிதன் மேம்பட்டு நிற்பதும் இந்தக் கலையுணர்வில் தான.; உள்ளத்து எழும் உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இந்தக் கலை மிகவும் துணை நிற்கிறது.  நாடகம், இசை, நடனம், ஒவியம், சிற்பம் எனப் பலவிதமான கலை வடிவங்க@டாக நமது உணர்வுகளை  வெளிப்படுத்திக் காட்ட முடிகிறது. அதற்கு மொழி ஒரு தடையல்ல, ஆகையால் அதுவே ஒரு உலக மொழியாகிறது.

ஆத்மாவைப் பிணைத்து அடிமைப்படுத்தும் அந்த சக்தி வாய்ந்த இந்தக் கலை தூய்மையானது, தெய்வீகமானது ஆன்ம ஈடேற்றத்துக்கு அடிகோலுவதும் இதுவே. ஆதனாற்றான் இறை வழிபாடும்  கலைப்பணியும் இணைந்து காணப்படுகிறது எனலாம். இரக்க சுபாவமும் மற்றவர்களுக்கு உதவும் பண்பும் சகோதரத்துவமும் உள்ளவனே மனிதன். அப்படியான அதி உன்னதமான மனிதநேயப் பண்பை வளர்த்தெடுப்பதற்கு இந்தக் கலையுணர்வே முக்கிய பங்கு வகிக்கிறது. இது மனிதனிடம் இருக்கும் ஒரு இயல்பூக்கமான உணர்வு என்பதற்கும் சரித்திரம் சான்று பகர்கிறது குகையில் வாழ்ந்த மனிதன் விட்டுச் சென்ற பல குகை ஒவியங்கள் எம்மை வியப்பில்  ஆழ்த்துகிறது. மொழி உருவாகுவதற்கு முன்னரே அவன் ஒவியம் வரைந்துள்ளான். தாளம் போட்டு ஆடலை நிகழ்த்தியுள்ளான். தனது உணர்வைப் பிறருக்குப் புரியவைப்பதற்கு சைகைளோடு இந்தக் கலைகளையும் அவன் பயன்படுத்தியுள்ளான். இவை ஒரு மொழியாக அவனுக்குக் கைகொடுத்திருக்கிறது.

காலகெதியில் மனிதனின் பரிணாம வளர்ச்சியில் இவையெல்லாம் மாற்றமடைந்து நெறிப்படுத்தப்பட்டு அற்புதமான கலைவடிவங்களாகியுள்ளன. இதன் முக்கியத்துவம் உணரப்பட்டதன் விளைவே இன்றைய பாட விதானங்களில் கட்டாயமான பாட நெறியாக்கப்பட்டுள்ளது எனலாம். இப்படிப்பட்ட அதி உன்னதமான கலையை நிகழ்த்தும் கலைஞன் எப்படி இருக்கவேண்டும்?

அவன் மனித நேயமிக்கவனாகவும் மனிதப்பண்புடையவனாகவும் இருக்க வேண்டும் என்பது முக்கியமாக உணரப்படுகிறது ஆயினும் படுபாதகமான  செயல்களையும் சர்வசாதாரணமாகச் செய்பவர்களாகக் கலைஞர்களும் இருக்கிறார்கள் என்பதற்குச் சான்று பகரக்கூடியதாக அண்மையில் நடைபெற்ற ஒரு நூற்றாண்டு விழாவில் ஒரு மூத்த கலைஞரின் செயற்பாடுகள் அமைந்திருந்தன. என்பதை எண்ணும் போது மனதுக்கு வேதனையாக உள்ளது. (இந்த மூத்த கலைஞர் இந்நிகழ்வின் நிர்வாக சபை உறுப்பினராகச் செயற்பட்டுள்ளார். நிகழ்ச்சிகளை  ஒழுங்குபடுத்திய ஆசிரியருடைய செயற்பாட்டில் சில கலைஞர்களுடைய நிகழ்வுகளுக்கு எதிராகக் கண்டித்து அவர்களை இந்நிகழ்வில் கலந்து கொள்ள விடாமல் முட்டுக் கட்டை போடமுயற்சித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது) இவர்களைக் கலைஞர்கள் என்று எப்படி அழைப்பது? இவர்கள் கலைஞர்களாயின் கூட இருந்து குழிபறிக்கும் கயமைத்தனம் எப்படி இவர்களிடம்  குடிபுகுந்தது? எதிரியாயினும் நல்லது செய்யின் அவன் பாராட்டப்ப வேண்டியவன். இது மனிதப் பண்பு. ஆனால் நேரிலே சிரித்துப் பேசி மறுபுறத்தில் அவர்களுக்கெதிராக இடைஞ்சல் செய்பவர்களை எப்படி அழைப்பது? பல ஆற்றல் உள்ள இளைய தலைமுறையினர். எம்மத்தியில் உள்ளனர். ஆயினும் அவர்களின் ஆற்றலும் அதன் மூலம் அவர்கள் பெறும் பேரும் புகழும் இவர்களைச் சீற்றமடைய வைக்கிறது. எப்படியும் அவர்களை மட்டந்தட்டி அவர்களை தலையெடுக்கவிடாமல் செய்யவேண்டும். என்பதில் குறியாக உள்ளனர். ஆற்றல் உள்ள கலைஞர்கள் எங்கே இருந்தாலும் - அவர்கள் கொழும்பிலிருந்து வந்திருந்தாலுங்கூட - அவர்களை வரவேற்று ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்த வேண்டியது.  ஒவ்வொரு கலைஞனின் பணியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து. அவர்கள் வந்தால் தமது முக்கியத்துவம் பறி போய் விடுமோ என்ற ஆதங்கத்தில் அவர்களை வரவிடமால் செய்யும் எத்தனங்கள் உண்மையில் எம்மை வெட்கித் தலைகுனிய வைக்கிறது. தமது மாணவர்களைப் பிற கலைஞர்களிடம் பயிலவிடாமல் தடுப்பதும் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களைப் பிற கலைஞர்களிடம் பயில விடாமல் தடுப்பதும், புதுமையாகச் சிந்தித்து புதுமையைப் படைக்க முனையும் கலைஞர்களை அப்படிச் செயற்பட விடாமலே முட்டுக்கட்டை போடுவதும் தொடர் கதையாகியுள்ளது. அப்படி மீறி அந்தப் பிள்ளைகள் செயற்பட்டால் அவர்களின் பரீட்சைப் பெறுபேறுகளில் கைவைப்பதும் பொதுப் பரீட்சைகள் போட்டித் தேர்வுகள் ஆகியவற்றுக்குரிய மதிப்பீட்டுப் புள்ளிகளைத் தமக்குச் சார்பானவர்களுக்குக் கூடுதலாக வழங்குவதும் என்று இவர்களுடைய அநீதிச்செயல் கோலோச்சிக் கொண்டிருப்பதுபலராலும் எடுத்துக் காட்டப்படுகின்றமை இவர்கள் யார் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த மண்ணின் அவலமான சூழலிலும் தமது பொருள் பண்டங்களை விற்றும் கடன்பட்டும் மிகுந்த சிரமத்தின் மத்தியிலும் பலப்பல பட்டப் படிப்புக்களை மேற்கொண்டு திரும்பியுள்ள பல இளைய தலைமுறையினர் எதிர் காலக் கலைவளர்ச்சிக்கு நம்பிகை நட்சத்திரங்களாகத் திகழ்கிறார்கள். ஆயினும் அவர்களுக்குரிய வாய்ப்புக்கள் பறிக்கப்படும் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் சகல மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றமை. கண் கூடாக நாம் காணும் அவலம் அவர்களுடைய ஆற்றுகை சரியில்லை. என்று பிரச்சாரம் செய்வதும் அவர்களுக்கு வாய்ப்புக்கிடைக்கவிடாமல் இடைஞ்சல் செய்வதும் உண்மையில் ஒரு பெருங் கலைஞர்களுக்குரிய பண்பல்ல கலை உலகில் போட்டி இருக்கவேண்டும். என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் பொறாமையின் நிமித்தம் அந்தக் கலைஞர்களுக்கு எதிராகச் சதி செய்வது இந்த மண்ணின் கலை வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல இப்படிப்பட்ட குரூர மனப்பான்மை உள்ள கலைஞர்கள் (?) உண்மையில் தம்மையும் அழித்து இந்த மண்ணின்  கலைத்  தரத்தையும் குறைய வைப்பதற்கே அடிகோலுவர். இந்தப் பெருங் குறைபாடு உடனடியாகவே களையப்படவேண்டியது மிக முக்கியமாக உணரப்படுகிறது.

அண்மையில் ஒரு பட்டதாரிக் கலைஞரால் ஆற்றுகைப்படுத்தப்பட்ட ஒரு நடன அளிக்கைக்கு அந்த ஊரிலிருந்து எந்த ஒரு நடனக் கலைஞரோ மாணவர்களோ வருகை தரவில்லை. என்று அறியக்கிடைக்கிறது. ஒரு கலைஞனுடைய நிகழ்ச்சியை இன்னெரு கலைஞர். பார்ப்பதில்லை. என்றும் அவர்களின் மாணவர்களையும் அதைப் பார்க்க அவர்கள் அனுமதிப்பதில்லையென்றும் ஒரு  அதிர்ச்சியானசெய்தியை அந்த ஊர் புத்திஜீவி ஒருவரிடமிருந்து அறியக் கிடைத்தது. உண்மையில் இவர்கள் எங்கே செல்கிறார்கள். தம்மைவிட மேம்பட்டவர்கள் யாருமில்லை என்ற தவறான எண்ணம் இவர்களைக் கிணற்றுத் தவளையாகவே வாழ வைத்துள்ளதை இவர்கள் உணரவேண்டும்.

யதார்த்தத்தை புரிந்து கொள்வோமாயின் அடுத்த கலைஞனிடம் பெறாமை கொள்வதற்கு ஒன்றுமில்லை உண்மையான கலைஞன் பகுத்திறவு வாதியாகவும். படைப்பாற்றல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.  குருவிடம் கற்றதை அப்படியே மேடையில் ஒப்பேற்றுவது ஒரு கலைஞனுடைய பணியல்ல. குருவிடம் கற்ற அடிப்படைக் கற்றலிலிருந்து புதிய கோணத்தில் சிந்தித்துப் படைக்க முற்படுபவன் எவனோ அவனே உண்மையான கலைஞன் என்று சொல்லத் தக்கவன். இன்று உலகிலே   பேசப்படும் கலைஞர்கள் ஒவ்வொருவரையும்- அவர்கள் நாடகமாகட்கும், நடனமாகட்டும், ஓவியமாகட்டும், இசையாகட்கும் சிந்தித்துப் பார்ப்போமாயின் உண்மை விளங்கும். ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு வகையான தனித்துவப் பாணி காணப்படுவதை உணரலாம். ஒவ்வொரு கலைஞனிடமும் அவனுக்கேயுரிய தனித்துவமான பாணி (ளவலடந) இருக்கவேண்டியது. முக்கியம் சுயபாணி என்பது நிச்சயமாக ஒரு கலைஞனிடம் இருக்கவேண்டிய பண்பு. அது இல்லாதவன் கலைஞன் என்று அழைக்கத் தகுதியற்றவன். என்பது ஒவ்வொருவரும் கருத்திற்கொள்ளவேண்டிய முக்கிய செய்தி பழம் பெருமை பேசியே காலங்கழிப்பதும் அதனூடாகத் தம்மை நிலை நாட்ட முனைவதும் நீண்ட காலத்துக்கு நிலைக்கக் கூடியதல்ல. திறமை சாலிகள் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய திறமையைப் பாராட்டாமல். வலிந்து குற்றம் கண்டு பிடிப்பதும் ஏளனமாகப் பேசுவதும் இவர்களுடைய ஆற்றாமையையும் பொறாமையையுமே  பறை சாற்றுகின்றன. என்றால் அது மிகையானதல்ல. இப்படிப்பட்டவர்களுடைய செல்வாக்குகள் சகல மட்டத்திலும் செல்லுபடியாவதும் அதனூடாகப் பெரும் பதவிகளைப் பெற்றுத்தாமும்  தமது அடிவருடிகளும் காரியத்தைச் சாதிப்பதும் இங்கே  நடைபெற்றுவரும் அவலம். போட்டி நிகழ்வுகளில் பாரபட்சமாக  மத்தியஸ்தம் செய்வதும் (உதாரணமாக போட்டிப் பரீட்சைகள் மாகாண மட்டக்கலைப் போட்டிகள்) தம்மிடம் கற்பவர்களுக்கே அதிக புள்ளி வழங்குவதும் என்று இவர்கள்  சர்வசாதாரணமாகச் செய்யும் அநீதியான செயற்பாடுகளை எவ்வளவு காலத்துக்குத் தான் பாராமுகமாக இருப்பது?

இவர்கள் இனங்காணப்படவேண்டியவர்கள். இந்த சமூகத்தைப் பீடித்துள்ள  புற்றுநோயான இவர்கள் ஒதுக்கப்பட வேண்டியவர்கள் இது சம்பந்தமான அதிகாரிகள் பொறுப்பானவர்கள்  இதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைப்பதற்கு உரியசகல நடவடிக்கைகளையும் எடுக்க வெண்டியது காலத்தின் கட்டாயம்.

(முற்றும்)

நன்றி | சேரன் கிருஷ்ணமூர்த்தி, காயத்திரி, மதிசுதா

- 4தமிழ்மீடியாவுக்காக : புருஜோத்தமன் தங்கமயில்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction