free website hit counter

நான்கு பந்துகளில் நான்கு விக்கட் ; மாலிங்காவுடன் இணைந்தார் அயர்லாந்தின் கேர்டிஸ் கேம்பர்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 இம்முறை T20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

அபுதாயில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணிக்கு ஆரம்பம் முதல் மிகப்பெரும் ஏமாற்றமே கிடைத்தது.

அந்த அணியின் ஆரம்ப வீரரான பென் கூப்பர் முதல் ஓவரிலேயே ரன் அவுட் ஆகி வெளியேறினார். மற்றொரு ஆரம்ப வீரரான மெக்ஸ் ஓடவுட் அரைச் சதம் கடந்து 51 ஓட்டங்களை எடுத்த போதிலும், அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்கள் அயர்லாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வேகமாக விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

இதில் குறிப்பாக, போட்டியின் 10 ஆவது ஓவரை வீசிய கேர்டிஸ் கேம்பர், அந்த ஓவரின் 2 ஆவது பந்தில் நெதர்லாந்து அணியின் துடுப்பாட்ட வீரரான கொலின் அக்கெர்மென்னை விக்கெட் காப்பாளரிடம் பிடியெடுக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார்.அதனை அடுத்து வீசப்பட்ட அடுத்த பந்தில் அதிரடி வீரரான ரயன் டென் டஸ்கட்டே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். இதையடுத்து வீசப்பட்ட பந்தில் ஸ்கொட்ட எட்வர்ட்ஸையும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்யவே, அயர்லாந்து சார்பாக ஹெட்ரிக் சாதனை படைத்த முதல் வீரர் என்ற சாதனையை கேர்டிஸ் கேம்பர் படைத்தார்.அத்துடன், T20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட் எடுத்த இரண்டாவது வீரராகவும் கேர்டிஸ் கேம்பர் இடம்பிடித்தார். முன்னதாக 2007 தென்னாபிரிக்காவில் நடைபெற்ற T20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய வீரர் பிரெட் லீ, பங்களாதேஷ் அணிக்கெதிராக ஹெட்ரிக் விக்கெட் எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து வீசப்பட்ட நான்காவது பந்தில் முன்னாள் தென்னாபிரிக்க வீரரும் தற்போது நெதர்லாந்து அணிக்காக விளையாடும் ரோலொப் வேன் டர் மெர்லி போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் சர்வதேச T20 அரங்கில் அடுத்தடுத்து வீசப்பட்ட 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய மூன்றாவது வீரராக கேர்டிஸ் கேம்பர் வரலாற்றில் இடம்பிடித்தார்.

முன்னதாக, 2019இல் அயர்லாந்து அணிக்கெதிராக ஆப்கானிஸ்தானின் ரஷித் கானும், நியூசிலாந்து அணிக்கெதிராக இலங்கையின் லசித் மாலிங்கவும் இவ்வாறு நான்கு பந்துகளில் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர். இவ்வாறு கேர்டிஸ் கேம்பரின் பந்துவீச்சில் நெதர்லாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுக்களைப் பறிகொடுத்து தடுமாறிய போதிலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓடவுட் அரைச் சதம் அடித்து ஆறுதல் கொடுத்தார்.

இறுதியில் நெதர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 106 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.துடுப்பாட்டத்தில் நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மெக்ஸ் ஓடவுட் 47 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.அயர்லாந்து அணி தரப்பில் கேர்டிஸ் கேம்பர் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், மார்க் எடைர் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். அதன்பின் 107 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணியில் கெவின் ஓ பிரையன் (9), அணித் தலைவர் அன்டி போல்பேர்னி (8) ஆகியோர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.அதன்பிறகு 3ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த போல் ஸ்டெர்லிங் – கரெத் டெலனி ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்மூலம் 15.1 ஓவர்களிலேயே அயர்லாந்து அணி இலக்கை அடைந்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அயர்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் கரென் டெலனி 44 ஓட்டங்களையும், போல் ஸ்டெர்லிங் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். போட்டியின் ஆட்டநாயகன் விருது கேர்டிஸ் கேம்பருக்கு வழங்கப்பட்டது.இந்த வெற்றியின் மூலம் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் முதல் சுற்றின், குழு ஏ இற்கான புள்ளிப் பட்டியலில் அயர்லாந்து அணி முதலிடத்தைப் பெற்றுக்கொண்டது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction