15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 68 ரன்களுடனும், விராட் கோலி 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கே.எல்.ராகுல் 36 ரன்னில் ஆட்டமிழந்தார்.
3வது விக்கெட்டுக்கு இணைந்த விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஜோடி 98 ரன்களை சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச்சாளர் ஹரூன் அர்ஷாத் வீசிய கடைசி ஓவரில் சூர்யகுமார் யாதவ் பிரமாதமான 4 சிக்சர்களை பறக்க விட்டார். அத்துடன் 22 பந்துகளில் தனது 6-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார். 20 ஓவர் போட்டியில் அவரது அதிவேக அரைசதம் இதுவாகும்.
இதையடுத்து 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. பாபர் ஹயாத் 41 ரன்னும், கிஞ்சித் ஷா 30 ரன்னும், செஷான் அலி 26 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஹாங்காங் 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று, சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது.
ஆட்டநாயகனாக சூர்யகுமார் யாதவ் தெரிவானார்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    