free website hit counter

Sidebar

18
ஞா, மே
32 New Articles

பிளே ஓபிற்கான வாய்ப்பினை தன் வசப்படுத்தியது ஜப்னா கிங்ஸ்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தம்புள்ளை ஜயன்ட்ஸ் மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின்

14ஆவது லீக் போட்டியில், ஜப்னா கிங்ஸ் அணி 7 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியை பதிவு செய்திருக்கின்றது.

மேலும் இந்த வெற்றியுடன் ஜப்னா கிங்ஸ் அணி, இந்த LPL தொடரில் தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளை பதிவு செய்திருப்பதோடு, தொடரின் பிளே ஒப் சுற்றுக்கு தெரிவாகும் முதல் அணியாகவும் மாறியிருக்கின்றது.

ஜப்னா கிங்ஸ் மற்றும் தம்புள்ளை ஜயன்ட்ஸ் இடையிலான போட்டி இன்று (13) கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இடம் பெற்றிருந்தது.

கடின மழையின் காரணமாக சற்று தாமதித்தே ஆரம்பித்த இந்தப் போட்டியின் நாணய

சுழற்சியில் வென்ற ஜப்னா கிங்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா தம்புள்ளை ஜயன்ட்ஸ் வீரர்களை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தார்.

இதன்படி முதல் துடுப்பாட்டத்தினை ஆரம்பித்த தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி, ஜப்னா கிங்ஸ் அணியின் சுழல் நட்சத்திரமான மகீஷ் தீக்ஷனவினை எதிர்கொள்வதில் தடுமாற்றம் காட்டியது.

அதன்படி தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியினுடைய முதல் விக்கெட்டாக தீக்ஷனவின் சுழலில் வீழ்ந்த நிரோஷன் டிக்வெல்ல வெறும் ஒரு ஓட்டத்தினை மாத்திரம் பெற்றிருக்க, அவரின் பின்னர் களம் வந்த சொஹைப் மக்சூட் ஓட்டமேதுமின்றி ஓய்வறை நடந்தார்.

இதன் பின்னர், மூன்றாம் இலக்கத்தில் துடுப்பாடிய நுவனிது பெர்னாண்டோவின் விக்கெட்டும் தீக்ஷனவின் சுழலில் அவர் வெறும் 2 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பறிபோக தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி, 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

பின்னர் தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியினை அதன் தலைவர் தசுன் ஷானக்க மீட்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் உள்ளடங்கலாக தம்புள்ளை அணியின் மத்திய வரிசை சத்துரங்க டி சில்வாவின் சுழலிற்கு இரையானது. தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் நான்காம் விக்கெட்டாக ஆட்டமிழந்த தசுன் ஷானக்க வெறும் 6 ஓட்டங்களை மாத்திரம் பெற, அதன் பின்னர் சத்துரங்க டி சில்வாவின் விக்கெட் வேட்டைக்கு இரையான ரமேஸ் மெண்டிஸ் 7 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரட்ன ஓட்டங்கள் எதுவுமின்றியும், தரிந்து ரத்நாயக்க வெறும் 14 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இதனையடுத்து தொடர்ந்தும் சரிவில் இருந்து மீளாத தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் பில் சோல்ட் 22 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்கள் பெற்ற வீரராக மாறியிருந்தார். தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணி பெற்ற 69 ஓட்டங்கள் LPL வரலாற்றில் அணியொன்று பெற்ற குறைந்த ஓட்டங்களாகவும் பதிவானது.

ஜப்னா கிங்ஸ் அணியின் பந்துவீச்சில் சத்துரங்க டி சில்வா வெறும் 16 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, மகீஷ் தீக்ஷண 3 விக்கெட்டுக்களைச் சுருட்டினார். இவர்கள் தவிர, வனிந்து ஹஸரங்க, சொஹைப் மலிக் மற்றும் அஷேன் பண்டார ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 70 ஓட்டங்களை 20 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜப்னா கிங்ஸ் அணி போட்டியின் வெற்றி இலக்கினை 7.2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 71 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றியை உறுதி செய்த துடுப்பாட்டவீரர்களில் வனிந்து ஹஸரங்க வெறும் 18 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 37 ஓட்டங்கள் எடுத்தார்.

தம்புள்ளை ஜயன்ட்ஸ் அணியின் சார்பில் இம்ரான் தாஹிர் 2 விக்கெட்டுக்களைச் சாய்த்த போதும், அது பிரயோசமின்றி போயிருந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக ஜப்னா கிங்ஸ் அணியின் சத்துரங்க டி சில்வா தெரிவாகியிருந்தார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula