free website hit counter

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் தலையீடுகளும் இன்றி நடைபெற வேண்டும்: த.தே.கூ

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஹிஷாலினியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்கள் வீட்டிலே பணிபுரிந்து, தீக்காயங்களுக்கு உற்பட்டு, கடந்த 15ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் மரணமும் அதைத் தொடர்ந்து வெளிவருகின்ற தகவல்களும் முழு நாட்டு மக்களுக்கும் மிகவும் வேதனையை அளிக்கின்றதாக இருக்கின்றது.

ஈடு செய்ய முடியாத இவ் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய நாம் தெரிவித்து நிற்பதோடு, அவர்களது துயரில் நாமும் பங்கெடுக்கின்றோம் என்பதனையும் தெரிவிக்கின்றோம்.

இந்த துர் செயலை நாம் மிக வன்மையாக கண்டிப்பதோடு, சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள் எந்தவித தலையீடுகளும் இன்றி நேர்மையான முறையில் இடம்பெற வேண்டும் என்றும் குற்றவாளிகள் யாராக இருப்பினும் அவர்களை வெளிக்கொண்டுவர வேண்டும் என்றும் முறையான தண்டனை வழங்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதனையும் இச்சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் நாட்டு மக்கள் சார்பாக நாம் வேண்டி நிற்கின்றோம்.

வறுமை மற்றும் குடும்ப சூழ்நிலையின் காரணமாக கல்வியை தொடரமுடியாது சிறுவர்கள் பணிக்கமர்த்தப்படுவதும், பல்வேறு வகையான துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களுக்கு சிறார்கள் முகம்கொடுப்பதும் அண்மைய காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருக்கின்றது. இதனை நாம் வன்மையாக கண்டிப்பதோடு சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களது கல்வி உரிமைகள் தொடர்பான நாட்டின் சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தபடுவதனை வலியுறுத்துகிறோம்.

தொடர்ந்தும் எதிர்காலத்தில் இவ்விதமான அசம்பாவிதங்கள் இடம்பெறாது இருக்க அரசு மற்றும் அதிகாரிகளோடு பொதுமக்களும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செல்லப்பட வேண்டியது.“ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction