free website hit counter

இன அழிப்பு தொடர்பில் உண்மையை அறியும் குழுவை ஐ.நா. நியமிக்க வேண்டும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கடிதம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன அழிப்புத் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் பணிக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர். 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையின் கனதியை நீர்த்துபோகச் செய்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான விசமப்பிரச்சாரத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஈடுபட்டிருக்கின்றார் என்றும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இலங்கை அரசு திட்டமிட்ட இன அழிப்பையே வடக்கு-கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்துள்ளது. அதன் ஒரு அங்கமாகவே கடந்த இருபது வருடங்களுக்குள் மாத்திரம் குறைந்தது 15,000 தமிழர்கள் அரச படைகளினாலும் அவர்களால் இயக்கப்பட்டவர்களாலும் வலிந்து காணாமலாக்கப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள் என்பது மட்டுமல்ல 95 வீதமானோர் 16 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஆண்கள் ஆவர். இது ஒரு திட்டமிட்ட இன அழிப்புச் செயல். இந்தத் தொகையைக் குறைத்துவிட இலங்கை அரசு முயற்சிக்கிறது. இதை எவ்வாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை ஆமோதிப்பதன் மூலமும் காணாமல் போனோர் ஆட்கள் பற்றிய அலுவலகப் பொறி முறையை வரவேற்பதன் மூலமும் அங்கீகரிக்கமுடியும்?

இதற்கும் அப்பால், ஆறுமாதங்களுக்கு முன்னர் உள்ளகப் பொறிமுறை படுதோல்வி கண்டுவிட்டது, எனவே ஐ.நா. உறுப்புரிமை நாடுகள் குற்றவாளிகளை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்று போன்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறைகள் ஊடாக விசாரிக்க ஆவன செய்யவேண்டும் என்று கடுமையாகப் பிரேரித்து விட்டு அடுத்த சில மாதங்களுக்குள் தீவில் மனித உரிமைகள் சீரழிந்து செல்லும் நிலையிலும் கொழும்பு அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை ஆமோதிக்கும் நிலையை உயர்ஸ்தானிகர் எவ்வாறு கைக்கொள்ளலாம்?

இலங்கை அரசிடம் ஐ.நா. தன்னிடமிருக்கும் காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான முறையீடுகளை ஏன் ஒப்படைத்தது? இது உறவினர்களுக்கு ஆபத்தானது. இலங்கையின் வடக்கு-கிழக்கில் இருந்து இராணுவத்தை முற்றாக அகற்றவைத்து, ஐ.நா. மேற்பார்வையில் இங்கு பாதுகாப்பை உறுதி செய்தால் மாத்திரமே காணாமலாக்கப்பட்டோரின் விபரங்களை முழுமையாகத் திரட்டமுடியும். காணாமலாக்கப்பட்டோருக்கான நீதி சர்வதேச மட்டத்திலான சுயாதீன விசாரணை மூலம், அதுவும் இன அழிப்புக் குறித்த பார்வையுடனான விசாரணைக்கு உள்ளடக்கப்பட்டதாக, மியான்மார் மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்குக் கையாண்ட அதியுச்ச நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்து அணுகப்பட வேண்டும். எனவே, மனித உரிமைப் பேரவையின் அதியுச்ச நிகழ்ச்சிநிரல் நான்குக்குள் இலங்கையைக் கொண்டுவந்து அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படவேண்டும் என்று தீர்க்கமாகக் கோருகிறோம். இன அழிப்புக் குறித்த உண்மையைக் கண்டறியும் பணிக்குழு ஒன்றை நியமிக்கவேண்டும் என்றும் கோருகிறோம்.” என்றுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction