free website hit counter

அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் - முதல்வர் ஸ்டாலின்

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் ஏப்ரல் 14ஆம் திகதி கொண்டாடப்படும் நிலையில், அவரது பிறந்தநாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “அண்ணல் அம்பேத்கர் வடக்கில் உதித்த சமத்துவ சூரியன்; பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்; சமூகம் ஏற்படுத்திய ஏற்றத் தாழ்வை, கல்வி, சட்டம், அரசியல் எழுச்சி மூலமாக சமப்படுத்திய போராளி; ‘இருட்டறையில் இருக்குதடா உலகம்; சாதி இருக்கிறதென்போனும் இருக்கின்றானே’ என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடைய வரிகளைப்போல, சாதிக் கொடுமையால் இருண்ட உலகத்தைத் தன்னுடைய பரந்த அறிவால், ஞானத்தால் விடிய வைத்த விடிவெள்ளி அண்ணல் அம்பேத்கர் அவர்கள். அவர் வேண்டாததை நீக்கிய சிற்பி; வேண்டியதைச் சேர்த்த ஓவியர்;அண்ணல் அறிவுச்சுடராய் விளங்கி அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துக்கொடுத்தவர். அவருடைய கருத்துக்கள் ஆழமும், விரிவும் கொண்டவை; எதிர்காலத்திற்கு ஒளிவிளக்கு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பாக மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பெரியார் பிறந்தநாளை ‘சமூகநீதி நாளாக’அறிவித்தது போல, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 ஆம் திகதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டுமென்ற கோரிக்கை எழுப்பப்பட்டது.

இந்தக் கோரிக்கையை ஏற்று, ஏப்ரல் 14 ஆம் திகதி இனி சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்றும், சமத்துவ நாள் உறுதிமொழி தமிழ்நாடு முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் மகிழ்ச்சியோடு இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

நேற்றைய கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அண்ணலுடைய முழு அளவு வெண்கலச் சிலையை நிறுவ வேண்டுமென்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் முன்வைத்தார்கள். அந்தக் கோரிக்கையையும் ஏற்று, அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழுஉருவ வெண்கலச் சிலை நிறுவப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction