பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் விஜய் சேதுபதி, தனது படக்குழுவுடன் சென்று அவருடைய இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார்.
தற்போது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகிய மூன்று பேர் இணைந்து நடித்துவரும் ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இந்தப் படத்தை நயன்தாரா தயாரிக்கிறார்.
இப்படத்தின் 80 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில். கடைசி கட்ட படப்பிடிப்புதான் தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசிய விஜய்சேதுபதி, “தற்போது பாண்டிச்சேரியில் படப்பிடிப்புக்கு ரூபாய். 28,000 வசூலிக்கப்படுவதாகவும், ஏற்கனவே 5 ஆயிரம் மட்டுமே வசூலிக்கப்பட்டதாகவும் இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும், எனவே கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும்” இந்த சந்திப்பில் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக விரைவில் பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் ரங்கசாமி பதிலளித்துள்ளார். இந்தச் சந்திப்பின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. விஜய்சேதுபதியின் கோரிக்கையை அறிந்த நெட்டிசன்கள் ‘தயாரிப்பாளர் நயன்தாரா என்ன வறுமையில் வாடுகிறாரா?’ என்று விஜய்சேதுபதிக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    