நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவன தயாரிப்பில் நடிகர் அஜித் உள்ளிட்ட பலர் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் அண்மையில் வெளியானது.
இந்தத் திரைப்படத்தில் ஒத்த ரூபாயும் தாரேன், இளமை இதோ இதோ, ஏஞ்சோடி மஞ்சக்குருவி ஆகிய பாடல்கள் இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதியைப் பெறாமல் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு அனுமதியின்றி பயன்படுத்துவது பதிப்புரிமைச் சட்டத்துக்கு எதிரானது எனவும் இளையராஜா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்தப் பாடல்களைப் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். மேலும், ரூ.5 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி. ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.
இந்த மனுவிற்கு படத்தயாரிப்பு நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நெஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இருந்து குட் பேட் அக்லி திரைப்படம் நீக்கப்பட்டுள்ளது.