free website hit counter

சக்தி பெற்ற ஒற்றை வசனத்துடன் லொகார்னோ திரைப்பட விழாவில் ஒரு விதிவிலக்கான குறுந்திரைப்படம்

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

லொகார்னோ 7ம், 8ம் நாள் திரைப்பட விழாவின், சில முழு நீளத் திரைப்படங்களையும், சில குறுந்திரைப்படங்களையும் காணக்கிடைத்தன. இவற்றில் புதிய இயக்குனர்களுக்கான முதலாவது, இரண்டாவது திரைப்பட போட்டிப் பிரிவில் பிலிப்பைன்ஸ், பிரான்ஸ், சிங்கப்பூர் தயாரிப்பு படமான Kun Maupay Man It Panahon (Whether weather is Fine) ஒரு ஆழமான சினிமா அனுபவம்.

இதன் எழுத்துருவாக்கத்தில் பல திரைப்பட விழாக்குழுக்கள் நிதியுதவி செய்திருந்தன. அப்போதிருந்தே இத்திரைப்படத்தின் வரவு பெரிதும் பேசப்பட்டிருந்தது. Carlo Fransisco Manatad இன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் பிலிப்பைன்ஸில், தைபூன் ஹையான் சூறாவளியினால் முற்றாக அழிக்கப்பட்ட ஒரு கடற்கரை நகரத்தில் நடைபெறுகிறது. அந்த சூறாவளி முடிவடைந்து இரண்டு நாட்களுக்குள்ளேயே, இன்னுமொரு சூறாவளி நெருங்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் அறிவிக்க, அங்கிருந்து பலர் இடம்பெயர்வதற்காக அரச கப்பல்களுக்கு காத்திருக்கின்றனர்.

ஒரு இளைஞன், தனது காதலி அந்த இளைஞனின் தாயார் மூவரும், சூறாவளியால் நாசமாக்கப்பட்ட மரண ஓலம் கேட்கும் அக்கிராமத்திலிருந்து செல்ல முடிவெடுக்கின்றனர். ஆனால் தாய்ப்பெண்மணி, அங்கிருந்து புறப்படுவதற்கு முன் தன் கணவனை சந்தித்து கடைசிப் பிரியாவிடை சொல்லி வரவேண்டும் என ஆசைப்பட்டு அவரைத் தேடுகிறாள். அவர் எங்கிருக்கிறார், ஏன் இவர்கள் பிரிந்தார்கள் என ஒன்றுமே தெளிவாக படத்தில் தெரியாது. ஆனால் அவள் தேடலில் மூலம் இறுதியாக ஒரு முறை அவரை பார்த்துவிட வேண்டும் என்ற அவளது துடிப்பு மட்டும் அந்தளவு படத்தை பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஒரு இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நகரத்தில், அந்நாட்டு அரசு எபப்டியெல்லாம் பித்தலாட்டம் செய்து தமக்கான லாபத்தை மட்டும் எடுத்துக் கொள்ள முடியும் என்பதனையும் அங்காங்கே படம் தொட்டுச் செல்கிறது. இந்த திரைப்படத்திற்காக போடப்பட்ட பிரமாண்ட மிகை யதார்த்த செட்டுக்கள் மூலம் அதில் நடமாடும் மாந்தர்கள் மூலமும் அவை அழுத்தமாக காண்பிக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு கட்டத்தில் தனது கணவன் காயப்பட்டவர்களுக்கான மருத்துவமனையில் இருக்கிறார் என தெரியவருகிறது. ஆனால் அந்த மருத்துவமனைக்குள் உட்செல்லும் அனைத்து வழிகளும் மூடப்பட, தான் காயப்படுவதன் மூலமே அதில் நுழைய முடியும் என முடிவுக்கு வருகிறாள் தாய். சொந்த மகனை கல்லெடுத்து தனது தலையில் அடிக்கச் சொல்கிறாள். இடிமுழக்கமும், மழையும் அடுத்த சூறாவளிக்கான எச்சரிக்கையை அதிகரிக்கிறது. படத்தில் கிளைமேக்ஸ் காட்சி அங்கு தான் நகர்கிறது. அது ஒரு இயற்கை அனர்த்தத்தின் மேடையில் ஒரு பக்கம் எந்தளவு, ஒரு மனிதம் இன்னுமொரு மனிதத்தை தேடமுடியும் என்பதனையும், ஆனால் மறுபுறம் எந்தளவு மனிதம் துச்சமாக மதிக்கப்படுகிறது என்பதனையும் சக்தி வாய்ந்த காட்சியமைப்பு, இசை மூலம் சொல்லிமுடிவடைகிறது இத்திரைப்படம்.

The First Time | முதற்தடவை

குறுந்திரைப்படப் பிரிவில் பார்த்துப் பிரமித்து போன ஒரு திரைப்படம் First Time (The Time for All but Sunset-Violet). 50 நிமிடங்கள் கொண்ட இத்திரைப்படம், இம்முறை குறுந்திரைப்படப் பிரிவில் போட்டியிடும் மிக நீளமான திரைப்படமாகும். படத்தில் ஒரே ஒரு வசனம் மாத்திரமே இடம்பெற்றிருக்கும். Nicolaas Schmidt இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் தொடக்கத்தில் ஒரு Coca Cola விளம்பரம், 80,90 களில் வந்ததாக இருக்க வேண்டும், சுமார் 5 நிமிடங்களுக்கு செல்கிறது. பக்கா காமர்ஷியல் விளம்பரம். எந்த வயதுக் காதலுக்கும் Coca Cola துணை இருக்கும். காதலை பகிர்ந்து கொள்ள கோலாவை பகிர்ந்துகொள்ளுங்கள் என்பதே அந்த விளம்பரத் தத்துவம். அந்த விளம்பரம் முடிவடையும் போது ஜேர்மனிய ஹம்பேர்க் நகரத்தின் சில வெறுமை இடங்கள் வந்து செல்கின்றன. பின்னால் அந்த விளம்பரத்திற்கு இசைக்கப்பட்ட இசை எம்மை தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. ஒரு ரயில்வே நிலையம். ஒரு இளவயது வாலிபன் ரயிலில் ஏறுகிறான். காதில் headphones அணிந்திருக்கிறான். அவன் கேட்கும் இசை நாமும் கேட்கிறோம், வழியில் இன்னுமொரு இளைஞன் ஏறி அவன் முன்னால் அமர்கிறான். இருவரும் சேர்ந்து பயணிக்கும் ஒரு 30 நிமிடங்கள், அந்தே நிஜ நேரத்தில் நாமும் அவர்களை பார்த்துக் கொண்டே செல்கிறான். அவ்வளவு தான் படம்.

அந்த ரயில் செல்லும் அனைத்து மெட்ரோ நிலையங்களையும் கடந்து செல்கிறோம். அவர்கள் இருவரினதும் பின்னால் ரஜயில் ஜன்னலின் ஊடாக தெரியும்வெளிக் காட்சி, அந்தி மாலை நேரச் சூரிய ஒளி, மெட்றோ நிலையங்கள், விளம்பரப் பலகைகள், வேறு பிரயாணிகள் என அனைவரும் எம்மையும், அவர்களையும் கடந்து செல்கின்றனர். பின்னால் ஒரு மெலிதான மேற்கத்தேய இசைப்பாடல் பட்டியல் எம் காதுகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்த படம் காட்சிப்படுத்தப்பட்ட போது, படம் தொடங்கி 15 நிமிடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பலர் எழுந்து செல்லத் தொடங்கினர். என்னால் நாற்காலியை விட்டு எழுந்துவிட முடியவில்லை. படம் இவ்வளவு மெதுவாக நகர்கிறதே, காட்சி மாந்தர்கள், கதை மாந்தர்கள் என ஒருவரையும் காணவில்லையே என ஏங்கி ஏங்கி கோபம் தலைக்கேறும் போது கூட என்னால் நாற்காலியை விட்டு எழுந்திருக்க முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நான் நினைத்துவந்திருந்த அனைத்து சினிமா பாணிம் கதைகளும் கரைந்து செல்ல, இந்தப்படம் அதொன்றும் இல்லை என முடிவுக்கு வந்தேன். ஒன்றுமே யோசிக்க முடியாது படத்திடம் சரணடைந்தேன். அப்போது தான் அந்த படம் என்னை ஏற்றுக் கொள்ளத் தொடங்கியது. அந்த பயணத்தில், அந்த இரு வாலிபர்களுடனும், அந்த இசையுடனும் ஒட்டிப் போகத் தொடங்கினேன். படம் முடிவடையும் போது இதுவரை கண்டிடாத ஒரு சினிமா அனுபவமாக அது எனக்கிருந்தது.

இடையில் ஒரு தடவை இருவரும் தமது பைகளிலிருந்து கோலா போத்தல்களை எடுத்துக் குடித்துக் கொள்வார்கள். படத்தின் முடிவில், முன்னாள் இருந்த வாலிபன், மற்றையவனை பார்த்து, உன் டீஷேர்ட் அழகாக இருக்கிறது, என ஒரு வசனம் சொல்லிவிட்டு அந்த பெட்டியிலிருந்து வெளியேறுவான். 50 நிமிட பட முடிவில் நாம் கேட்ட ஒரே ஒரு வசனம் அது மட்டும் தான். ஆனால் படம் முழுவதும் ஒன்றுமே நடைபெறாமல், கடைசியில் அப்படி ஒரே ஒரு வசனம் மட்டும் சொல்லி படம் முடிவடைய, பிறவிப்பயனை அடைந்தது போல் ஒரு மகிழ்ச்சி. அவ்வளவு சக்தி பெற்றது அந்த ஒற்றை வசனம்.

இரகசியமான, ஆழமான, அழகான கதை திரைகக்தை வடிவமைப்பும், கதாபாத்திரங்களின் கையாளுகையும், இசையும், காட்சி அமைப்பும், இத்திரைப்படம் நிச்சயம் இம்முறை லொகார்னோ விழாவில் ஏதாவது ஒரு விருதை வெல்லப் போகும் எனும் உறுதியை தருகிறது.


- 4தமிழ்மீடியாவுக்காக லொகார்னோவிலிருந்து ஸாரா

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction