free website hit counter

எங்களது கதைகள் ஆவணத்தப்படுத்தப்படட்டும் ! - Vision du Reel திரைப்பட விழா

திரைப்படவிழாக்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுவிற்சர்லாந்தின் நியோனில்,  58 வது, Visions Du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழா தொடங்கியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தில், ஆவணத்திரைப்படங்களுக்கு மட்டுமென இருக்கும் திரைப்பட விழாக்களில் முதன்மையானது இத்திரைப்படவிழா.

ரொட்டர்டாம் ஆவணத் திரைப்பட விழா, பாரிஸ் Cinéma Du Réel திரைப்படவிழா, இங்கிலாந்தின் Sheffield ஆவணத்திரைப்படவிழா, போர்த்துக்கல் நாட்டின்  Doc Lisbo என்பன பிற முதன்மை ஆவணத்திரைப்பட விழாக்கள். 

இவற்றில் ஏதாவது ஒன்றில் ஆவணத்திரைப்படம் தெரிவு செய்யப்பட்டுவிடாதா எனும் ஏக்கத்தில் பல ஆயிரக்கணக்கான ஆவணத்திரைப்பட இயக்குனர்கள் போட்டியிடுவர். Fiction திரைப்பட சந்தையிலும் பார்க்க ஆவணத்திரைப்பட விழா (Documentary) திரைப்படச் சந்தை சிறியது. எனினும் ஐரோப்பிய சந்தையில் ஒரு முழு நீள ஆவணத்திரைப்படம் உருவாக்குவதற்கு குறைந்தது 200,000 யூரோக்கள் தேவை. சராசரியாக 400 000 - 600 000 யூரோக்கள் செலவில் உருவாகும் ஆவணத்திரைப்படங்கள் பெரும்பாலும் சந்தைக்கு வருவன. திரைப்பட விழாக்களில் அதிகம் போட்டியிடப்படும். விநியோகித்தர்களால் வேண்டப்படும். 

ஆவணத்திரைப்படங்களுக்கென தனி ரசிகர் வட்டம் சந்ததி சந்ததியாக ஐரோப்பாவில் உருவாகி வருகிறது. இங்கு ஆவணத் திரைக்கலாச்சாரம் அதையொட்டிய பார்வையாளர்கள் நுகர்வுக் கலாச்சாரம் அந்தளவு விசாலமானது. மாறுபட்டது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஆவணத் திரைப்படவிழாங்களை விரும்பி பார்க்கும் நுகர்வுக் கலாச்சாரம் இன்னமும் திடமாக உருவாகவில்லை என்றே தோன்றும். 

இந்தியாவிலிருந்து 2022 இல், சானுக் சென் உருவாக்கிய ஆவணத் திரைப்படம் All That Breathes, சண்டேன்ஸ் மற்றும் கேன்ஸ் திரைப்பட விழாக்களில் உயரிய விருதுகள் வென்றதுடன், சிறந்த ஆவணத் திரைப்பத்திற்கான அமெரிக்க ஆகடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.  அதே வருடம் வெளியான தென்னிந்திய ஆவணத் திரைப்படமான கார்திகி கொன்சலாவ்ஸ் இன் The Elephant Whisperers சிறந்த ஆவணக் குறுந்திரைப்படத்திற்கான அமெரிக்க அகடமி விருதை வென்றதுடன், நெட்பிலிக்ஸ் இல் வெளியானதனால் பெரும்பாலானவர்கள் அதனை பார்த்திருப்பீர்கள். 

Elephant Whisperers தான், நீங்கள் பார்த்த முதல் ஆவணத் திரைப்படமெனில், ஆவணத்திரைப்படத்தின் அழகியலை அதை மாத்திரம் வைத்து எடைபோட்டு விடாதீர்கள். ஆழ்ந்த ஆவணத் திரைப்பட அனுபவம் உள்ளவர்கள் எவரை கேட்பினும் Elephant Whispereres இன் படத்தொகுப்பு (Editing) எந்தளவு பலவீனமானது எனச் சொல்வர். ஒரு National Geopgraphy நிகழ்ச்சியினை பார்ப்பது போன்றே, அதே சிந்தனை மட்டத்தில் தான் அது செதுக்கப்பட்டிருக்கும். யானைகளையும், அந்த யானைப்பாகர்களையும், அவர்களின் அன்பினாலுமே, அந்த திரைப்படம் அவ்வளவு பேசப்பட்டிருந்தது. அதன் திரைக்கதை நேர்த்தி, படத்தொகுப்பில் அவ்வளவு ஆழம் இருக்கிறதா எனும் கேள்வி என்னுள் எப்போதும் தொக்கி நிற்கும். 

இம்முறை Vision du Reel ஆவணத்திரைப்படவிழாவின் சிறப்பு விருந்தினர்களில் ஒருவர் Alicoe Diop. பிரெஞ்சு திரை இயக்குனர். பெற்றோரின் வழி செனகல் நாட்டின் பூர்வீகம் கொண்ட அலிஸ் பிறந்து வளர்ந்தது எல்லாம் பாரீஸின் புறநகர்ப்பகுதிகளில். 

ஐந்து சகோதரர்கள், தந்தை கட்டிட நிர்மாணங்களின் போது நிறப்பூச்சு செய்பவர். அம்மா, பிறவீட்டு வேலைகளுக்கென செல்பவர். அவர்கள் வளந்ர்ந்த புற நகர்ப்பகுதி பல்லின மக்களால் சூழ்ந்தது.அவர்களின் பொருதாளாதார வறுமை, காலனித்துவ ஆதிக்க மனப்பிரள்வுகள், ஆபிரிக்க பூர்வீகம் என்பதால் பிரான்ஸின் அவரை வேறுபடுத்தி பார்க்கும் வெள்ளைக்காரர்கள் அதிகம். 

அவர் உருவாக்கிய ஆவணத்திரைப்படங்களிலும் இதன் அழுத்தங்கள் மத்தியில் வளரும் பிற வெளிநாட்டு இனத்தவர்களை, குறிப்பாக பிரான்ஸில் வாழும் ஆபிரிக்க பூர்வீக இனத்தவர்களுக்கு நடைபெறும் அநீதிகள், இன்னல்களை சார்ந்த்திருக்கும்.  பலவருடங்களாக ஆவணத்திரைப்படங்கள் உருவாக்கி வந்தவர்,  2022 இல் தனது முதல் முழுநீள புனைவுத்திரைபப்டத்தை உருவாக்கினார். Saint Omer எனும் பெயரில் உருவான இத்திரைப்படம், சிறந்த பிரெஞ்சு திரைப்படமாக, ஆஸ்கார் வரை பரிந்துரைக்கப்பட்டிருந்தது.  கறுப்பினத்தவர்களின் சிறந்த திரைப்படங்களுக்கான வரலாற்று பட்டியலில் இந்த திரைப்படத்திற்கு முக்கிய ஒரு பங்கு இருக்கிறது. 

அவருடைய ஆவணத்திரைப்படங்களில் « Nous », பேர்லின் திரைப்பட விழாவில் சிறந்த ஆவணத்திரைப்படத்திற்கான விருதை வென்றிருந்தது. அவருடைய Masterclass நேற்று Vision du Reel ஆவணத்திரைப்பட விழாவில் நடைபெற்றபோது, இரண்டரை மணித்தியாலங்கள் இடைவிடாது தனது திரைப்படங்களின் உருவாக்கத்தின் பின்னணி பற்றி அவர் பேசிய கருத்துக்கள் மிக ஆழமானவை. 

குறிப்பாக அவர் « La Permance » எனும் ஆவணத் திரைப்படத்தின் உருவாக்கம் பற்றி அதிக நேரம் பேசியிருந்தார். இந்த ஆவணத் திரைப்படம், பாரீஸில் ஒரு சமூகநல மருத்துவரின் தனிப்பட்ட கேபினெட்டிற்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சமூகமளிக்கும் பல்லின அகதிகளின் கதைகளை காண்பிக்கிறது. 

மருத்துவரின் பின்னால் சில சமயம் ஒரு கமெரா நிறுத்தப்பட்டிருக்கும். அல்லது அவரை பார்க்கவரும் அகதிகளின் பின்னால் கமெரா நிறுத்தப்பட்டிருக்கும். ஆடாமல், அசையாமல், அப்படியே நிறுத்தப்பட்டபடி அவர்களின் கதைகளை படம்பிடிப்பது மாத்திரமே அதன் வேலையாக இருக்கும். 

ஒரு வருடத்திற்கு மேல் இப்படியே படம்பிடித்து அவர் உருவாக்கிய திரைப்படம் அது. பிறந்த வளர்ந்த நாட்டினாலும் புறக்கணிக்கப்பட்டு, அகதி அந்தஸ்து கேட்ட நாட்டினாலும் புறக்கணிக்கப்பட்டு, ஏன் புறப்பட்டோம், ஏன் இங்கு வந்தோம் என்பதே தெரியாமல், மனதளவில் மிக குழம்பிப் போயிருக்கும் அகதிகளின் கதைகள் அவை. அவர்களின் உடல் வலியில் பெரும்பாலானவை, மனவலியின் விளைவு என்பது கூட அவர்களுக்கு தெரியாதிருக்கும். முதிர்ந்த அந்த மருத்துவரும், அவரின் துணை மருத்துவ தாதிகளும், எப்படி இந்த அகதிகளின் கதைகளை கேட்கிறார்கள் என்பதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட கதை இது. 

நேற்றைய Masterclass இன் போது, இந்த திரைப்படத்தை பற்றி Alice Diop, ஞாபகப்படுத்திய முக்கிய ஒரு விடயம் இது. « இந்த அகதிகளுக்கான பெரிய ஆறுதல், அம்மருத்துவர் எழுதிக்கொடுக்கும் மருந்துகள் அல்ல. அப்படி ஒருவர் தனது நேரத்தை அவர்களுக்காக கொடுத்து, அவர்களின் கதையை கேட்கத் தயாராக இருப்பதே. அனைத்து ஆழ்மன வேதனைகளையும் கொட்டுவதற்கு அவர்களுக்கு அந்த இடம் தேவைப்பட்டிருக்கிறது. »

Alice Diop, நேற்று இந்த கதையின் உருவாக்கம் எப்படி நடந்தது என சொல்லும் வரை, என் கேள்விகள் எல்லாம் எப்படி இருந்தது எனில், எப்படி அவருக்கு இப்படி ஒரு மருத்துவ மனநல ஆலோசனைகள் வழங்கப்படும், மிக அந்தரங்கமான இடத்திற்கு நுழைவு இருந்தது. இதில் பங்கு பெற்ற அனைவரிடமும் அனுமதி வேண்டியிருக்க எந்தளவு சிரமப்பட்டிருப்பார்? இந்தக் கதையை அவர் சொல்லவேண்டிய தேவை எப்படி உருவானது? மிக நலிந்த, வேதனை மிக்க இந்த தளத்தில் இக்கதை நகர்வதால், அவருக்கு ஆரம்பத்திலிருந்தே இதை படம்பிடிக்க வேண்டும் எனும் எண்ணம் இருந்திருக்கும் என்பதே நான் நினைத்திருந்தேன். 

ஆனால் அவர் கூறிய பதில்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. Arte தொலைக்காட்சியின் ஒரு ஒப்படையின் நிமித்தம், அகதிகளின் கதைகள் குறித்து தேடச் சென்றவருக்கு, இம்மருத்துவரை, அவர்களது நண்பர்கள் வட்டம் பரிந்துரைத்திருந்தார்களாம். அங்கு சென்ற அம்மருத்துவரின் ஆலோசனை நாள் ஒன்றில் ஒரு மூன்று மணி நேரம் அவருடன் சேர்ந்திருந்து அங்கு வந்தவர்களை கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார். அந்த மூன்று மணிநேரம் அவரை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அன்று அங்கிருந்து வெளியான நேரம், எனக்கு என்ன நடந்தது?, ஏன் இவ்வளவு அதிர்வடைந்திருக்கிறேன்?, எனக்குள் ஏற்பட்டிருக்கும் இந்த மனத்தாக்கத்திற்கு என்ன காரணம்?, யார் இவர்கள் எல்லாம்? என பல கேள்விகள் உழல, அம்மருத்துவருக்கே தொலைபேசி அழைப்பெடுத்து, உங்கள் ஆலோசனை நிலையத்திற்கு  நான் இன்னமும் கொஞ்சம் அதிக நேரம் எடுத்து வந்து, அவர்களை பார்வையிட முடியுமா எனக்கேட்டிருக்கிறார். 

அப்படியே ஒரு ஆறு மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்கள் ஆலோசனை மையத்திற்கு வாடிக்கையாக சென்று வந்திருக்கிறார். படமேதும் செய்யும் எண்ணம் எதுவும் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை. அங்கு கேட்ட பல கதைகளை தன் புத்தகத்தில் குறிப்பெடுத்திருக்கிறார். அவ்வப்போது அவர்களின் சிலரின் முகங்களையும், அவை காட்டும் உணர்ச்சிகளையும் மாத்திரம் புகைப்படம் எடுத்து சேகரித்து வைத்திருக்கிறார். 

ஒரு நாள், ஒரு ஆபிரிக்க பெண், 18/20 வயதிருக்கும், இந்த ஆலோசனை மையத்திற்கு வந்து தனது கதையை சொல்லியிருக்கிறார். தன் தாயால், பிரான்ஸுக்கு வற்புறுத்தி அனுப்பட்டிருக்கிறார். பிரான்ஸில் இருக்கும் தன் தாய் மாமனால் தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கும் வன்புணர்வுக்கும் உட்படுத்தப்பட்டிருக்கிறார். அவரது கதை சொல்லி முடித்து, அந்த கேபினிலிருந்து வெளியேறிய போது, அவரை எப்படியாவது இடைமறித்து, ஒரு நாள் தன் வீட்டுக்கு அழைக்க வேண்டும் என Alice Diop தேடி ஓடியிருக்கிறார். அந்த மருத்துவமனையின் ஒழுங்குகளிலும் சரி, வெளி வீதிகளிலும் சரி எங்கும் அவரை காணாது, தவித்து மனமுடைந்து அழுதிருக்கிறார். 

அப்பெண்ணுக்கு இனி என்ன நடந்திருக்கும், யார் எதுவரை அவருக்கு பாதுகாப்பு கொடுக்க முடியும்?, நானே ஒரு வேளை வீட்டுக்கு அழைத்திருந்தாலும், எவ்வளவு நேரம் என்னால் அப்பெண்ணுடன் கூட இருந்திருக்க முடியும்? என பல கேள்விகள் எழுந்து Alice Diop ஐ இன்னமும் மனமுடைய செய்திருக்கிறது. 

இப்பெண்ணின் கதைக்கு, சமூகத்தின் இவ்வாறான விளிம்பு நிலை மனிதர்களுக்கு நான் என்னதான் செய்ய முடியும் என ஆழமான கேள்வி எழவே, அதன் வெளிப்பாடாகவே, இக்கதைகளுக்கு என ஒரு படம் செய்வதே சரி. இம்மனிதர்களின் கதைகள் சொல்லப்படவும், கேட்கப்படவும் அவர்களுக்கு ஒரு தளம் தேவை. இந்த படம் செய்யப்படுவதற்கு மிக தகுதியானது என முடிவெடுத்து அம்மருத்துவரிடமும் இந்த யோசனை பற்றி சொல்லியிருக்கிறார். 

அம்மருத்துவரோ, எனக்கேதும் பிரச்சினை இல்லை. நான் இரண்டு Permanance செய்கிறேன். கமெராவால் படம்பிடிக்கப்பட விருப்பமில்லாதவர்கள் என்னிடம் செவ்வாய்க்கிழமை வரட்டும். கமெராவுக்கு ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காதவர்கள் வெள்ளிக்கிழமை வரட்டும் என திட்டமிட்டிருக்கிறார். படப்பிடிப்பு தொடங்கி சில வாரங்களில் அவர்களுக்கான ஆச்சரியமே, செவ்வாய்க்கிழமை வந்தவர்களை பார்க்க வெள்ளிக்கிழமை வந்தவர்கள் அதிகம், ஏனெனில் « எங்கள் கதைகள் ஆவணப்படுத்தப்பட வேண்டும் » என அவர்களே விருப்பத்துடன் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்

இன்று அந்த மருத்துவமனையின், இம்மருத்துவப் பிரிவு நடைமுறையில் இல்லை.  சுகாதார திணைக்களத்தின் அழுத்தங்களால் அம்மருத்துவரும் தொடர்ந்து இந்த ஆலோசனை மையத்தை நடத்த முடியாது போய்விட்டது. ஆனால் அவர்களின் கதைகள் இன்றும் Alice Diop இன் திரைப்படம் மூலம் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. 

Alice Diop இன் அரங்கு நிறைந்த Masterclass முடிவடைந்த போது, அங்கு எழுந்த கரகோஷம் என்னுள் ஒரு பெருமிதத்தை ஏற்படுத்தியது. இதுவரை 15 வருடங்களுக்கு மேல் ஐரோப்பிய பல திரைப்பட விழாக்களை பார்த்துவந்திருக்கிறேன். அவற்றை பற்றி எழுதியிருக்கிறேன். 

ஒவ்வொருமுறையும் ஒரு வெள்ளை இனத்தவரால் ஐரோப்பிய கண்டம் சினிமாவுக்குள் பிரதிநிதித்துவப்படுத்தும் போது, என்னை அறியாமல் என்னுள் ஒரு கேள்வி எழும். இங்கு வாழும் இரண்டாம், மூன்றாம் தலைமுறை இடம்பெயர் மக்களின் பிள்ளைகள் எல்லோரு இந்த ஐரோப்பிய கண்டத்தினுள், இந்நாடுகளை சொல்லி வளர முடியாதா? இவர்களின் வாழ்க்கையை சொல்லும் சினிமாக்கள் ஏன் இவ்வளவு குறைவாக காட்சிப்படுத்தப்படுகின்றன? இத்திரைக்கலைஞர்கள் ஏன் ஒரு திரைப்பட விழாவின் சிறப்பு விருந்தினராக வருவதில்லை?. 

இன்று Alice Diop இன் ஊடாக அம்மாற்றத்தை காணத்தொடங்கியிருக்கிறேன். 

    -  4தமிழ்மீடியாவுக்காக : ஸாரா 

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction