free website hit counter

டாக்டர் விமர்சனம்

திரைவிமர்சனம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடத்தப்பட்ட பள்ளிச் சிறுமி ஒருத்தியைக் கண்டுபிடிக்க களமிறங்கும் ஒரு ராணுவ டாக்டரின் ‘சைல்ட் டிராஃபிக்கிங்’ ஆபரேஷன் தான் படம்.

ராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்துவரும் டாக்டர் வருண் (சிவகார்த்திகேயன்), பத்மினியை (ப்ரியங்கா அருள்மோகன்) மணக்க இருந்த சூழ்நிலையில், வருணுக்கும் தனக்கும் ஒத்துவராது எனத் திருமணத்தைப் பிரேக் செய்கிறார் பத்மினி. அந்த சமயத்தில் பள்ளிக்குச் சென்றிருந்த பத்மினியின் அண்ணன் மகளான 12 வயதுச் சிறுமி கடத்தப்படுகிறாள். காவல் துறையால் எதுவும் ஆகப்போவதில்லை என்பதை அறியும் வருண், தன்னை நிராகரித்த பத்மினியின் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் வீட்டின் வேலைக்காரப் பெண்மணி, சில உள்ளூர் 420 குற்றவாளிகள் ஆகியோரை ஒரு அணியாகத் திரட்டிக்கொண்டுக் களமிறங்குகிறார். சிறுமியை அவரால் மீட்க முடிந்ததா? நிராகரித்த பத்மினி வருணை ஏற்றுக்கொண்டாரா என்பது திரைக்கதை.

‘கோலமாவு கோகிலா’ படத்தில் நயன்தாரா - யோகிபாபு இருவரையும் வைத்துகொண்டு பட்டையைக் கிளப்பிய நெல்சன் திலிப்குமார் இதில் 20 - 20 ஆடி வெளுத்திருக்கிறார்.

பெண் பார்க்கும் படலம், பெண்ணுடன் பழகும் படலம் என ஒரே பாடலுக்குள் சுவாரஷ்யமான தொடக்கத்துடன் நிலக்கரி எஞ்சின் ரயில்போல மென்மையாகத் தொடங்கும் படம், சிறுமி கடத்தப்பட்டதும் புல்லட் ரயில்போல வேகமெடுக்கிறது. உள்ளூர் சில்லறைக் குற்றவாளிகளை ஆபரேஷன் தியேட்டரில் மிரட்டிப் பணிய வைப்பது, அவர்களுக்கு அடுத்த நிலையில் அதிரடிகாட்டும் இரட்டையரான கடத்தல்காரர்களை சென்னையின் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதைக்குள் அட்டகாசமாக மடக்குவது, இறுதியில் முக்கிய புள்ளியை ஐஸ் கிரீம் விற்று மடக்குவது வரை, வருண் என்கிற புத்திசாலி டாக்டர் கடத்தல்காரர்களின் நெட்ஒர்க்கை ‘ஸ்கெட்ச்’ போட்டுத்தூக்கும் திட்டங்களும், அதற்கு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் துணிந்து கைகொடுப்பதும் திரைக்கதையில் நன்றாகக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இது சாத்தியமா என மனதில் சிறிய சந்தேகம் தோன்றும்போதெல்லாம், அதை மிரட்டல் மேங்கிங் மூலம் இல்லாமல் ஆக்கிவிடுகிறார்கள். கோவா லொக்கேஷனை இந்த இளவுக்கு சிறப்பாகக் பயன்படுத்திகொண்ட ஒரு படம் இதற்குமுன் வரவில்லை என்றே சொல்லிவிடலாம்.

படத்தின் மிகப்பெரிய பலம் சீரியஸ் உணர்வுக்கு நடுவில் குபீரென வெடித்துச் சிதறும் நகைச்சுவை சரவெடிகள். சீரியசான காட்சிகளை துணைக் கதாபாத்திரங்களைக் கொண்டு, நகைச்சுவையால் மென்மையாக்கிவிடும் இயக்குநரின் உத்தி, தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதியது. முக்கியமாக, ‘அரைக்கை’ விளையாடி தெறிக்கவிடும் பிரதாப் எனும் கதாபாத்திரத்தில் யோகிபாபு தான் வரும் காட்சிகள் அனைத்திலும் தெறிக்கவிடுகிறார். அதேபோல, ‘கோலமாவு கோகிலா’ படப்புகழ் ரெடின் கிங்ஸ்லி, இதில் ‘ஃபிரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ ஆக வரும் பகத் என்ற வேடத்தில் வந்து காட்சிக்குக் காட்சி கேரண்டியாக சிரிக்க வைக்கிறார். மற்றொரு முக்கியமான துணைவேடத்தை ஏற்றிருப்பவர் சுனில் ரெட்டி. ‘மகாலி’ என்ற லோக்கல் தாதா வேடத்தில் வந்து டாக்டர் வருணின் டீமில் மாட்டிக்கொண்டு படும் பாடு ரகளையோ ரகளை. அவது உதவியாளர் இன்னொரு ரெடின் கிங்ஸ்லி போல அவரும் தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறார். வில்லன் நடிகரைப் பற்றி சொன்னால் ஸ்பாய்லர் ஆகிவிட வாய்ப்புள்ளதால் தவிர்த்துவிடலாம்.

மற்ற முக்கியமான துணை வேடங்களில் வரும் ஒளிப்பதிவாளர், நடிகர், இளவரசு, சுமதியாக வரும் அர்ச்சனா ஆகியோரும் கவனிக்க வைக்கிறார்கள். கதாநாயகி பத்மினியாக நடித்துள்ள ப்ரியங்கா அருள் மோகனுக்கு இதைவிட சிறந்த அறிமுகப் படம் தலைகீழாக நின்றாலும் தமிழில் கிடைத்திருக்காது. கிடைத்த இடங்களில் எல்லாம் ப்ரியங்கா, தன் புத்திசாலி குறும்புகளால் அசத்தியிருக்கிறார்.

 இனி நாயகன் சிவகார்த்திகேயனிடம் வருவோம். புத்திசாலி, அதிகம் பேசாமல், அதேநேரம் மனித நேயமும் அறமும் கொண்ட மருத்துவர் வருணாக முற்றிலும் புதிய நடிப்பு, புதிய உடல்மொழி என ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் சிவகார்த்திகேயன். அலட்டல் இல்லாமல் அமைதியாக நடித்திருக்கிறார். வசன உச்சரிப்பு அவ்வளவு சுத்தம். அடியை வாங்கிக்கொண்டு திருப்பி அடிப்பதிலும் வில்லனிடம் பயந்து நடுங்காமல் உறுதியாக உடல்மொழியில் தில்லாக நிற்பதிலும் வருண் என்கிற கேரக்டராக வாழ்ந்திருக்கிறார். சிவகார்த்திகேயனை ஒரு கமர்ஷியல், பொழுதுபோக்கு நாயகனாக முன்னிறுத்துவதில் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

‘வுமன் டிராஃபிக்கிங்’, ‘சைல்ட் டிராஃபிக்கிங்’ இன்று இந்தியாவில் மிகப்பெரிய சட்டவிரோதத் தொழிலாக இருக்கிறது. உலகின் மூன்றாவது பெரிய ராணுவத்தை வைத்திருக்கும் இந்தியாவில் தமிழ்நாட்டுப் போலீஸை ஸ்காட்லாண்ட் யார்டு போலீஸுக்கு இணையாகத் துதிபாடும் தமிழகத்தில் ஆயிரக் கணக்கான குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக இருக்கின்றன. தமிழில் ஏற்கெனவே ஆண்மை தவறேல், ஆறு மெழுகு வர்த்திகள் என இந்தப் பெரும் பிரச்சினையைப் பேசியிருந்தாலும் சிவகார்த்திகேயன் எனும் மக்கள் ஈர்ப்புமிக்க மாஸ் கதாநாயகனை வைத்து இந்தப் பிரச்சினை சீரியஸ் + சிரிப்பு கலந்து செய்தியுடன் ரசிகர்களுக்கு விருந்து பரிமாறியதில் முழுவெற்றியைப் பெற்றிருக்கிறது ‘டாக்டர்’ஸ் டீம்!


- 4தமிழ்மீடியா விமர்சனக் குழு

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction