விஞ்ஞானியாக இருக்கும் சரவணன், பல சாதனைகளை செய்து உலகநாடுகளை அசரவைக்கிறார்.
இந்நிலையில் சரவணனின் நண்பரான ரோபோ சங்கர், சர்க்கரை நோயால் இறந்து விடுகிறார். இதனால் வருந்தும் சரவணன், சக்கரை நோயை குணப்படுத்தும் மாற்று வழியை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார். இதற்கு பல தடைகளும் இன்னல்களும் சரவணனுக்கு வருகிறது.
இறுதியில் சரவணனுக்கு வந்த பிரச்சனை என்ன? பிரச்சனைகளை கடந்து சர்க்கரை நோய்க்கு மாற்று மருந்தை சரவணன் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
அறிமுக படத்திலேயே மக்களை கவரும் வண்ணம் நடித்துள்ளார் சரவணன். ஆக்ஷன், ரொமான்ஸ், சென்டிமென்ட் என அனைத்திலும் தனது முயற்சியை நூறு சதவீதம் கொடுத்துள்ளார். குறிப்பாக ஆக்ஷன் காட்சியில் மாஸ் காண்பித்துள்ளார். நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் விவேக்.
சரவணனுக்கு மனைவியாக நடித்து இருக்கும், கீத்திகா திவாரி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். அழகான வில்லியாக ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் ஊர்வசி. வழக்கமான வில்லத்தனத்தை கொடுத்து இருக்கிறார் சுமன். ரோபோ சங்கர் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் நடிப்பில் கவனிக்க வைத்திருக்கிறார்கள்.
சரவணனின் அண்ணனாக வரும் நடிகர் பிரபு, தந்தையாக வரும் விஜயகுமார், விஞ்ஞானி நாசர் ஆகியோர் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் யோகி பாபு.
மெடிக்கல் மாஃபியா படத்தை இயக்கியிருக்கிறார்கள் இயக்குனர்கள் ஜேடி - ஜெரி. மெடிக்கல் மாஃபியா கதையை வைத்து பல படங்கள் வெளியாகி இருந்தாலும், இப்படம் அதிலும் தனித்துவமாக அமைத்திருக்கிறார்கள். விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை, கலர்ஃபுல்லான பாடல்கள் படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் மனதை தொடுகிறது. பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். வேல்ராஜின் ஒளிப்பதிவு மற்றும் அனல் அரசின் சண்டை படத்திற்கு பலம்.
தி லெஜன்ட் - வாங்க பார்ப்போம்
 
																						 
														 
     
     
    
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    