free website hit counter

என்ன தான் சொல்கிறது கனவுகள்.....?

மருத்துவம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 "கனவுகள் வருவது எல்லோருக்கும் சகஜம் தானே.. ஆய்வு செய்கிற அளவுக்கு அதிலென்ன பெரிதாய் இருந்து விடப்போகிறது.." என்னும் தரப்பு நீங்களென்றால் உங்கள் கருத்தை மாற்றும் இந்த சுவாரஷ்யமான கட்டுரை உங்களுக்கே தான்!

வகுப்பறை மேஜையில் போடும் குட்டி தூக்கத்தில் வரும் கனவுகள் முதற்கொண்டு அலுவலகத்தில் பணிக்களைப்பில் போடும் தூக்கத்தில் வரும் குட்டிக்கனவுகள் வரை கனவுகளுக்கென்று எல்லோர் வாழ்விலும் ஒரு பங்குண்டு.

 "தூக்கம் என்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் சுவையான பகுதி கனவுகளாகும்" என்கிறார் Dream lab ஐ நிறுவியவர்களுள் ஒருவரான Adam Horowich. உண்மையும் தான்; விழித்த பிறகும் கூட எம் உணர்வுகளோடு தொடர்பாடும் அம்சம் தான் கனவுகள்.

கனவுகள் தொடர்பான ஆய்வுகள் இன்று வரை நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், கனவுகள் ஏன் வருகின்றன? என்ன அர்த்தத்தை சொல்கின்றன போன்றன பற்றிய தெளிவான உறுதியான தகவல்கள் இன்னும் அறியப்படாத புதிர் தான். இருந்தபோதிலும் அறிவியலாளர்கள் விட்ட பாடில்லை.சளைக்காமல் தங்கள் ஆய்வுகளை தொடர்ந்து கொண்டுதானிருக்கிறார்கள்.

சாதாரணமாக கனவு என்பதை ஒருவர் உறங்கும் போது அவரது மனதில் எழுகின்ற காட்சிகள்,ஒலிகள்,உணர்வுகள், கடந்த நிகழ்வுகளின் தாக்கங்களை குறிக்கும் மனப்படிமங்கள் என குறிப்பிடலாம். பொதுவாக உயிர் அங்கிகளில் பாலூட்டிகள் அனைத்திலும் கனவுகள் தோன்றுகிறது. அதிலும் ஆமடில்லாக்கள் எனும் அங்கிகளில் இந்த கனவின் விளைவுகள் மிகுதியாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது.

சாதாரணமாக நாம் நன்றாக தூங்க ஆரம்பித்து 30 இலிருந்து 90 நிமிடங்களின் பிறகே கனவுகள் ஆரம்பிப்பதாக கூறப்படுகிறது. நாம் கனவு காண்கின்ற பொழுது, Adrenalin hormone அளவு அதிகரித்தல், இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தல், போன்ற கவனிக்கத்தக்க மாற்றங்கள் எமது உடலில் ஏற்படுகிறது. இதனால் சில பலவீன இதயம் கொண்டவர்கள் இந்த மாற்றங்களை தாங்க முடியாமல் தூக்கத்திலேயே இறக்கவும் நேரிடுகிறது.

உடல்,மனம் மற்றும் உயிர் ஆகியவை சங்கேதமாக தொடர்பு கொள்ளும் நிலைமையையே கனவு என்கிறோம். இந் நிலைமையில் இத்தொடர்பானது எம்மால் எளிதில் விளங்க முடியாதபடி கருத்துக்களை பரிமாறிக் கொள்கின்றன. எப்போது மூளை,மனம் மற்றும் உயிராற்றல் ஓய்வு நிலையில் இருக்கிறதோ அப்போது மூளையில் சேமிக்கப்பட்ட விடயங்கள் மறுசீராய்வு செய்யப்படுகிறது. அப்போதில் மனதில் இழையோடிய கிளர்ச்சிகள், எண்ணங்கள்,செயல்கள் மற்றும் குறுகிய கால நினைவுகள் இணைந்து ஒலி,ஒளி வடிவிலான ஒரு ஒழுங்கு முறை நிறைந்த மன திரைப்படமே கனவு ஆகிறது.

கனவு காணும் பொழுது மூளையில் Nor-adrenalin,  seratonin அளவுகள் வீழ்ச்சியடைகின்றன.  இதுவே நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்பதில்லையாம்.

தூக்கத்தில் வருவது கனவுகள் என பொதுவாக சொன்னாலும், கனவுகளை பகல் கனவுகள்(Day dreams), தெளிவுநிலை கனவுகள்(Lucid dreams), கொடுங்கனவுகள்(nightmares), அடிக்கடி வரும் கனவுகள்(Recurring dreams), எதிர்காலத்தை உணர்த்தும் கனவுகள் (Epic dreams), நோய் நீக்கும் கனவுகள்(Healing dreams), பொய்வழியான கனவுகள்(False awaking dreams) என பல விதங்களாக வகைப்படுத்தலாம்.

19ம் நூற்றாண்டில் பல மேற்குடி மக்கள் இத்துறையில் ஆர்வம் காட்டினர். ஒலி,வாசனை போன்றவை எவ்வாறு கனவுகளில் தாக்கம் செலுத்துகிறது என்பதை விரிவாக ஆய்ந்தனர். 20ம் நூற்றாண்டில் கனவு அறிவியலுக்கான முக்கியத்துவம் மேலும் உயர்ந்தே போயிற்று.

அறிவியல் இவ்வாறிருக்க பண்டைய மக்களிடையே கனவுகள் குறித்து பல நம்பிக்கைகளும்,சம்பிரதாயங்களும் இருந்து வந்துள்ளன. அவர்கள் கனவுகளை தத்தமது மதங்களோடும், சமய நம்பிக்கைகளோடும் தொடர்பு படுத்தி அதற்கு அர்த்தம் கண்டுபிடிக்க முனைந்துள்ளனர்.

எகிப்தியர்கள் கனவுகளை எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் தீய சம்பவங்கள் குறித்து எச்சரிப்பதற்காக கடவுளிடம் இருந்து வரும் செய்திகளாக கருதினர். ஜப்பானியர்கள் தங்கள் ஆழ்மனதிலுள்ள கேள்விகளுக்கான பதில்களாக கனவுகளை பார்த்தனர். பாபிலோனியர்கள் கனவுகளை தெய்வத்திடம் இருந்துவரும் நற்செய்திகளாகவும், சாத்தான்களிடமிருந்து வரும் தீய செய்திகளாகவும் கருதினர். அசீரியர்கள் கனவுகளை எதிர்காலத்தை சொல்லும் அம்சமாகவே பார்த்தனர்.கெட்ட கனவுகளுக்கு உடனடி பரிகாரங்கள் கூட செய்திருக்கிறார்கள்.

கிரேக்கர்கள் கனவுகள் எதிர்காலம் பற்றி கூறுவதாக கருதினர். சில நேரங்களில் நல்ல கனவுகள் வேண்டி சடங்குகள் கூட செய்திருக்கிறார்கள்.  அதுமட்டுமன்றி கிரேக்கர்கள் கனவுகளை கொண்டு நோய்களை கண்டறியவும் குணப்படுத்தவும் பல வழிகளை கையாண்டனர். கனவுகளை அடிப்படையாக கொண்டு செயற்படும் மருத்துவமனைகளை கூட கட்டியுள்ளனர். அதனை Asklepian sanctuaries என்று அழைத்ததாகவும் வரலாறுகள் கூறுகிறது.

அன்று முதல் இன்றுவரை கனவுகள் குறித்த இவ்வாறான சுவாரஷ்யமான, வியக்க வைக்கும், வேடிக்கையான தகவல்கள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன என்றாலும் கனவுகள் குறித்து அவிழ்க்கப்பட வேண்டிய முடிச்சுக்கள் இன்னும் நிறையவே இருப்பதாகவே தெரிகிறது.

மர்மங்கள் அவிழும்...

 Mahi...✍?

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction