free website hit counter

எல்லையோடு எல்ல!

பயணங்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புஷ்பக விமானத்தில் இலங்கை வேந்தன் பறந்து திரிந்து ஆட்சி செய்தது அந்தக்காலம், மலர் ஊஞ்சலில் உயரப்பறந்து ஆட்சி செய்த அழகை ரசிப்பது இந்தக்காலம்!

ஆனால் அதன் முழு அனுபவம் பறந்திடாமல் காத்திடவும் செய்யலாம் அல்லவா.

உலகில் பரபரப்பாக பறந்து கொண்டு கடுகதி வாழ்க்கையை வாழ்வோரை கொஞ்சம் அமைதியாக்க இலங்கையின் பிரபல சுற்றுலா தளமான எல்ல பகுதியில் பிரபலமாகிவருகிறது ஒரு ஊஞ்சலாட்டம். அதைவிட அந்த ஆட்டத்தின் புகைப்படங்கள் வைரல் ஆகிறது.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் முக்கியத்துவமும் முதன்மையும் வாய்ந்தது இலங்கை பதுளை மாவட்டத்தில் அமைந்துள்ள எல்ல நகரம். யூடியூப்பர்ஸ், சுற்றுலா வலைப்பக்கம் மற்றும் சமூக ஊடகங்களில் மிக அதிகளவில் பகிரப்படும் குறிப்பிட்ட சுற்றுலா தளங்களின் பட்டியலில் எல்ல நகரின் தாக்கத்தை காணலாம். 

20 ஆம் நூற்றாண்டின் இலங்கை  காலத்துனிவ காலத்தில் இலங்கை இரயில் போக்குவரத்து பொறியிளாளரால் கட்டப்பட்ட 9 வளைவு இரயில் பாலம் (Nine Arches Bridge) எல்ல நகரிற்கு மிக அருகாமையில் காணப்படுகின்றது.  சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்தப்பாலம் தெமோதர நோக்கி பயணம் செய்யும் போது வருகிறது. 9 துவார வளைவின் தனித்துவமான கட்டிடயமைப்புதான் காண்போரை கவர்ந்திழுக்க செய்கிறது.

இங்கே 'பம்பரகல சிகரம்', 'எல்ல கற்பாறை' மற்றும் 'சிறிய சிவனொளி பாத மலையும்' உண்டு.  இந்த பிரமிடு வடிவ மலை உச்சியிலிருந்து சூரிய உதயம்/ அஸ்தமனத்தை காண்பது; பெரிய சிவனொளி பாத மலையின் அனுபவத்தை தரும்.  220 மீ (720 அடி) உயரம் கொண்ட 'தியலுமா நீர்வீழ்ச்சி' மற்றும் பசுந்தேயிலை மலைகள் சூழ்ந்த வனம் இந்த எல்ல. "லிப்டன் சீட்'' எனும் காட்சி தள அவதானிப்பு மையத்தில் இருந்தபடி; ஒரு கோப்பை தேநீரை ரசித்துக்கொண்டே இலங்கையின் மிக அற்புதமான காட்சிகளில் ஒன்றான மத்திய மலைநாட்டின் செழிப்பான தேயிலை தோட்டங்களையும் பரந்த மலைகளின் மாயாஜால காட்சியையும் காணலாம்.

அடுத்து இலங்கை புராணங்களுடன், குறிப்பாக இராமாயண இதிகாசத்தின் இலங்கை வேந்தன் இராவணனைச் சுற்றியுள்ள கதைகளுடன் இங்குள்ள சில தளங்களும் பின்னிப்பிணைந்துள்ளது. இந்தக் கதைகளின்படி, மன்னன் இராவணனின் ஆட்சிக் காலத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் குகை, நீர்வீழ்ச்சி, பாதள நீச்சல் குளம் என சில பிரதேசங்கள் இப்போது சுற்றுலா தளமாக மாறியுள்ளது. சீதையை கொண்டு வந்து இங்குள்ள ஒரு குகையில் வைத்ததாக கூறப்படும் 'இராவண குகை'; இதன் வாயில் சூரிய ஒளிக்கீற்றுக்குள் அங்கெங்கு தங்கநிறமாக ஒளிரும்; 'இராவண நீர்வீழ்ச்சி' மற்றும் 'நில் தியா போகுனா' (நீல நிற குளம்) என அவை அழைக்கப்படுகின்றன.

இவை தவிர தற்போது தனியார் சுற்றுலா நிறுவனத்தின் ஏற்பாட்டில் சாகச அனுபவங்களை விரும்பும் பயணிகளுக்கும் தனியாக சாகச அம்சங்களும் உண்டு. இரு மலைகளின் நடுவே கட்டப்பட்ட உரமான கயிற்றின் வழி தொங்கியபடி பயணிப்பதும், நீண்ட உயரமான மலர் ஊஞ்சலில் அமர்ந்தபடி அழகிய மலைத்தொடரின் முன் பறந்து ஆடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவை இப்போது புகைப்படங்களின் சுவாரஸ்யத்தை கூட்டியுள்ளது. 

ஒரு சில வெளிநாடுகள் சுற்றுலா துறையை வளர்க்கும் நோக்கிலிருந்து சற்று மாறுபட்டு இயற்கையோடு மனிதர்களை உண்மையாக தங்களை இணைத்து பயணிக்க ஊக்குவிக்கின்றன. குறிப்பாக பின்லாந்து நாட்டின் 'Ulko-Tammio தீவு' ஒன்று கைப்பேசி இல்லாத முதல் சுற்றுலாத் தலமாகத் திகழ்கிறது. டிஜிட்டல் விரதத்தை கடைப்பிடிப்பதை சிறப்பாக்கும் முகமாக அங்குள்ள சுற்றுலாதுறை அதிகாரிகள் கடந்தாண்டு ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து அதன் ஊடாக விடுமுறையை கழிக்க அத்தீவுக்கு வருபவர்களை கைப்பேசி பாவனைகளை நிறுத்திவிட்டு வருமாரு வலியுறுத்தி வருகின்றனர். 

2023 இல் பிரித்தானியா மற்றும் அமெரிக்க ஜேன் சீ (Gen Zers) எனும் இன்றைய தலைமுறையினர் சமூக ஊடக பதிவிற்கு பதிலாக தங்களின் பயண அனுபவங்களை ஆவணப்படுத்த போலராய்டு கேமரா, கேம்கோடர், 35mm ஃபிலிம் கேமரா போன்ற பழைய தொழில்நுட்பத்தை தேர்வு செய்வதாக ஸ்கைஸ்கேனர் சுற்றுலாத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. 

பிரித்தானியாவின் பெரும் வர்த்தக நகர எல்லைகளை தாண்டி அமைந்திருக்கும் இயற்கை சுற்றுலா தளங்களில் மூன்று நாள் கைப்பேசி அற்ற பயண விடுதிகளை கையாண்டு வருகிறது. தேவையற்ற கழிவுகள் எவ்வாறு நம் உடலிலிருந்து நச்சு நீக்கம் செய்யப்படுகிறதோ அல்லது செய்வதுபோல்; இந்த 'டிஜிட்டல் நச்சு நீக்கம்' எனும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இங்கு வரும் சுற்றுலா விருந்தினர்கள் தங்களது கைப்பேசிகளை 3 நாட்கள் பூட்டிவைத்துவிட வேண்டும். இயற்கையோடு மட்டும் தங்களை 72 மணிநேரம் இணைத்துக்கொண்டு மூழ்கியிருப்பதன் பின்னால் அறிவியல் உண்மை இருப்பதாக கூறுகின்றனர். அதாவது அதிகமான மன அழுத்தத்தை குறைத்து நம் அறிவாற்றல் செயல்பாட்டை இது மேம்படுத்துவதை குறிப்பிட்டுள்ளனர். விடுமுறை பயணங்களில் மக்கள் ஸ்மார்ட் தொழில்நுட்பத்தை கைவிடுவதால் பயணமும் அதன் அனுபவமும் வலுப்படுத்தப்படுகிறது. 

இயற்கை எழில் மிகு பசுமையை பார்க்கும் இடமெல்லாம் விரித்து வைத்து நம்மை வரவழைக்கும் மலை சூழ் வன நகரமான எல்ல; மன அமைதிக்கும் ஓய்வுக்கும் என தெரிவுசெய்யப்படும் சுற்றுலா தளமாக பார்க்கப்படுவதுடன் சமூக ஊடகங்களில் பிரபலமாக சிறந்த புகைப்படங்களை கொள்ளை இடும் இடமாகவும் மாறிவருகிறது. 

நம் நாட்டில் இப்போதைய சூழலில் இந்த நடைமுறை கடினமாக்கும்; எனினும் சுற்றுலாதளங்களில் டிஜிட்டல் பாவனையின் இணைப்பை குறைத்து கொஞ்சம் இயற்கையோடும் அதிகமாக இணைந்து பயணிப்போம்!

Source : TheFuture100

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula