free website hit counter

ஒழுக்கமும் ஒழுங்கும்!

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

அது ஒரு 15 ஆயிரம் பார்வையாளர்களை உள்ளடக்கிய 'பஜன்ட்' காட்சி. 100 யார் நீளமும் 69 யார் அகலமும் கொண்ட பெரிய மேடை. 10 நிமிடத்திற்கு ஒருமுறை என 14 காட்சிகள் மாற்றி மொத்தம் 2 மணித்தியாளங்கள் கொண்ட எல்லாள மகாராஜாவின் நாடக 'பஜன்ட்' அது.

எந்தவிதமான தொழிழ்நுட்ப வசதிகளும் அல்லாத அந்தக்காலத்தில் இலங்கையின் சுயராட்சி தினத்திற்காக  ஒழுங்கு செய்யப்பட்ட இந்த பஜன்ட் காட்சி அனைவரது பாராட்டுதல்களையும் வரவேற்பையும் பெற்று போற்றப்படுகிறது. இதன் கடைசிக் காட்சி படமாக்கப்பட்டு அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. இதன் அனைத்து பெருமைகளையும் தாங்கி நிற்பவர் ஈழத்தில் புகழ் பெற்று விளங்கிய கலையரசு க. சொர்ணலிங்கம் எனும் நாடக கலைஞர்.

கலையார்வமிக்க இளையசமூதாயம் இயங்கிக்கொண்டிருப்பது இப்போது இணையத்தில்தான்; அதிலும் செயற்கை நுண்ணறிவு சாதனத்தின் உதவியுடன் ஒரு நொடியில் ஒரு பெரும் படைப்பையே உருவாக்கிவிடக்கூடிய ஆற்றல் இருப்பதை வரவேற்பதா இல்லையா என்றுதான் தெரியவில்லை. 

 எந்த ஒரு படைப்பை படைப்பதாயினும் அதில் ஒழுக்கமும் ஒழுங்கும் இருந்தால் படைப்பு மேன்மை பெற்று விளங்கும். 

கிட்டத்தட்ட 19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்தோர் முதன் முதலாக அவர்கள் பார்த்து ரசித்த பொழுதுபோக்கு கிராமங்களில் அவ்வப்போது போடப்படும் நாடகக்கூத்துகள்தான். இது பெரும்பாலும் பாடல், ஆடலுடன் மட்டுமே நின்றுவிடும். ஆனால் அதை மாற்றி ஈழத்தில் பேசி நடிக்கும் நாடக வலியுறுத்தலின் முன்னோடியாக கலையரசு க. சொர்ணலிங்கம் அவர்கள் கருதப்படுகிறார். இதனால் நவீன நாடகத்தின் தந்தை எனவும் அழைக்கப்பட்டவர்.

 19 ஆம் நூற்றாண்டுகளில் நாடகம் எவ்வாறு காட்டப்பட்டிருக்கும் அதன் நுனுக்கங்கள், அதற்கு கிடைத்த வரவேற்புகள், புகழடைந்த கலைஞர்கள் குறித்து தற்போது யாரும் பரவலாக அறிந்திருக்காத சுவாரஸ்யமான சரித்திரத்தை ஒரு புத்தகம் பேசினால் வாசிப்பீர்களா?

நாடக கலைஞர்கள் சூழலில் ஒரு ஆண்மகன், படிப்பிலும் கெட்டி விளையாட்டிலும் சுட்டியாக நாடகத்திலும் பற்றுக்கொண்டு வளர்ந்துவருகிறார். சிறுவயதில் தென்னிந்தியாவிலிருந்து வரவழைக்கப்படும் நாடக கோஷ்டிகள் போடும் நாடகங்களுக்கு அழைத்துச்செல்லப்படும் இவர் அதில் வரும் குணசித்திர பாத்திரங்களை உள்வாங்கி பெரியோருக்கும் சிறியோருக்கும் வீட்டில் நடித்துக்காட்டி பெயர் வாங்குகிறார். மெல்ல மெல்ல நாடக கலை ஈர்த்துக்கொள்ளும் போது நாடகத்திற்காக போடப்படும் அரங்குகள் நாடக கலைஞர்களின் ஒப்பனை குறித்த நுனுக்கங்களையும் தெளிவாக பார்த்துவருகிறார்.

பின்னர் பணி நிமித்தம் கொழும்பு சென்று வாழ்ந்தாலும் நாடகத்தை கைவிடவில்லை. அங்கே தன் நண்பர்களுடன் இணைந்து நாடக சபா ஒன்றை உருவாக்கி கொழும்பு வாழ் தமிழ் சமூகத்தினரின் முன் நாடகங்களை அரங்கேற்றி வருகிறார்.  ஆனாலும் ஏற்படும் பெரும் சவால்களையும் போட்டி, பொறாமைகளையும் கலைந்து கலைக்கு தொய்வில்லாமல் பெருமை சேர்க்கிறார். தன் குருநாதரின் பக்தியிலும் வழிநடத்தலிலும் கலைக்கென ஒரு சிறு ஊதியத்தையும் எதிர்பார்க்காது தொடர்ந்து தன்னால் எழுந்து நிற்கும் வயது வரையும் நாடக கலைக்காக பாடுபடுகிறார். நாடக ஆர்வமுள்ள பலரையும் முறையாக நாடகக் கலையை பயிற்றுவித்து பல கலைஞர்களையும் உருவாக்குகிறார். இந்த புத்தகத்தின் கதை சுருக்கம் இது. ஆனால் ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு பதமாக பதிகிறது. நாடகக் கலையின் அம்சங்களை விளக்கமாகவும் கேள்விகளின் விடையுமாக சொல்கிறது. 

சிம்ஹளநாதன்  , பரதகாண்டம், குலேபகவாலி, போன்ற காவிய நாடகங்கள், ஆங்கில நாடக தழுவல்கள் முதல்,  சமூக நாடகங்கள் வரை இயக்கி நடித்தும் உள்ளார். பெண் வேடம், தத்தன், அரசர், வயதான பெரியவர் மற்றும் வில்லன் என ஏற்று நடிக்காத பாத்திரங்கள் இல்லை. யார் எங்கு கேட்டாலும் உடனே நடித்துக்காட்டி மகிழ்விக்கும் குணமும் தனிப்பட்ட துன்பங்களிலும் தயங்காது நல்லமுறையில் நாடகங்களை நடித்துமுடிக்கும் பண்பும் கொண்டவர். 

பஜன்ட்' என சொல்லப்படும் ஒருவகை பேரணியை கிட்டத்தட்ட 400 க்கும் மேற்பட்ட கலைஞர்களை கொண்டு உருவாக்கி படைத்துக் காட்டியவர். நாடகக்கலையை பற்றி ஒரு நாடக கலைஞரே ஒரு புத்தகமாக எழுதி படைத்திருப்பதால் இன்னமும் அது சிறப்புகிறது. இந்த புத்தகத்தில் நாடக ஆற்றுகையில் எப்போதும் ஒழுங்கும் ஒழுக்கமும் இருத்தல் அவசியம் என திரும்ப திரும்ப வலியுறுத்தப்பட்டிருக்கும்.

ஈழத்தில் புகழ் பெற்று விளங்கிய கலையரசு க. சொர்ணலிங்கம் எனும் நாடக கலைஞர் அவர்கள் அனுபவத்தில் எழுதிய 'ஈழத்தில் நாடகமும் நானும்' எனும் புத்தகம் சுயசரிதையையும் தமிழ் இலக்கியத்தையும் கூடவே  வாசிக்க வாசிக்க இறுதி பக்கம் வரை கற்பிக்கிறது.

இன்றைய  கலையார்வமிக்க இளையசமூதாயத்திற்கு நிச்சயமாக இந்த புத்தகத்தை பரிந்துரைக்கலாம்.  அவர்களின் வாசிப்பு தளத்திற்கும் கொண்டு சேர்க்கலாம். 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction