free website hit counter

எழுத்தாளர்கள் சுபாவின் கண்ணீர் பதிவு !

சமூக ஊடகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சுமார் முப்பத்தாறு வருடங்களுக்கு முன்னால் ஒரு நிகழ்வு. கல்கியில் அப்போது ‘மாதம் ஒரு மாவட்டம்’ என்ற பகுதி பிரபலம்.

ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அங்குள்ள மக்களின் குறைகளை நேரில் கேட்டு, அவற்றின் உண்மைத்தன்மை அறிந்து, அவற்றை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வதே அந்தப் பகுதியின் நோக்கம். சில மாவட்டங்களில் அந்தப் பணியை மேற்கொள்ள நாங்கள் அனுப்பி வைக்கப்பட்டபோதுதான் கே.வி.ஆனந்த் ஒரு ஸ்டில் ஃபோட்டோகிராபராக எங்களுக்கு அறிமுகம் ஆனார். இருபது வயதிலும் குழந்தைத்தனமான முகம்.

கல்கியில் உதவி ஆசிரியராக பணிபுரிந்த திரு இளங்கோவன் கேவி ஆனந்தை ‘அப்பூ’ என்று செல்லமாகத்தான் கூப்பிடுவார்.

‘கல்கி’ இதழுக்காக சம்பவங்கள் நிறைந்த விருதுநகர் மாவட்டத்துக்குப் பயணப்பட்டோம். வெவ்வேறு ஊர்களுக்குப் பயணப்பட ஒரு வாடகைக் காரை அமர்த்திக்கொண்டிருந்தோம். கல்கியில் தொடர்ந்து எழுதிப் பரிசுகள் வாங்கிய எழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமியைச் சந்திக்க, மேலாண்மறைநாடு என்ற அவருடைய கிராமத்துக்குச் சென்றிருந்தோம். (பிற்பாடு இவர் நூல் சாகித்ய அகாதமி பரிசுகூட பெற்றது)

அவருடைய எளிமையான வீட்டைச் சுற்றி, முழங்கால் அளவு மழைநீர் தேங்கியிருக்க, பான்ட்டைச் சுருட்டிக்கொண்டு நாங்களும், இளங்கோவனும் தண்ணீரில் இறங்கினோம். ஆனந்த் வாலிப முறுக்கோடு நடுவில் தெரிந்த ஒரு மேட்டில் குதித்து ஒரே எட்டில் தாண்டிவிட முனைந்தார். தொபுகடீரென்று, தடுக்கி விழப் பார்த்து சமாளித்துவிட்டார். ஆனால், அந்த முயற்சியில் அவர் கழுத்தில் மாட்டியிருந்த காமிரா சேற்றுத் தண்ணீரில் முங்கி எழுந்தது.

ஆனந்திடம் இரண்டு கேமிராக்கள் இருக்கும். ஒன்று கட்டுரையோடு வெளியாகும் கறுப்பு வெள்ளைப் படங்கள் எடுப்பதற்கு. இன்னொன்று அட்டைப்படத்துக்கான வண்ண டிரான்ஸ்பரன்ஸி எடுப்பதற்கு. இரண்டில் ஒன்றில் ஈரச்சேற்று அப்பிக்கொண்டதால், அதை அப்போதைக்கு சுத்தம் செய்தாலும், ஒரு கேமிராவிலேயே இரண்டு விதமும் எடுக்கவேண்டிய சூழ்நிலை.

பொன்னுசாமியின் விருந்தோம்பலை ரசித்துவிட்டு, அடுத்தடுத்த வேலைகளில் ஈடுபட்டோம்.
மாநில நெடுஞ்சாலைக்குச் சொந்தமான நிலத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஒருவர், தன் அலுவலகத்துக்காக அத்துமீறி கட்டிடம் எழுப்பியுள்ளதாக ஒரு கடிதம் வந்திருந்தது. குறிப்பிட்ட அந்தக் கட்டிடத்தை நெருங்கும்போதே, குற்றச்சாட்டின் உண்மை புரிந்தது. மற்ற கட்டிடங்கள் நாற்பது, ஐம்பது அடி பின்னால் இருக்க, இது மட்டும் தெற்றுப் பல் போல் முன்னால் முளைத்திருந்தது.

நெடுஞ்சாலையில் ஓரமாகக் காரை நிறுத்தினோம். “முதல்ல ஒரு போட்டோ எடுத்துக்கலாம்..” என்று ஆனந்த் சொல்ல, காரில் இருந்து இறங்கினோம். சரியான கோணம் தேடி, நெடுஞ்சாலையின் எதிர்ப்பக்கம் போய் நின்று, கட்டிடத்தை முழுமையாக கேமராவில் உள்வாங்கி, ஆனந்த் க்ளிக் செய்தபோது, கட்டிடத்தின் முதல் மாடியின் ஜன்னல் வழியே கட்சிக்காரர்கள் சிலர் எங்களைப் பார்த்துவிட்டனர்.

“டேய்.. எவன்டா அது போட்டோ எடுக்கறது..?” என்று மிரட்டலாக ஒரு சத்தம். கட்சி ஆபீஸில் இருந்தவர்களும் கட்சித் தொண்டர்கள் சிலருமாகச் சேர்ந்து எங்களைத் துரத்த ஆரம்பித்தனர்.

ஆனந்த் எங்களைவிட இளையவர். முழு வேகத்துடன் காருக்கு ஓடினார். கட்சிக்காரர்கள் விடவில்லை. காரைச் சூழ்ந்துகொண்டனர். கண்ணாடிகளைத் தட்டினர்.

“எறங்குடா கீழே..!”

ஆனந்த் மிரண்டவராக காரில் இருந்து இறங்கினார்.

“எப்படிடா போட்டோ எடுப்ப..?” என்று அவர்கள் கேமராவைப் பிடுங்கப் பார்த்தார்கள்.
“தப்புதான்.. மன்னிச்சுக்கங்க! உங்க க்ண்ணெதிர்லயே எல்லாத்தையும் எக்போஸ் பண்ணிடறேன்.." என்று சொல்லிவிட்டு ஆனந்த், கேமராவைத் திறந்து சட்டென்று அதில் இருந்து ஃபிலிமை உருவி இழுத்தார்.

இன்றைக்குப் போல் அன்றைக்கு டிஜிட்டல் கேமரா கிடையாது. புகைப்படச் சுருளை இருட்டறையில்தான் வெளியே எடுக்க வேண்டும். இப்படி கட்சிக்காரர்களுக்காக பயந்து வெளியில் இழுத்துவிட்டாரே என்று எங்களுக்குப் பதைப்பு. இரண்டு நாட்களாக, மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நபர்களைச் சந்தித்து உரையாடியபோது, எடுத்த புகைப்படங்கள் எல்லாம் ஒரு கணத்தில் வீணாகிவிட்டதே என்று திடுக்கிட்டோம்.
கட்சிக்காரர்கள் ஃபிலிமைப் பிடுங்கி தெருவோரத்தில் எறிந்தார்கள். நாங்கள் எதிர்க்க எதிர்க்க, அவர்களில் ஒரு நபர் கேமராவையும் பிடுங்கிக்கொண்டு போய்விட்டார்.

எங்கள் முகத்தில் ஈயாடவில்லை. காரில் ஏறியதும், “ஏன் ஆனந்த் அவசரப்பட்டே..? ரெண்டு நாளா எடுத்த போட்டோக்களைத் திரும்பப் போய் எப்படி எடுக்கறது..?” என்று ஆதங்கத்துடன் கேட்டோம்.

“அப்படி நான் செய்யலைன்னா.. நம்மளை வெட்டிப் போட்டிருப்பாங்க..” என்று கூலாகச் சொன்னார், ஆனந்த்.

எங்களுடன் வந்திருந்த கல்கி உதவியாசிரியர் இளங்கோவன், நேரே காவல் நிலையத்துக்கு வண்டியை விடச் சொன்னார். காவல் நிலையத்தில் ஆளும் கட்சிக்கு எதிராக எழுத்துபூர்வமாக புகார் வாங்க போலீஸ் அதிகாரி தயங்கினார். ஆனால், அதே சமயம் ‘கல்கி’ போன்ற பத்திரிகையை எதிர்த்துக்கொள்ளவும் முடியவில்லை. சென்னைக்கு போன் பறந்தது. அந்தப் பகுதி அமைச்சரைத் தொடர்புகொண்டு விஷயத்தை விளக்கினார், காவல் அதிகாரி.
அமைச்சர், கட்சியினருக்கு அங்கிருந்து உத்தரவு கொடுத்தார். கான்ஸ்டபிளை அழைத்தார், அதிகாரி. கேமிராவைப் பிடுங்கியது யாரென்று நாங்கள் விளக்க, “அந்தாளு அவன் வப்பாட்டி வீட்டுல இருப்பான், சார்” என்று கான்ஸ்டபிள் சொல்லிவிட்டு, அங்கு சென்று கேமராவை மீட்டு வந்தார்.

அடுத்த ஊருக்குப் பயணமாகும்போது, ஆனந்த் கேமராவைக் கழுத்தில் தொங்கவிட்டபடி, “கொஞ்சம் சிரிங்களேன்..” என்றார்.

“எப்படி ஆனந்த்..? ரெண்டு நாள் வேலை வேஸ்ட் ஆயிடுச்சே..?”

“ஒண்ணும் வேஸ்ட் ஆகலை. அத்தனை போட்டோவும் பத்திரமா இருக்கு..”
நாங்கள் திகைத்தோம்.

“நான் காருக்குள்ள வந்து ஏறினதும், சட்டுனு கழுத்துல இருக்கிற கேமராவை அவுத்து பைக்குள்ள வெச்சிட்டேன். பயன்படுத்த முடியாத இன்னொரு கேமராவில புது ரோலை லோடு பண்ணி அதைத்தான் கழுத்துல மாட்டிக்கிட்டேன். அவங்க பிடுங்கிட்டுப்போனது அதைத்தான். அவங்களை சமாதானப்படுத்த, அதில் இருந்த காலி ரோலைதான் எக்ஸ்போஸ் பண்ணேன். ரெண்டு நாளா எடுத்த படம் மட்டுமில்ல; இன்னிக்கு எடுத்த பில்டிங் படமும் பத்திரமா இருக்கு...”

“அப்பூ, இவ்ளோ பெரியாளா நீ!” என்று இளங்கோவன் வியந்தார். அந்தப் புகைப்படம் அடுத்த ‘கல்கி’ இதழில் கட்டுரையுடன் வெளியானது.

(இச்சம்பவத்தை பின்னாளில் 'கோ' படத்தில் ஒரு காட்சிக்குப் பயன்படுத்திக்கொண்டோம்)

- சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்)

புகைப்பட உதவி: திரு க்ளிக் ரவி

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction