நேற்று மாலையும், இன்று முற்பகலும் புதிய பாப்பரசர் தெரிவாகாத நிலையில், இரண்டு தடவைகள் கரும்புகையைக் கக்கிய சிஸ்டைன் சேப்பல் புகைபோக்கி, இன்று மாலை 6.10 மணிக்கு, வெண்புகையை வெளியிட்டு, புதிய போப்பாண்டவர் தேர்ந்தெடுத்ததை உலகுக்கு அறிவித்தது. புதிய போப் தெரிவானதை உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்க தேவாலயங்களின் மணிகள் ஒலித்து வரவேற்றன.
சரியாக மாலை 07.20 மணிக்கு, செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்திலிருந்த 40,000 பேர்களின் கைதட்டல்கள் வானத்தை நோக்கி எழ, லோகியாவின் ஜன்னல்கள் திறக்க திருச்சபையின் 267வது போப்பாண்டவர் Leone XIV ( திருத்தந்தை பதினான்காம் சிங்கராயர் ) லோகியாவிலிருந்து விசுவாசிகளுக்கான முதல் ஆசீர்வாதத்தினை வழங்கினார்.
புதிய பாப்பரசர், அவருக்கு முன்னைய பாப்பரசர்களான, ராட்சிங்கர் மற்றும் லூசியானியைப் போலவே நான்காவது வாக்குச்சீட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
புதிய பாப்பரசர் தனது முதலாவது ஆசீர்வாத எரையில், “நான் போப் பிரான்சிஸுக்கு நன்றி கூறுகிறேன். நான் புனித அகஸ்டினின் மகன், நான் ஒரு கிறிஸ்தவன், உங்களுக்கு ஒரு பிஷப். நாம் தேவைப்படுபவர்களுக்கும் துன்பப்படுபவர்களுக்கும் உதவ வேண்டும். உங்கள் குடும்பங்கள், அனைத்து மக்கள், பூமி முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்களுக்கு அமைதி உண்டாகட்டும். கடவுள் உங்கள் அனைவரையும் நேசிக்கிறார், தீமை வெல்லாது" எனக் கூறினார்.