பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகப் பிரிவு காஷ்மீர் பகுதியிலுள்ள உள்ள ஒன்பது தீவிரவாதிகள் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது
, இதேவேளை இத்தாக்குதல் நடத்தப்பட்டதை உறுதி செய்துள்ள பாக்கிஸ்தான் தரப்பு, மூன்று இடங்கள் தாக்கப்பட்டதாகவும், ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்த கொடிய தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான உடன்பாடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இத்தாக்குதல்கள் இன்று 7ந் திகதி ஆரம்பமாகியியுள்ளன.இந்திய தாக்குதல்களுக்கு இஸ்லாமாபாத் பதிலளித்து வருவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். ஆனால் அது குறித்த விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை. பாகிஸ்தானின் அதிக மக்கள் தொகை கொண்ட பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
"ஏப்ரல் 22 தாக்குதலில் இஸ்லாமிய தாக்குதல் நடத்தியவர்கள் 26 பேரைக் கொன்றனர், இது கிட்டத்தட்ட இரண்டு தசாப்தங்களில் இந்தியாவில் பொதுமக்கள் மீது குறிவைக்கப்பட்ட மிக மோசமான வன்முறையாகும். இதற்குப் பதிலடியாக இன்று அதிகாலையில் இந்திய ஆயுதப்படைகள் 'ஆபரேஷன் சிந்தூர்'-ஐ தொடங்கி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீரில் உள்ள பயங்கரவாத உள்கட்டமைப்புக்களைத் தாக்கின, அங்கிருந்துதான் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு இயக்கப்பட்டன," என்று இந்திய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதில் மேலும், "எங்கள் நடவடிக்கைகள் அதிக கவனம் செலுத்தி, பாகிஸ்தான் இராணுவச் செயல்கள் மீது குறிவைக்கப்படவில்லை. தீவிரவாதிகளின் இலக்குகளைத் தேர்ந்தெடுப்பதிலும் செயல்படுத்தும் முறையிலும் இந்தியா கணிசமான நிதானத்தைக் காட்டியுள்ளது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் கோட்லி, அஹ்மத்பூர் ஷர்கியா, முசாஃபராபாத், முரிட்கே மற்றும் ஃபைசலாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதல் நடவடிக்கைகள் குறித்து இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக அவதானித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அணு ஆயுதங்களை வைத்துள்ள இரு தரப்பினரும் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்பதை அறிந்திருப்பார்கள். ஆகையால் இது மேலும் அதிகரித்துவிடாத நிலை உருவாக வேண்டும். மேலும் அது அதிகரிப்பதைத் தடுக்க ஒரு பெரிய இராஜதந்திர உந்துதல் தேவை எனவும், அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்த யுத்தச்சூழலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் "ஒரு அவமானம்" என்று குறிப்பிட்டதுடன் "இது விரைவில் முடிவடையும் என்று நான் நம்புகிறேன்" என்றும் தெரிவித்திருக்கிறார்.