துபாய் விமான கண்காட்சியில் இன்று வெள்ளிக்கிழமை இந்தியப்போர் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தின் விமானி இறந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விமான கண்காட்சி, துபாய் வேர்ல்ட் சென்ட்ரலில் உள்ள அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்றது. இதில் பங்குபற்றிய இந்திய விமானப்படையில் பயன்படுத்தப்படும் தேஜாஸ் என்ற போர் விமானம், உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் விபத்துக்குள்ளானது. விமானநிலையத்தின் வளாகத்திற்குள் விபத்துக்குள்ளாவதற்கு சற்று முன்பு விமானம் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக தரையை நோக்கி குதித்தது போல், கானொலிக்காட்சிகளில் பதிவாகியுள்ளது.
விமானியின் உயிர் இழப்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்த இந்திய விமானப்படை, " இந்த துயர நேரத்தில் விமானியின் துக்கமடைந்த குடும்பத்தினருடன் உறுதியாக நிற்கிறது" என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. "விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது" என்றும் மேலும் தெரிவித்துள்ளது.
தேஜாஸ் விமானம் இந்தியாவின் உள்நாட்டு போர் விமானமாகும், இது அரசு நடத்தும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
