கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என்ற கேள்விக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் பதிலளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் மாவட்ட ஆட்சியருக்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின.
இது தொடர்பாக ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து, கள்ளக்குறிச்சி மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு தயங்குவது ஏன்? என அமைச்சர் அருண்ராஜிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த அவர், “நடவடிக்கை எடுக்க தயங்கவில்லை. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த கால திமுக ஆட்சியில் எந்த அளவுக்கு பெண்கள் பாதுகாப்பின்றி அச்சத்தோடு இருந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்தார்.