free website hit counter

தமிழக அரசும், காவல்துறையும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது - அண்ணாமலை

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் இன்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், கரூரில் நிகழ்ந்த துயரத்திற்கு தமிழக அரசும், காவல்துறையும் கவனக்குறைவாக செயல்பட்டதே காரணம் என பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உள்பட சுமார் 31 பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. விஜய் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாக தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

தி.மு.க.வினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பி பாதுகாப்பு கொடுக்கும் தி.மு.க. அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமல் இருப்பது வழக்கமாகியிருக்கிறது.

உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula