website analysis

சட்டம் - ஒழுங்கு, விலைவாசி உயர்வு... டிச. 2ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு ஆகியவற்றுக்கு எதிராக தமிழகம் முழுவதும் வருகிற டிச. 2 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, மக்கள் சொல்லொண்ணாத் துயரத்தில் ஆழ்ந்திருப்பது, தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை, போதைப் பொருள் புழக்கம் எனச் சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ள அவல நிலை, மேக்கேதாட்டு பிரச்னையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தொடர்ந்து மௌனம் காத்து வரும் தவெக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் 85 மாவட்டங்களின் சார்பில் வருகிற டிச. 2 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.

மக்கள் விரோத தவெக ரீல்ஸ் மாடல் ஆட்சியாளர்களின் முகத்திரையைக் கிழிக்கின்ற வகையிலும், அவர்களுடைய மக்கள் விரோத, ஜனநாயக விரோத ஆட்சியை மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்துகின்ற வகையிலும் நடைபெறும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சம்பந்தப்பட்ட மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், மாவட்டக் கழகச் செயலாளர்கள் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் மட்டுமின்றி பெண்கள் உள்பட மக்கள் அனைவரும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்