அதிமுகவின் 6 எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா விவகாரத்தில் பேரவைத் தலைவர் நடவடிக்கை செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 47 எம்.எல்.ஏ.க்களில் 25 பேர், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு ஆதரவாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இதனால், கட்சிக் கொறடா உத்தரவை மீறியதாக 25 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய அதிமுக தரப்பில் பேரவைத் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மரகதம் குமரவேல் (மதுராந்தகம்-தனி), சத்தியபாமா (தாராபுரம்-தனி), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), ஜெயக்குமார் (பெருந்துறை) ஆகிய 4 பேரும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர். இவர்களது ராஜினாமாவை பேரவைத் தலைவர் ஜே.சி.டி.பிரபாகர் ஏற்றுக்கொண்டார். ஆனால், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும்போது, இந்த 4 பேரின் ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ஏற்றது சட்டவிரோதமானது எனக் கூறி அதிமுக கொறடா அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஜூன் 15-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனிடையே, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி, கட்சிக் கொறடா உத்தரவை மீறிய எஞ்சிய 21 எம்.எல்.ஏ.க்களை மன்னிப்பதாக பேரவைத் தலைவர் கடிதம் அளித்தார். இதை அடுத்து அவர்கள் மீதான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
அதன்பின்னர் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ. சி.விஜயபாஸ்கர், கரூர் தொகுதி எம்.எல்.ஏ. எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்த நிலையில், இவர்களது ராஜிநாமாக்களையும் பேரவைத் தலைவர் ஏற்றுக்கொண்டார்.
இவர்களுக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் இருந்த நிலையில், அவர்களது ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி ஆகியோர் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகளில் செவ்வாய்க்கிழமை (அக். 13) காலை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அமர்வு தீர்ப்பளித்தது.
அதன்படி, அந்தத் தீர்ப்பில், அதிமுகவைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏக்களின் ராஜிநாமாவை பேரவைத் தலைவர் ஏற்றது சரியே. அவரின் நடவடிக்கைகள் செல்லும். தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருப்பதால் ராஜிநாமாவை ஏற்க தடையில்லை என்றும் 2 மாதங்களில் தகுதி நீக்க நடவடிக்கையை முடிக்கவும் பேரவைத் தலைவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.