ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 35க்கு வாங்கினால் ரூ. 1 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் ஏற்படும் என்றும், இதனால் அனல் மின்நிலையப் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையையும், மின்வெட்டுப் பிரச்னையையும் சமாளிக்க, தனியார் நிறுவனங்களிடம் இருந்து ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விலை இதுவரை இல்லாத உச்சமாகும். சில வாரங்களுக்கு முன்பே முயன்றிருந்தால் இதை விட குறைந்த விலையில் மின்சாரம் வாங்கியிருக்க முடியும். ஆனாலும், நாடு முழுவதும் மின்சாரத்தின் தேவை சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதைத் தவிர மின்வாரியத்திற்கு வேறு வழியே இல்லை என்று கூறப்படுகிறது.
இது தற்காலிக ஏற்பாடுதான் என்றாலும், இதே நிலை மேலும் பல மாதங்களுக்கு தொடரும் பட்சத்தில் மின்சார வாரியம் சந்திக்கவிருக்கும் இழப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும் என்று தெரிகிறது. ஒரு மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 1000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்த முடியும். அதன்படி, 4,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு 45 லட்சம் யூனிட் மின்சாரத்தையும், ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 10.80 கோடி யூனிட் மின்சாரத்தையும் பயன்படுத்த முடியும்.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ. 7 என்ற விலைக்கு மட்டுமே மின்சார வாரியம் விற்பனை செய்கிறது. தமிழக அரசால் இலவச மின்சாரத்திற்கான மானியம் மற்றும் இழப்பீடாக ஆண்டுக்கு சுமார் ரூ. 32 ஆயிரம் கோடி வழங்கப்படும் நிலையில், அதையும் சேர்த்தால் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான விலையாக மின்வாரியத்திற்கு ரூ. 10.32 மட்டுமே கிடைக்கும். ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35க்கு வாங்கி, ரூ. 10.32க்கு விற்பனை செய்தால் ரூ. 24.68 இழப்பு ஏற்படும். ஒரு நாளைக்கு 10.80 கோடி யூனிட்டுகளுக்கு ரூ. 266.54 கோடி இழப்பு ஏற்படும். ஆண்டுக்கு ரூ. 97.288.56 கோடி இழப்பு ஏற்படும். இது இப்போது கூடுதலாக வாங்கப்படும் மின்சாரத்தின் மூலம் ஏற்படும் இழப்பு மட்டுமே. மேலும், 15% மின்சார இழப்பு, வேறு ஆதாரங்களில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தின் இழப்பு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் இழப்பு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டால் மொத்த இழப்பு ரூ. 1.20 லட்சம் கோடியைத் தாண்டும்.
மின்சார வாரியம் ஏற்கெனவே ரூ. 2.47 லட்சம் கோடி கடனுடன் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. வாங்கிய கடனுக்கான வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ரூ. 10,000 கோடிக்கும் கூடுதலாக மின்வாரியம் செலுத்துகிறது. அத்துடன், அதிக விலைக்கு 4,500 மெகாவாட் மின்சாரம் வாங்குவதால் ஏற்படும் ரூ. 1 லட்சம் கோடிக்கும் கூடுதலான இழப்பையும் சேர்த்தால் தமிழ்நாடு மின்சார வாரியம் இன்னும் ஓராண்டுக்குகூட செயல்பட முடியாமல் முடங்கி விடும் அல்லது மின்சாரக் கட்டணத்தை இரு மடங்காக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவை இரண்டுமே தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லதல்ல.
தமிழ்நாடு இப்படி ஒரு நெருக்கடியான நிலையை எதிர்கொள்வதற்கு காரணம் தமிழ்நாடு மின்வாரியத்தால் அறிவிக்கப்பட்ட அனல் மின்திட்டங்கள் குறித்த காலத்தில் நிறைவேற்றப்படாததுதான். தமிழ்நாட்டின் சராசரி மின்தேவை 22,000 மெகாவாட்டாக இருக்கும் நிலையில், அதில் தமிழ்நாடு மின்சார வாரியம் அதன் சொந்த அனல் மின் நிலையங்கள் மூலம் நேற்று உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தின் அளவு 3216 மெகாவாட் மட்டுமே. தமிழ்நாட்டில் கடந்த 20 ஆண்டுகளில் 2900 மெகாவாட் அளவுக்கு மட்டும் தான் அனல் மின்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் 800 மெகாவாட் திறன் கொண்ட வடசென்னை மூன்றாம் நிலை அனல் மின்நிலையம் மட்டுமே கடந்த ஜனவரி மாதத்தில்தான் வணிக அடிப்படையிலான மின்னுற்பத்தியை தொடங்கியுள்ளது.
பத்தாண்டுகளுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்ட 1320 மெகாவாட் திறன் கொண்ட உடன்குடி அனல்மின் நிலையப் பணிகள் 95% அளவுக்கும், 1320 மெகாவாட் திறன் கொண்ட எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் நிலையம் அமைக்கும் பணிகள் 75% அளவுக்கும் மட்டுமே நிறைவடைந்துள்ளன. உப்பூரில் 1600 மெகாவாட் அனல் மின்நிலையம் அமைக்கும் பணிகள் 35% முடிவடைந்த நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. 660 மெகாவாட் எண்ணூர் அனல் மின்நிலைய விரிவாக்கத் திட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடங்கிக் கிடக்கிறது.
இவை தவிர இன்னும் 12 ஆயிரம் மெகாவாட்டுக்கும் கூடுதலான திறன் கொண்ட அனல் மின் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன. அவற்றில் உடன்குடி தலா 1320 மெகாவாட் திறன் கொண்ட இரு அனல் மின் திட்டங்கள், தூத்துக்குடி மாவட்டத்தில் 600 மெகாவாட் அனல் மின் திட்டம் ஆகியவற்றுக்கு பெயரளவில் மட்டும் சில அடிப்படை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவை தவிர மீதமுள்ள அனல் மின் திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 12% முதல் 15% வரை அதிகரிக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சொந்த மின்னுற்பத்தித் திறனை அதிகரிக்காவிட்டால், இதேபோல் அதிக விலை கொடுத்து தான் மின்சாரம் வாங்க வேண்டியிருக்கும்.
இதை உணர்ந்து தமிழகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டு முடிக்கப்படாமல் இருக்கும் 4900 மெகாவாட் அனல் மின் திட்டங்களையும், அறிவிக்கப் பட்டு எந்தப் பணியும் தொடங்கப்படாமல் இருக்கும் 3240 மெகாவாட் அனல் மின் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி முடிக்க வேண்டும். இந்த மின்திட்டங்களின் முன்னேற்றத்தையும், அவை எப்போது முடியும் என்பதையும் மக்கள் அறிந்து கொள்வதற்கு வசதியாக இந்தத் திட்டங்களின் செயலாக்க முன்னேற்றம் குறித்த கால அட்டவணையை மின்சார வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.