கோவை சூலூரை அடுத்த கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடைக்கு சென்றபோது மாயமான நிலையில், அப்பகுதியில் உள்ள முட்புதரில் சடலமாக மீட்கப்பட்டார். தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு கட்சிகளும் இதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரே, இந்த படுபாதக செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கார்த்திக் என்ற 33 வயது கொடூரனை போலீசார் கைது செய்த நிலையில், உதவியாக இருந்ததாக மோகன் ராஜ் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது என தெரிவித்து இருந்த முதல்-அமைச்சர் விஜய், இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும் என நேற்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் விஜய், கொலை செய்யப்பட்ட சிறுமியின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது சிறுமியின் பெற்றோருக்கு முதல்-அமைச்சர் விஜய் ஆறுதல் கூறினார். அத்துடன், குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத்தரப்படும் என பெற்றோரிடம் முதல்-அமைச்சர் உறுதியளித்துள்ளார்.