தமிழக சட்டசபைக்கான தெர்தல் கடந்தமாதம் நடைபெற்று, அதற்கான தேர்தல் முடிவுகள் இம்மாதம் 4ந் திகதி வெளிவந்திருந்தது.
இத் தேர்தல் முடிவுகளில், எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்காத நிலையில், 108 ஆசனங்களைப் பெற்று முதலிடத்தில் இருந்த விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்கக் கோரிய போதும், அதற்கான பெரும்பாண்மை இல்லாத நிலையில் திமுக கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்த போதும் பெரும்பாண்மைப்பலம் என்பது இழுபறிகளுக்கு மத்தியில் இருந்தது. இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்த தலா 2 உறுப்பினர்களைக் கொண்டிருந்த இடதுசாரிக்க கட்சிகள் இரண்டும், வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்திருந்தன.
அப்போதும் பெரும்பாண்மை இல்லாத நிலையில், ஆளுனர் ஆட்சி அமைந்து விடக் கூடிய சூழ்நிலை அமைந்து விடலாம் எனும் நிலை தோன்றியது. அவ்வாறான நிலையில், திமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தங்களது 2 உறுப்பினர்களுடன் வெளியிலிருந்து நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க, அதேபோன்று திமுக கூட்டணியிலிருந்த முஸ்லீக் கட்சியும் தனது 2 உறுப்பினர்களுடன் நிபந்தனையற்ற ஆதரவினை வழங்க, தவெக ஆட்சியமைக்க ஒப்புதல் கொடுத்த ஆளுநர், 13.05.26 சட்டசபையில் பெரும்பாண்மையை நிரூபிக்க வேண்டும் எனும் உத்தரவோடு, 10.05.26ல் தமிழகத்தின் 17வது முதல்வராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அன்றைய நாளில் 09 உறுப்பினர்களுடன் தமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட விஜய் தலைமையிலான சட்டசபை 11ந் திகதி கூடிய போது, புதிய சபாநாயகர் தெரிவு நடைபெற்று, உறுப்பினர்கள் பதவிப் பிரமாணமும் நடைபெற்றது. இன்று காலை 09.30 மணிக்குக் கூடிய தமிழக சட்டசபையில், நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதான எதிர்கட்சியான திமுக வெளியேற, 144 உறுப்பினர் ஆதரவும், 22 பேர் எதிர்ப்பும், 5 பேர் நடுநிலையும் வகிக்க, வெற்றி பெற்றது.
