free website hit counter

ஐபிஎல் தனது கனவு என்கிறார் உலகின் இரண்டாம் சிறந்த பந்துவீச்சாளர்

விளையாட்டு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உலக டி20 பந்து வீச்சாளர் பட்டியலில் இரண்டாம் இடத்தை தக்க வைத்துள்ள இலங்கை சுழல் பந்து வீச்சாளர்

வனிந்து ஹஸரங்க, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளில் பங்குபற்றுவது தொடர்பாக அண்மையில் லசித் மாலிங்கவின் நைன்டி9 யூடூப் பக்கத்தில் மாலிங்காவுடனான நேர்காணலில் கருத்து தெரிவித்தார்.

தனக்கு ஐபிஎல் ஆடுவதற்கு ஆர்வம் இருப்பதாக குறிப்பிட்ட ஹசரங்க, ''எனக்கு கிரிக்கெட்டில் இரு இலட்சியங்கள் உள்ளன. அதில் ஒன்று ஐபிஎல் போட்டிகளில் ஆடி திறமையை வெளிப்படுத்துவதும், மற்றையது இங்கிலாந்து கவுண்டி அணியொன்றுக்கு ஆடுவதாகவும் இருக்கின்றது. இந்திய அணிக்கு எதிரான தொடரின் பின்னர் இரண்டு ஐபிஎல் அணிகள் என்னை தமது அணிகளில் விளையாட அழைத்தனர். எனினும், எதுவித உத்தியோகபூர்வ முடிவுகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. ஐபிஎல் இல் இணைவது எனக்கு அனுபவத்தினை அதிகரிக்கும் என நம்புகின்றேன். ஐபிஎல் தொடரில் ஆடும் போது உலகின் ஏனைய லீக் கிரிக்கெட் தொடர்களில் பெற்றுக்கொள்ள முடியாத ஒரு அனுபவத்தினை பெற்றுக்கொள்ள முடியுமாக இருக்கும். அதோடு, டி20 உலகக் கிண்ணம் நடைபெறவுள்ள ஐக்கிய அரபு இராச்சியத்திலேயே ஐபிஎல் போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. எனவே, உலகக் கிண்ணத்தில் ஆடும் போது ஐபிஎல் அனுபவங்கள் எனக்கு பலமளிக்கும் என எண்ணுகின்றேன்.'' என தனது ஐபிஎல் கனவு பற்றி பேசியுள்ளார்.

மேலும் "நான் ரஷீட் கான் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகிய இருவரினையும் பின்பற்றி வந்திருந்தேன். அவர்கள் எனது பந்துவீச்சுப் பாணியினை ஒத்தவிதத்தில் இருப்பதோடு, அவர்கள் நான் வீசுகின்ற அதே வேகத்தில் தான் சிறப்பாக பந்து வீசுகின்றனர். அவர்கள் விளையாடுகின்ற போது அவர்களை நான் கவனித்து கற்றுக்கொள்கின்றேன்'' என தனது பந்துவீச்சினை விருத்தி செய்வதற்காக பின்பற்றும் செயற்பாடுகள் பற்றி பேசிய போது வனிந்து ஹஸரங்க குறிப்பிட்டார்.

அதேநேரம், இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல்பந்து பயிற்றுவிப்பாளராக இருக்கும் பியால் விஜேயதுங்கவிடம் இருந்து தான் கற்றுக்கொள்கின்ற விடயங்கள் குறித்தும் கருத்து வெளியிட்ட வனிந்து ஹஸரங்க அவரினால் அதிக பயன்களைப் பெற்றுக்கொள்வதாக கூறியிருந்தார்.

பொறுத்திருந்து பார்ப்போம் ஐபிஎல் இல் மீண்டும் இலங்கை வீரர் ஒருவர் விளையாடுவாரா என .

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction