தங்கள் பெயர்களில் பதிவு செய்யாமல் வாகனங்களை கொள்வனவு செய்து பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாகனம் வாங்கிய 14 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் என்று கூறிய திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், அதன்பின்னர் நாளொன்றுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
கொழும்பில் நேற்று அமுலுக்கு வந்த போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை கண்டறியும் பொலிஸாரின் சிசிடிவி கமரா முயற்சிக்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ், குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டவர்களுக்கான அபராதத் தொகை வாகனத்தின் பதிவு செய்யப்பட்ட உரிமையாளரின் முகவரிக்கு அனுப்பப்படும் என்றார்.
இதன் மூலம் பதிவு செய்யப்படாத வாகனங்களை அடையாளம் காண திணைக்களத்திற்கு இத்திட்டம் உதவும் என அனுருத்த வீரசிங்க மேலும் தெரிவித்தார்.