ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கூட்டம் நேற்று (25) இரவு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடலின் போது, அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள், அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துதல் மற்றும் அனைத்து தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கிய அபிவிருத்தி திட்டங்களை தயாரித்தல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் விசேட கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் எடுக்கும் முடிவுகள் மற்றும் வரவிருக்கும் தேர்தல்கள் தொடர்பாக குறிப்பிட்ட உடன்பாடுகளை எட்டுவது குறித்தும் கவனம் செலுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டி.பீ.ஹேரத், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஆளும் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.