இரஷ்யாவின் பசிபிக் கடற்கரையில் இன்று காலை அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 7.4 ரிக்டர் அளவிலான மூன்று பெரிய நிலநடுக்கங்கள் பதிவானதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை 32 நிமிடங்களுக்குள் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி கடற்கரைக்குச் சமீபமாக 10 கி.மீற்றர் ஆழத்தில், ஒரே பகுதியில் மூன்று சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரஷ்யாவிற்கும் அமெரிக்காவின் ஹவாய் மாநிலத்திற்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க தேசிய சுனாமி மையத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேற்படி மூன்று நிலநடுக்கங்களில், இரண்டு நிலநடுக்கங்கள் 6.7 ரிக்டர் அளவிலும், ஒன்று 7.4 ரிக்டர் அளவிலும் பதிவாகியுள்ளன. இவை தவிரவும், தொடர்ந்து அதே பகுதியில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாகவும் USGS கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.