free website hit counter

தமிழரசுக் கட்சி பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும்! (புருஜோத்தமன் தங்கமயில்) 

பதிவுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழ்த் தேசிய அரசியலின் முதன்மைக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் பழைய பல்லவியைப் பாடத் தொடங்கியிருக்கின்றது. சிவஞானம் சிறீதரன் புதிய தலைவராக தேர்தெடுக்கப்பட்ட பின்னராவது கட்சியை ஒருங்கிணைத்து தீர்க்கமான தலைமைத்துவத்தை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரினால் தேசிய மாநாட்டை நடத்தக்கூட முடியவில்லை. திருகோணமலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருக்க வேண்டிய தேசிய மாநாடு, எப்போது எங்கு நடக்கும் என்பது யாருக்கும் தெரியவில்லை. கட்சியின் தேசிய மாநாட்டை முன்னாள் தலைவராக மாவை சேனாதிராஜா ஒத்திவைக்கும் அளவுக்கு, சிறீதரன் ஏன் அனுமதித்தார் என்ற கேள்வி எழுகின்றது. 

தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு முன்னைய மத்தியகுழு மற்றும் பொதுக்குழுக் கூட்டங்கள் திருகோணமலையில் கடந்த சனிக்கிழமை கட்சியின் தலைவர் சிறீதரன் தலைமையில் நடைபெற்றது. மத்திய குழுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் உள்ளிட்ட நிர்வாக பதவிகளுக்கு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டார்கள். அந்த நியமனங்களை, பொதுச் சபை வாய் மொழிமூலமும், பின்னர் வாக்கெடுப்பினூடும் அங்கீகரித்திருக்கின்றது. ஆனால், வாக்கெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், முக்கிய பதவிகளை எதிர்பார்த்து வந்திருந்த சிலர், தங்களுக்கு அந்தப் பதவிகள் கிடைக்கவில்லை என்ற நிலையில், தலைவர் சிறீதரனுக்கும், முன்னாள் தலைவர் மாவை உள்ளிட்டவர்களுக்கு எதிராக கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தினர். இந்தக் குழப்பத்தினை தலைவராக சிறீதரன் கட்டுப்படுத்தி, அடுத்த நாள் தேசிய மாநாட்டை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதனைச் செய்ய அவர் தவறிய புள்ளியில், முன்னாள் தலைவரான மாவை, தேசிய மாநாட்டை ஒத்திவைப்பதாக அறிவித்திருக்கின்றார். 

முன்னாள் தலைவர் ஒருவர் தேசிய மாநாட்டை ஒத்திவைக்கும் அதிகாரத்தை தமிழரசுக் கட்சியின் யாப்பு வழங்கவில்லை. தேசிய மாநாட்டுக்கு முதல்நாள் இடம்பெறும் மத்திய குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குவதுடன், புதிய தலைவராக பொறுப்பேற்கும் நபர், கட்சியின் தலைவராக மாறுகிறார். அப்படித்தான் தமிழரசுக் கட்சியின் யாப்பு வரையறுக்கின்றது. அப்படியான நிலையில், சிறீதரன் இப்போது, தேர்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற நிலையில் இல்லை. அவர், இப்போது, தமிழரசுக் கட்சியின் தலைவர் என்ற நிலையில் இருப்பவர். அதுபோக, தேசிய மாநாட்டை கட்சியின் தலைவர் கூட ஒத்திவைக்கும் அதிகாரம் இல்லாதவர், அப்படி செய்ய வேண்டுமென்றால் மத்திய குழுவைக் கூட்டி அந்த முடிவுக்கான அங்கீகாரத்தைப் பெற வேண்டும். ஆனால், மாவை, கட்சியின் யாப்புக்கும் ஒழுங்குக்கும் அப்பால் நின்று தேசிய மாநாட்டை ஒத்திவைத்திருக்கிறார். அதனை, சிறீதரன் ஆரம்பத்திலேயே சரி செய்திருக்க வேண்டும். மாறாக, சிறீதரன் ஒரு சிலரின் கூச்சல் குழப்பத்துக்குப் பயந்து, தேசிய மாநாட்டை நடத்தாமல் குழப்பம் விளைவித்தவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்பது, அவரின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்குகின்றது. 

தமிழ் மக்களுக்கோ, தமிழ்த் தேசிய அரசியலுக்கோ தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியின் உள்வீட்டுக் குழப்பங்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதற்கு நேரமில்லை. ஏனெனில், தனிப்பட்ட தேவை, சுயநலம் சார்ந்து சிலரின் தகிடுதித்தங்களுக்காக ஒட்டுமொத்த மக்களின் அரசியலும் அடகு வைக்கப்பட முடியாது. அதனை, தமிழரசுக் கட்சியினர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ் மக்கள் தங்களது கட்சியையே, தொடர்ந்தும் முதன்மைக் கட்சியாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தமிழரசுக் கட்சியினருக்கு இருக்கும் இறுமாப்பாகும். அதனால்தான், எந்தவிதப் பொறுப்புணர்வுமின்றி, இவ்வாறான காட்சிகளை அரங்கேற்றுகிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலில் மாற்றுத் தலைமை என்பது, தமிழரசுக் கட்சிக்கு எதிராக பலமாக எழவில்லை. அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் யாழ்ப்பாணத்துக்குள் மாத்திரமே சில ஆயிரம் வாக்குகளைக் குறிவைத்து இயங்கும் கட்சி. சி.வி.விக்னேஸ்வரனின் கட்சி யாழ்ப்பாணத்தில் விழும் உதிரி வாக்குகளில் தப்பிப் பிழைக்கும் கட்சி. ஏனைய முன்னாள் ஆயுத இயக்கக் கட்சிகள், ஒரு சில பிராந்தியங்கள் மற்றும் தனிநபர் அபிமானங்களினால் இன்னமும் கட்சியாக தங்களை நிலை நிறுத்திக் கொண்டிருப்பவை. உதாரணமாக, புளொட் இயக்கம், அந்த இயக்கத்தின் மீதான அபிமானத்தினால் பாராளுமன்ற உறுப்பினரைப் பெறவில்லை. மாறாக, சித்தார்த்தனின் தந்தையும் தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் வலிகாமம் மக்களுக்கு செய்த சேவை மற்றும் கொடையின் நன்றி விசுவாசத்தினால் கிடைக்கும் வாக்குகளினால் தெரிவானவர். அப்படியான நிலையில், வடக்கு கிழக்கு பூராவும் ஆளுமை செலுத்தும் கட்சியாக தமிழரசுக் கட்சியினருக்கு தலைக்கனம் அதிகரிப்பது என்பது இயல்பானதுதான். ஆனால், அந்தத் தலைக்கனம் என்பது, மிகமோசமான நிலையை அடைந்து கொண்டிருக்கின்றது. அது, கட்சியை மாத்திரமல்ல, தமிழ் மக்களையும் நட்டாற்றில் விடும் வேலையை பார்க்க வைக்கின்றது. 

இந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தேர்தல்களினால் நிறையப்போகின்றது. ஒரு கட்சியாக அந்தத் தேர்தல்களை எதிர்கொள்வதற்காக கட்சியை மாத்திரமல்ல மக்களையும் தயார்ப்படுத்த வேண்டும். ஆனால், தமிழரசுக் கட்சியோ, தன்னுடைய கட்சி நிர்வாகக் கட்டமைப்புக்காக நடத்திய தேர்தல்களையும், அதன் முடிவுகளையும் தேசிய மாநாட்டை நடத்தி அடுத்த கட்டத்துக்கு செல்வதற்கு தயாராக இல்லை. இந்தக் குழப்பம், கட்சியினரை மாத்திரமல்ல ஆதரவாளர்களையும் சோர்வடைய வைக்கும். மாவை காலத்து தமிழரசுக் கட்சி என்பது, தோல்வியின் முகமாக மாறி வந்தது. அந்தத் தோல்வியின் கட்டங்களில் இருந்து வெற்றியின் பக்கத்திற்கு கட்சியை அழைத்துச் சென்றாக வேண்டும். அது, தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் ஒருவரினால் மாத்திரம் முடியாது. கட்சியின் நிர்வாகம், பொதுக்குழு உறுப்பினர்கள் தொடங்கி, அனைவரும் மனது வைத்தால்தால் சாத்தியமாகும். அதற்கு, அந்தக் கட்சியினர் பொறுப்புணர்வுடன் நடக்க வேண்டும். அப்படியான கட்டத்தை நோக்கி நகரவில்லை என்றால், பொதுத் தேர்தலில் தென் இலங்கைக் கட்சிகளும், அந்தக் கட்சிகளின் உதிரிகளும் வடக்கு கிழக்கில் வாக்கு அறுவடையைச் செய்யும். அது, தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளின் எண்ணிக்கையை பாராளுமன்றத்துக்குள் குறைக்கும். 

மக்களைத் தீர்க்கமான அரசியலின் பக்கம் ஒருங்கிணைப்பது என்பது, தமிழ் மக்களின் முதன்மைக் கட்சியாக தமிழரசு செய்ய வேண்டியது. அதனைச் செய்யாது, பண முதலைகள், முகவர்களை கட்சியின் தீர்மானங்களில் தாக்கம் செலுத்தும் அளவுக்கு அனுமதிக்கும் சூழலை உருவாக்குவது என்பது, கட்சியின் மூல வேரையே அறுத்துவிடும். இப்படியான காட்சிகள் உலகம் பூராவும் நிகழ்ந்திருக்கின்றன. அப்படியான காட்சியை தமிழரசுக் கட்சியும் பிரதிபலித்து, அழிந்துவிடுமோ என்கிற அச்சம் மக்களிடம் உண்டு. தந்தை செல்வா மிக ஜனநாயக தன்மையோடு தோற்றுவித்த கட்சி, தமிழீழ விடுதலைப் புலிகள் மீட்டுக்கொடுத்த கட்சி என்கிற அடையாளங்களோடு தமிழரசுக் கட்சி இன்னமும் இருக்கின்றது. ஆனால், அதற்குள் அரசியல் அறமற்ற தரப்புக்களின் ஊடுருவல் என்பது மிகவும் ஆபத்தானது.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பிலான மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை வெளிவர இருக்கின்றது. இந்த அறிக்கையில் என்னென்ன விடயங்கள் உள்ளடக்கப்படப் போகின்றன என்பது தொடர்பில் இப்போது தமிழ்த் தேசிய அரசியல் அரங்கு கவனிப்பதில்லை. கிட்டத்தட்ட தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கை விடயம், சர்வதேச ரீதியில் கையாளப்படும் ஓர் இடமாக இன்னமும் இருப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மாத்திரமே. அங்குதான், இலங்கை தொடர்பிலான தீர்மானம் இன்னமும் நிலுவையில் இருக்கின்றது. அந்தத் தீர்மானத்தை நீடிப்பது தொடர்பிலான வாக்கெடுப்பு, செப்டம்பரில் நடைபெறும் அமர்வில் இடம்பெறும். அதற்கான சூழலை தக்க வேண்டிய பொறுப்பு தமிழரசுக் கட்சிக்கு இருக்கின்றது. இலங்கை தொடர்பிலான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வருவது என்பதே மிகப்பெரிய இராஜதந்திர நகர்வுகளோடு செய்யப்பட வேண்டியிருக்கின்றது. இன்றைய இஸ்ரேல்- பலஸ்தீன மோதலினால் உலக இராஜதந்திர ஒழுங்கு என்பது மாற்றமடைந்திருக்கின்றது. அப்படியான நிலையில், இலங்கை மீதான தீர்மானத்தை மீண்டும் கொண்டு வருவதற்கும், அதற்கு ஆதரவளிக்குமாறு நாடுகளைக் கோருவதும் அவ்வளவு இலகுவான ஒன்றல்ல. அதற்கான செயற்திட்டங்களை தமிழ்த் தரப்பு மும்முரமாக முன்னெடுக்க வேண்டும். இல்லையென்றால், இலங்கை சர்வதேச ரீதியில் எதிர்கொண்டிருந்த அந்த ஓர் சிக்கலில் இருந்தும் வெளியேறிவிடும். முன்னைய தீர்மானத்தினால் உருவாக்கப்பட்ட இலங்கை தொடர்பான பொறப்புகூறல் செயற்றிட்டம் தற்போது இயங்கி வருகின்றது. அதுவும் இல்லாமல் போய்விடும். அதன்பின்னர், சர்வதேச விசாரணை, சர்வதேச தீர்ப்பாயம் என்று அறிக்கைகளில் ஆர்வமூட்டிக் கொண்டு மாத்திரம் இருக்க வேண்டியிருக்கும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களினால் முழுமையான நீதி கிடைத்துவிடும் என்றில்லை. ஆனால், அதனையொரு இராஜதந்திர கருவியாக தமிழ்த் தரப்பு தொடர்ந்தும் கையாள வேண்டும். இல்லையென்றால், இன்றிருக்கும் கையறு நிலையைவிட மிகமோசமான கட்டத்தை சர்வதேச ரீதியில் சந்திக்க வேண்டியிருக்கும். 

இந்த விடயங்கள் குறித்த அக்கறை தமிழரசுக் கட்சியின் தலைவருக்கும் முக்கியஸ்தர்களுக்கும் இருப்பது மாதிரித் தெரியவில்லை. அல்லது, வழக்கமாக இறுதிக் கட்டத்தில் ஒப்புக்கு கடிதங்களை எழுதியும் அறிக்கைகளையும் வெளியிட்டு ஊடகங்களை நிரப்பலாம் என்று காத்திருக்கிறார்களோ தெரியவில்லை. இப்போது, தமிழரசுக் கட்சி சார்பில் யார் யாரெல்லாம், சர்வதேச விடயங்களைக் கையாள்கிறார்கள் என்பது ஒருவருக்கும் தெரியாது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திர முயற்சிகளை இனி யார் தொடரப்போகிறார்கள் அல்லது புதிய திட்டங்களை செயற்படுத்தப்போகிறார்களோ என்பது தொடர்பில் எவரிடத்திலும் தெளிவில்லை. முதலில் அந்தத் தெளிவை மக்களுக்கும் இராஜதந்திர வட்டாரங்களிடத்திலும் தமிழரசுக் கட்சி வழங்க வேண்டும். அதற்கு கட்சியை ஒரு கட்டமைப்பிற்குள் தேவையற்ற குழப்பங்கள் இன்றி பேணியாக வேண்டும். அதன்மூலம் பொறுப்புக்களை பகிர்ந்தளித்து செயற்பாட்டு வேகத்தை அதிகரிக்க வேண்டும். அவை குறித்து சிந்திக்காது, தொடர்ந்தும் ஊடகங்களும் மக்களும் தமிழரசுக் கட்சியின் குழப்பங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்ற தோரணையில் அந்தக் கட்சியின் தலைவரும், முக்கியஸ்தர்களும் செயற்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. 

ஒரு ஜனநாயகக் கட்சியாக, கட்சியின் யாப்பை உள்வாங்கி அதன் பிரகாரம் செயற்பட வேண்டியது அவசியமானது. அதனை தமிழரசுக் கட்சி நிராகரிக்கும் புள்ளியில்தான், தேவையற்ற குழப்பங்கள் நீடிக்கின்றன. அல்லது, குழப்பவாதிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் கட்சியின் மீதான சண்டித்தனத்தை செய்கிறார்கள். மத்திய குழுவும், பொதுக்குழுவும் அங்கீகரித்த புதிய நிர்வாக சபையை செயற்படுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும். அதனைவிடுத்து, தேவையற்ற அழுத்தங்களுக்கு தலைவராக சிறீதரன் அடிபணிவது அவரது தலைமைத்துவத்தை அர்த்தமற்றதாக்கிவிடும். தமிழ்த் தேசிய அரசியலில் இனிவரும் காலங்களில் செய்ய வேண்டிய கடமைகள் நிறையவே இருக்கின்றன. அதனை கால எல்லைகளை வரையறுத்து செய்ய வேண்டும். அதனைவிடுத்து, இவ்வாறான குழுப்பகரமான நிலையற்ற தன்மையை பேணுதல் என்பது தமிழ் மக்களின் பேரழிவுக்கு மீண்டும் வித்திடும்.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction