free website hit counter

அவளும்..அவளும் ! - 2

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

அவளும்..அவளும் - பகுதி 1


'பேய் மழை'

வானம் பொத்தலாகியது போல் நாள்முழுவதும் கொட்டித் தீர்க்கிறது. இறுகிக் கிடக்கும் செம்பாட்டு மண்ணும், மண்ணின் கீழான சுண்ணாம்புப் பாறைகளும, தாகத்தில் தவித்த பெரும்பூதங்களென மழைநீரை உறிஞ்சிக் கொள்கின்றன. ஈரலிப்பான நிலம், இருள் கவிந்து கிடக்கிறது.

ஒரு பெண்ணின் வீரிட்ட குரல் அந்தச் சூழலின் அமைதியைக் குலைக்கிறது. அதனைச் தொடர்ந்த சில பரபரப்புச் சத்தங்கள்.

மறுபடியும் அமைதி !

தலையின் மேல் பாரமாய் கவிந்த மண்ணின் இருளை, மழைநீர் கரைத்துவிட, குருதியென வழிந்து செல்கிறது செம்மண்நீர். தலை நிமிர்ந்து பார்க்கிறேன்...

" சின்னத்தம்பி உமக்கு ராசாத்தி பிறந்திருக்கிறாள்.." வயதுபோன அம்மா ஒருத்தி அந்த அமைதியைக் கலைத்து, மகிழ்சியைப் பரப்புகின்றாள். மங்கிய விளக்கின் வெளிச்சத்தில் நிழல் போலத் தெரிந்த உருவங்களில், சின்னத்தம்பி கையெடுத்து அவளைக் கும்பிடுகின்றார். பின் வலப்பக்கம் திரும்பி தலைக்குமேல் கைகூப்பி "அம்மாளாச்சி.. !" என்றார்.

" அம்மாளாச்சியே வந்து பிறந்திருக்கிறா... பிறகென்ன. கவனமாப் பாத்துக்கோ. கமலம் களைச்சுப் போயிற்றாள்..தங்கம் கூட இருக்கிறாள். பயப்பிடாத சுகப்பிரசவம்தான்...செல்லாச்சியட்டச் சொல்லி பட்டையள் வெட்டச் சொல்லு... காலமைக்கு நான் வாறன்...போய் பிள்ளையப் பாரு...!" சின்னதம்பியின் பதிலுக்குக் காத்திராமல் அரிக்கன் லாம்பை வெளிச்சத்துக்குப் பிடித்தபடி மழைக்குள் கரைந்தாள் அந்த வயதான அம்மா.

தலைவாசல் திண்ணைக் குந்திலிருந்த சின்னத்தம்பி தயங்கித் தயங்கி வீட்டிற்குள் சென்றார்.

இப்போது மழை தனிந்திருந்தது. எங்கும் குளிர்சியின் விரிவு.

" கொக்கரக்கோ.." சேவல் ஒன்று கூவியது. பறவையினங்கள் கிசுகிசுத்தன. காத்திருந்தது போல் சூரியக் கதிர்கள் மேலெழுந்தன. கோவில் மணி அடித்தது.

புதிய காலையொன்று புலர்ந்தது.

வீட்டினுள் இருந்து வெளியே வந்த சின்னத்தம்பி கிணற்றடிப் பக்கமாகப் போனார். வீட்டினுள் குழந்தையொன்றின் அழும் குரல் கேட்டது. நின்று தலையைத் திருப்பி அதனைச் செவிமடுத்த சின்னத்தம்பி மீண்டும் திரும்பி நடந்தார். அவரின் முகத்தில் மகிழ்ச்சியின் கோடுகள்.

கிணற்றடியில் அவர் முகங்கழுவிக் கொண்டிருக்கையில் ஆவலோடு வந்தப் பெண் " ஐயா !.." என்ற குரல்கேட்டு, தலைநிமிர்த்திப் பார்த்தார்.

"அம்மாவுக்கு பிள்ளை.. " அவள் முடிக்கும் முன்னமே மீண்டும் குழந்தையின் அழுகுரல்.

வீட்டை திரும்பிப் பார்த்த அப்பெண்ணின் முகத்திலும் இப்போது மகிழ்ச்சியின் ரேகைகள். அவரைத் திரும்பிப் பார்த்தாள். சின்னத்தம்பியின் முகத்தில் மகிழ்ச்சி இப்போது மென்முறுவலாக வெளிப்பட்டது.

" என்ன பிள்ளை ஐயா..?" ஆவல் உந்திய அவள் குரல்.

"பொம்பிளப்பிள்ள.."

"அம்மா சுகமாயிருக்கிறாவா..? "

"ஓம். சுகப்பிரசவம் தான். தங்கம் கூட இருக்கிறா..."

பிறந்த பிள்ளையைப் பார்க்கும் தவிப்பிலிருந்தாள் அப்பெண்.

" செல்லாச்சி..! மருத்துவச்சி குளியலுக்கு பட்டை வெட்டச் சொன்னவா...அதோட பத்தியத்துக்குத் தேவையானதையும் ஆயத்தப்படுத்த வேணும். நான் பிள்ளை பிறந்ததச் சொல்லக் கொஞ்சத் தூரம் போகனும்..."

"அதெல்லாம் பாத்துக்கிறேன் ஐயா. நாம் யோசிக்காமல் போயிற்று வரவாக்கும்.." என்றாள் செல்லாச்சி !

அன்றிலிருந்து அந்த முற்றமும் வீடும் மகிழ்ச்சியில் நிறையத் தொடங்கின.

"பச்ச உடம்புக்காரி. கவனமாப் பார்த்துக்கோ..! "

"பத்தியம் எல்லாம் கவனம்.."

"சின்னத்தம்பி! வீட்டுக்கு இலட்சுமியா மகள் வந்து பிறந்திருக்கிறாள்.."

அந்த வீட்டின் மகிழ்ச்சியைப் பங்கு கொள்ள வந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பங்கிற்கு அக்கறையை வார்த்தைகளாக உதிர்த்தார்கள்.
------------
மூன்றாம் நாளின் பின்னதான காலைப் பொழுதில், குழந்தையின் அழுகுரல் வெளியே கேட்டது. பெரிய வீட்டின் தாழ்வாரத்தில் விரிக்கப்பட்டிருந்த தடுக்குப் பாயில், குழந்தை. அதன் அழுகையைப் பொருட்படுத்தாதவள் போல் தங்கம் குழந்தையின் உடம்பு முழுவதும் ஏதோ ஒன்றைத் தடவிக்கொண்டிருந்தாள்.

தலைவாலில் தவித்துக் கொண்டிருந்த சின்னத்தம்பி " ஏன்..." என்றார்.

" ஏனென்டா..? இப்ப எண்ணை பூசிக் கை கால் மூக்குப் பிடிச்சாத்தானே உன்ர மகள் இலட்சணமா வளர்வாள்..." தங்கம் தன் கவனம் சிதறாமல், சின்னத்தம்பிக்குப் பதில் சொன்னாள். சின்னத்தம்பி சிறு சிரிப்புடன் மௌனத்தைச் சேர்த்துக் கொண்டார்.

" ராசாத்திக்கு...கால் பிடிச்சு... கைபிடிச்சு.. மூக்கு வா.. மூக்கு..! " பாட்டுப் போல் சொல்லியவாறு குழந்தையின் கை கால்களை வருடினாள். குழந்தை அழுதபடி இருந்தது.

பெரிய வீட்டின் வாசலால் குனிந்து வெளியே வந்த கமலம், இடுப்பில் கைவைத்து நிமிர்ந்தாள். தங்கத்தையும் குழந்தையையும் பார்த்து இளநகையோடு ரசித்தாள்.

பெரிய வீட்டுக்கும், அடுப்படிக்கும் இடையில் இருந்த தட்டி வேலியின் பின்னாள் இருந்த பகுதியில், புகையும் அடுப்பின் பின்னால் நின்ற செல்லாச்சி, கமலத்தைக் கண்டதும் சிரித்தபடி பக்கமாக வந்து நின்று கொண்டாள். குழந்தையைத் தன் கையில் தாங்கவேண்டும் எனும் தவிப்பு அவளுள்ளே.

" இப்ப குரலெடுத்து அழுதால்தான்.. பின்னால நல்ல பாட்டுக்காறியா வரலாம்..." சொல்லியவாறே தங்கம் குழந்தையை தடுக்குப் பாயில், எண்ணை தோயக் கிடந்த குழந்தையை சூரிய வெளிச்சம் பிடிக்குமாறு வளர்த்தி விட்டு உள்ளே போனாள்.

" மழை ஈரம் காலால சுவறிடும்... " எனச் சொல்லியவாறு, ஒரு சோடி செருப்பினைக் கமலத்துக்குப் பக்கத்தில் கொண்டு வந்து போட்டார் சின்னத்தம்பி. செல்லாச்சி தலையசைப்பில் அதை ஆமோதித்தாள். கமலம் கணவனின் கரிசனையைக் கண்களால் காதல் செய்தாள்.

சூரியவெளிச்சத்தின் சூடு குழந்தைக்கு இதமாக இருந்ததோ, தங்கத்தின் அழுத்தப் பிடியிலிருந்து விடுபட்டதோ குழந்தைக்குச் சுகமாக இருந்திருக்க வேண்டும். குழந்தை இப்போது அழாமலிருந்தது. வெளிச்சத்தில் கூசும் கண்களைச் சுருக்கியபடி, கை கால்களை அசைத்தது.

"மனுசியில சரியான கவனம்தான்..." எள்ளலோடும், துணிமணிகள் சிலவற்றோடும் உள்ளிருந்து வெளியே வந்தாள்.
சின்னத்தம்பி சிரிப்புடன் நகர்ந்தார். ஆண்களுக்கும் நாணம் வரும் என்பதை அவர் முகங்காட்டிற்று.

தாழ்வாரத்தில் மற்றொரு தடுக்குப் பாயினை விரித்து, கையில் கொண்டு வந்த பொருட்களை வைத்துவிட்டு, குழந்தையைத் தூக்கினாள். நோக்கம் அறிந்து உதவத் தயரானாள் செல்லாச்சி.

" அண்ணே ! இரண்டொரு முருங்கை காய் பிடுங்கித் தாங்கோ... கறிக்கு வேணும். " குழந்தையை கையிலேந்திய தங்கம் சொல்ல, தலையாட்டியபடியே வேலியில் சாத்தியிருந்த கொக்கைத் தடியுடன் பின்வளவுக்குப் போனார் சின்னத்தம்பி.

பலகையொன்றில் குந்தியிருந்த தங்கம், நீட்டிய தன் கால்களில் குழந்தையை நீள வளர்த்தி நீர்வார்த்தவாறு இருந்தாள். தட்டிவேலிக்கு அப்பாலிருந்து கொண்டு வந்த சுடுநீரை பாத்திரங்களில் ஊற்றி குளிர்நீர் சேர்த்து இதமாக்குவதில் உதவினாள் செல்லாச்சி. எண்ணையிலும், சூரிய வெளிச்சத்திலும், குளித்த குழந்தைக்கு இப்போது நீர் குளியல். அது சுகமாக இருந்திருக்க வேண்டும், ஆரம்பத்தில் அழுத குழந்தை அமைதியாக இருக்க, கறுத்தப்பூக்கொடி இலையும், சீயாக்காயும் சேர்த்தரைத்த பச்சை களியை, குழந்தையின் மேல் முழுக்கப் பூசிக் கழுவினாள் தங்கம். காலைச் சூரிய வெளிச்சத்தில் குழந்தை தாமரையாகத் தெரிந்தாள்.

சிறிது தள்ளி, எரிந்து கொண்டிருந்த சிரட்டைகளிலிருந்து செல்லாச்சி எரிதனல் சேகரித்தாள். குழந்தையைத் துவட்டி எடுத்த தங்கம், அதன் தொப்புள் குளியில் " ப்பூ " என ஊத, நீர்த்திவலைகள் வெளிப்பறந்தன. செல்லாச்சி சேகரித்த தனலில் சிறிதளவு சாம்பிராணியைத் தூவ, நறுமணம் புகையாக எழுந்தது. குழந்தையை சாம்பிராணிப் புகையில் இலாவகமாக முக்கி எடுத்தாள் தங்கம்.

" பரியாரியரிட்ட முக்கூட்டுக் குளிசை வேண்டினதே..... ?

பதிலாக கமலம் நீட்டிய சங்கு போன்ற கிண்ணத்தில் கூட்டுக்குளிசையின் கரைசல். சங்கின் மூக்கினை லாவகமாகக் குழந்தையின் வாயுள் செருகிக், கரைசலை உள்ளே விட்டாள். குழந்தையைத் தூக்கி முதுகில் இரண்டு தட்டுத் தட்டி, உள்ளே கொண்டு சென்றாள். குளியலின் சுகத்தில் குழந்தை அமைதியாகக் தூங்க, அழுகையின் சத்தம் நின்றிருந்தது.

வெளியே வந்த தங்கம் மற்றிரு பெண்களையும் நிமிர்ந்து பார்க்க, மூவருமாகத் தட்டி வேலியின் மறைப்பில் மறைந்தார்கள். அதுவரை காற்றில் நிறைந்திருந்த சாம்பிராணியின் வாசம் மறைந்து, பட்டைகளும், இலைகளும் அவிந்த புதிய மணம் பரவியது.

ஒரு கையில் கொக்கைத் தடியும், மறுகையில் பச்சைப் பாம்புகள் பேல் நீண்ட முருக்கங்காய்களுடனும் பின்வளவால் வந்த சின்னத்தம்பி, பக்கமாக முன்பக்கம் போனார்.

கமலத்தைப் பட்டைத் தண்ணீரிலும், பதியம் போடும் கதைகளிலும் தோய வார்த்தாள் தங்கம். கமலத்தின் உடல்கழுவி விழுந்த நீர், தட்டி வேலியின் கீழோடியது. அவளது வார்த்தைகள் வேலியின் மேலாக சின்னத்தம்பின் செவிவரை வந்தது. அதற்காகவே அவள் சற்றுச் சத்தமாகக் கதைத்தது போலவுமிருந்தது.

" ஊருக்கெல்லாம் மகள் பிறந்ததைச் சொன்னவருக்கு, சொந்த மச்சானட்டச் சொல்ல மனம் வரேல்ல போல....என்ன கோதாரிக் கோபமென்டு தெரியேல்ல.... இரண்டுபேரும் வாயைத் திறக்கினமுமில்லை. ஏறெடுத்துப் பாக்கினமுமில்ல..."

" என்னதான் கோபமென்டாலும், முப்தொன்டுக்கு தாய்மாமன் வரத்தானே வேணும்.. அப்ப அத இப்பவே சொல்லத்தானே வேணும்..."

"ம்..." கொட்டினாள் கமலம்.

" நேரம் பாத்து நீ அதச் சொல்ல வேணும் மச்சாள்..."

"ம்.." மறுபடியும் கொட்டினாள்.

மீண்டும் சாம்பிராணியின் வாசம் காற்றில் .... தங்கம் கமலத்திற்குத் தூபம் போடுவதை தலைவாசலில் நின்ற சின்னத்தம்பி உணர்ந்து கொண்டார்.

" இரண்டு வருசமாச்சு என்ர மனுஷன் இந்த வீட்டு முத்தம் மிதிச்சு. ஏனென்டு கேட்டா ஒருவரும் ஒன்டும் சொல்லினமில்ல...இரண்டுபேரும் வாயத் திறக்கினமில்ல. கதைபேச்சுமில்லை... நல்லா கதைச்சுப் பேசித்தானே திரிஞ்சவ. ஆற்ற கண் பட்டிச்சோ தெரியேல்ல. கண்டும் காணமலும் இரண்டுபேரும் திரியினம்..." ." கவலையை புலம்பலாக்கினாள் தங்கம்.


"கவலப்படாத மச்சாள். நான் இவரட்டக் கதைக்கிறன். அண்ணைய அவர் கட்டாயம் கூப்பிடுவார். பிள்ளையத் தொட்டிலுக்கு அண்ணதானே போடவேணும். அது அவருக்கும் தெரியும்தானே...? " ம் கொட்டுதலை நிறுத்திக் கமலம் பேசினாள்.

கோவில் மணி கேட்டது.

" அம்மாளாச்சி...! " மனப்பாரம் குறைந்தவளாகக் கும்பிட்டாள் தங்கம். ஆதரவாக அவள் தோள் பற்றினாள் கமலம்.

எல்லாவற்றையும் கேட்டவாறே இயங்கிய செல்லாச்சி மாட்டுக் கொட்டில் பக்கமாக நகர்ந்தாள். அவளிடத்தில் ஏதோ ஒரு பதற்றம் பரவியதாக உள்ளுணர்ந்தாள் கமலம்.

பட்டைக் குளியலின் சுகத்துடன், தலைமயிரில் நிறைந்த சாம்பிராணி வாசத்துடனும் வீட்டிற்குள் செல்லும் கமலத்துக்கு உதவிய தங்கம், அள்ளிச் செருகிய சேலையோடு, அடுக்களையில் நுழைந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அம்மிக் குழவிச் சத்தமும், பச்சை உள்ளியின் மணமும், அங்கே பரவியது.

பத்தியச் சோறு குடுத்தபின் மத்தியானச் சாப்பாடு முடித்துக் கொண்டு தங்கம் எங்கோ வெளியில் சென்றுவிட்டாள். குளியலின் சுகத்தில் கமலமும், கமலத்தின் சூட்டில் குழந்தையுமாக உறங்கிக்கிடந்தார்கள்.

தலைவாசலில் தனித்திருந்த சின்னத்தம்பி யோசித்துக் கொண்டிருக்க,
" ஐயா !... வேலையெல்லாம் முடிஞ்சுது நாளைக்கு வாறன்...." புறப்பட்ட செல்லாச்சிக்குத் தலையசைத்தார்.

பத்தியக்கறியின் வாசம் அவளிலும் மணத்தது. கக்கத்தில் கடகத்தை இறுக்கியவாறு, அவள் போன திசையில் அவர் பார்வை நிலைகுத்தியிருந்தது.

" கமலத்துக்குச் சொல்லுறதா வேண்டாமா ?.... சொல்லத்தான் வேணும்" என அவர் எண்ணியதை வாய் முணுமுனுத்தது.

காற்றின் அசைப்பில் சூழவும் நிறைந்திருந்த மரங்கள் சலசலத்து இசைத்தன.... அதில் நானும் அசைந்தேன்.

- தொடரும்

அவளும் அவளும் – பகுதி 3

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction