free website hit counter

அவளும்..அவளும் - பகுதி 1

கதைகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் ஒரு தொடர்கதையினைத் தரவேண்டும் எனும் எண்ணம் நீண்டநாட்களாகவே இருந்தது. அதற்கான முயற்சிகள் சில மேற்கொண்ட போதும் அது நிறைவேறவில்லை. நீண்ட கொரோனாக் காலத்தில் கழிந்த நாட்களில் தோன்றியது இந்தத் தொடர்.

மிக நீண்டகாலமாக எண்ணத்தில் இருந்த கருப்பொருளைக் கதையாக்கினோம். அதற்காக இது ஒன்றும் புத்தம் புது வடிவம் என்றோ, புதுமை பேசுகின்றதென்றோ சொல்வதற்கில்லை. கதையின் களம் ஈழம் என்பதனால் போர்க்காலக் கதையுமில்லை. சராசரி மனிதர்களின் வாழ்வியலோடு வரும் விடயங்கள் கருவாக, உருவாகியது இந்தத் தொடர்.

நெடுங்கதைகள் எதுவும் சொல்லத் தெரியாத எமது புது முயற்சியோடு, இன்று முதல் வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் இந்த முற்றத்தில் வந்து சந்திக்கின்றேன். வாசிக்கலாம், கேட்கலாம். வாழ்த்தோ, வசையோ, எதுவாயினும் சொல்லுங்கள்.. ஏற்றுக் கொள்கின்றேன்.

- இனிய அன்புடன் : மலைநாடான்.

அவளும்..அவளும் - பகுதி: 1

" வேம்பி ! "

ராசம் மெல்ல அழைத்தாள்.

யாருக்கும் கேட்கவில்லை. ஆனால்அது எனக்குக் கேட்டது. ராசாக்காவின் குரல் சன்னமாக ஒலித்ததா அல்லது உதடுகள் மட்டும் அசைந்ததா ? தெரியவில்லை. ஆனால் அவளது குரலை நான் கேட்டேன். அந்த அழைப்பு எனக்கானது. எனக்கு மட்டுமேயானது. எவருக்கும் கேட்க வேண்டியதில்லை. கேட்கப் போவதுமில்லை.

"ராசக்கா..!" என நாள் முழுவதும் அந்த முற்றத்தில் கேட்கும் அழைப்பின் குரல்கள் ஒய்ந்துவிட்டன. அது ஓய்ந்து ஏறக்குறைய ஒரு மாதகாலம் ஆயிற்று.

ஒரு மாதத்திற்கு முன் பெய்த்த அடை மழையும், சூறைக்காற்றும், அயலில் உள்ள மரங்களை முறித்து முற்றத்தில் போட்டது. அந்த நாளில்தான் அதுவரை ஒடிக்கொண்டிருந்த என் ராசமும் ஒடிந்து போனாள்.

முற்றத்தைச் சகதியாக்கிய வெள்ளத்திலோ அல்லது காற்றினால் வீழ்ந்து கிடந்த ஏதோ ஒருபொருளில் தடுக்கியோ அலமலங்காக வீழ்ந்து விட்டாள் ராசம். வீழும்போது என்னை அழைத்தாளோ.. விழுந்தபின் என் பெயர் சொல்லி அழைத்தாளோ தெரியவில்லை. ஆனால் அந்தக் கணத்தில் ஏதோ ஒரு சிலிர்ப்பு.

மழை சற்று ஒய்ந்தபின் " ராசக்கா..!" என அழைத்தபடி வந்த வேணிதான் பெரிய வீட்டின் தாழ்வார மறைப்பில் ராசம் வீழ்ந்து கிடந்ததை முதலில் கண்டாள்.

அழைத்தபடி வந்தவள் அலறியபடி திரும்பி ஒடினாள்....அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் அந்த இடம் பரபரப்பாயிற்று. அயலவர்களால் நிரம்பிற்று.

யாரோ 'ஆட்டோ' ஒன்றை அழைத்து வந்தார்கள். ராசத்தை இருவர் தூக்கி ஏற்றி, வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றார்கள்.

அவளை தூக்கிச் செல்லும் போது நினைவுடன் இருந்தாளா? நினைவிழந்திருந்தாளா தெரியவில்லை. ஆனால் அவள் என்னையே பார்த்திருந்ததாக உணர்ந்தேன். அருகே, வேணி அழுதபடி நின்றாள்.

அன்று போன ராசம் இன்றுதான் வீடு திரும்பினாள்.

திரும்பினாள் என நான் சொல்கின்றேன். "ராசக்காவை வீட்டை கொண்டு வந்திட்டினமாம் ..." என்று ஊர் சொல்லியது. அடுத்த சில மணி நேரத்தில் அந்த முற்றத்தில் ஊர் கூடியது. வாசலில் விக்கித்து நின்றாள் வேணி.

வந்தவர்கள் எல்லோரும் ராசக்காவைப் பார்த்தபின், " ராணி மாதிரித் திரிஞ்ச மனுஷி...." என ஒரேமாதிரி ஒப்புவிக்கத் தொடங்கி அவரவர் விருப்பத்துக்கு கதைகள் சொன்னார்கள். அதையெல்லாம் கேட்டானோ இல்லையோ தலையாடிட்டினான் தலைவாசல் திண்ணையிலிருந்த முகுந்தன்.

முகுந்தன்; ராசத்தின் மகன். இன்னொருவன் இப்போது இல்லை.

இறந்துவிட்டானா..? தெரியாது. அது யாருக்கும் தெரியாது. உறுதியாகச் சொல்லக் கூடியவர்கள் யாரும் இல்லை. ஆனால் ராசம், வசந்தன் வருவான் என எப்போதும் நம்பினாள்.

இன்றுவரை வரவில்லை.

முகுந்தன் பதினைஞ்சு பதினாறு வருசங்களின் பின் வந்திருக்கிறான்.

பத்தொன்பது வயசில அகதியாக ராசம் அனுப்பி வைக்க, சுவிஸ் குடிமகனாக இரு வாரங்களுக்கு முன் வந்திறங்கினான்.

இப்போது ராசத்தைப் பார்க்க வருபவர்களில் பாதிப்பேர் முகுந்தனைக் காண வருகின்றார்கள் என்பது மற்றுமொரு வழமை.
" ராசக்காவின்ர இரண்டாவது பெடியன் வந்திட்டானாம்..." என ஏற்கனவே உள்ளூர் பதிப்புக்கள்...உரசியிருந்தாலும், வைத்தியசாலைக்கும் வீட்டுக்குமாக முகுந்தன் அலைஞ்சதில் பலருக்கும் அவனைக் காணவோ பேசவோ முடியவில்லை.

ராசம் மட்டும் இயல்பு நிலையில் இருந்திருந்தால், அந்த இடத்தில் அவளின் குரலே உயர்ந்திருக்கும். இப்போது பலரின் குரல்கள்கள்....ஏதேதோ கதைகள்.... எல்லாம் சேர்ந்து இரைச்சலாக இருப்பது போல் ஒரு உணர்வு. அவள் வைத்தியசாலைக்குச் சென்றதன் பின்னதாக மறுபடியும் இப்போது அந்த வீடும் முற்றமும் நிறைந்திருக்கிறது.

தன்னைச் சூழவும், உயிர்ப்பு நிறைந்திருக்க வேண்டுமென்பதுதான் ராசத்தின் ஆசை. தனித்திருந்தாலும், ஆடு,மாடு, நாய்,பூனை, கோழி, செடி, கொடி, எனச் சூழலை நிறைத்து வைத்திருந்தாள்.

முற்றத்திற்கு வந்தாள் வேணி. அவளருகே ராசத்தின் ஆசைக்குரிய பிறவுனி. அமைதியாகக் கால்நீட்டி, தலையை தரையில் அமர்த்திப் படுத்திருந்தது. பிறவுணியின் தோள்களை ஆதரவாகக் கைகளால் தடவியபடி அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள் வேணி. ராசம் வீழ்ந்த நாளிலிருந்து பிறவுணியை வேணிதான் கவனித்துக் கொள்கிறாள். வேணியை யாரும் கவனித்தது போலத் தெரியவில்லை..

வேணி ராசத்தின் வீட்டுவேலைகளில் உதவியாக இருப்பவள். பாடசாலைக் கல்வி முடித்திருப்பவள். "அவையின்ர வீடுகளுக்குள் நாம போகக் கூடாது என.." வேணியின் தாய் சொல்லி வளர்த்தாள். ஆனால் ராசம் அப்படி ஏதும் அவளுக்கு ஒருபோதும் சொன்னதில்லை.

'வேணி' என அவளை எப்பொழுதும் அன்பொழுக அழைப்பது ராசம்தான். அவளுக்குத் 'திரிவேணி' எனப் பெயர் சூட்டியதும் ராசம்தான். இல்லையென்றாள் அவள் பெயர் வேறாக இருந்திருக்கும். " இந்தப் பெயருக்கு அர்த்தம் தெரியுமா..? " என வேணியின் தாய் செல்லாச்சியிடம் ராசம் கேட்ட போது " எனக்கென்னம்மா தெரியும்..? " எனக் கைவிரித்தாள்.

"வேணி வளர்ந்து படிச்சுப் பெரியவளாகும் போது, அவளுக்குத் தெரியும் இந்தப் பெயருக்கான விளக்கம்.." எனச் சொல்லிய ராசத்தின் கூற்றையும், 'திரிவேணி' என்ற பெயரையும், "சரி, தாயி..!" என மறுப்பின்றி ஏற்றுக் கொண்டாள் செல்லாச்சி. பெயர் மட்டுமன்றி வேணியின் வளர்ச்சியில் வேறு பலவாகவும் பங்கு கொண்டிருந்தாள் ராசம்.

முற்றத்தில் வந்து நின்ற மோட்டார் சைக்கிளால் இறங்கினார் செல்லதுரை மாஸ்ரர். பிறவுணி தலைதூக்கிப் பரபரத்தது. வேணி அதனை ஆசுவாசமாகத் தடவினாள்.. அமைதியாயிற்று. பிறவுணியோடிருந்த வேணியைப் பார்த்த மாத்திரத்தில் பார்வையின் திசையை முகுந்தனின் பக்கம் மாற்றிக் கொண்டார் மாஸ்ரர்.

முகுந்தன் இப்போது எழுந்து நின்றான். மிடுக்கோடு அவனருகே சென்று உரிமையோடு தோள்பற்றினார். அவர் ராசத்தின் தம்பி, முகுந்தனின் தாய்மாமன். இருவருமாக வீட்டினுள்ளே சென்றனர். சில நிமிடங்களின் பின் வெளியே வந்து தலைவாசலில் இருந்த இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.

சில நிமிட அமைதியின் பின் செல்லத்துரை மாஸ்ர் மெதுவாகப் பேசத் தொடங்கினார். " அக்கா இப்படிச் சரிஞ்சு போவா.. என நான் நினைக்கேல்ல.."

"நானுந்தான்..."

" இப்ப என்ன செய்யிறதென்டும் தெரியேல்ல..." முகுந்தனே தொடர்ந்தான்.

அவனது கைகளை ஆதரவாக பற்றிக்கொண்ட மாஸ்ரர் " எத்தின நாள் லீவு என்டு சொன்னனி..? "

"இரண்டு கிழமையில திரும்பி வாறதென்டு சொல்லித்தான் வந்தனான். அப்பிடித்தான் டிக்கெட்டும் போட்டது. இப்பவே இரண்டு கிழமை போயிற்று.."

"ம்...."

"இப்ப என்ன செய்யிறதென்டு ஒன்டுமா விளங்கேல்ல..."

"மனுசி பிள்ளை என்னமாதிரி..? "

" அவளும் புது வேலை ஒன்டுக்குப் போகத் தொடங்கினதால..லீவு எடுக்கேலாது. பிள்ளையும் சின்னப் பிள்ளை.."

" தனியச் சமாளிப்பாளோ...?"

" கஸ்ரம்தான். பக்கத்திலிருக்கிறவைதான் உதவினம்.."

அவர்கள் பேச்சுக்கள் நீண்டன....

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க,
அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"


- தொடரும்

அவளும்..அவளும் ! - 2

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction