தமிழ் மாதங்களின் வரிசையில் பன்னிரெண்டாவது மாதமாக வருவது பங்குனி மாதம். இம்மாதத்தில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரம் கூடிவரும் நாள் பங்குனி உத்திரம்.
வசந்த காலத்தின் துவக்கமான பங்குனியில் மரங்களும் செடி, கொடிகளும் துளிர்விடும். பூக்கள் மலரும். புள்ளினங்கள் பெருகி வரும். தமிழ் இலக்கியங்கள் இம்மாதத்தை, 'பங்குனிப் பருவம்' காலம் என்கின்றன. வடமொழியில் பங்குனி மாதத்திற்கு பல்குணன் என்று பெயர்.
இயற்கைச் சிறப்புக்கள் மிக்க இம்மாதம் இறை வழிபாட்டுக்கும் உகந்த மாதமாக ச் சொல்லப்படுகின்றது. அதிலும் உத்திர நட்சத்திரம் கூடிவரும் 'பங்குனி உத்திரம்' திருநாள் சிறிப்புடையது. ஸ்ரீ சீதா ராமர் கல்யாணம், பார்வதி பரமேஸ்வரன் திருமணம், தேவசேனா சுப்பிரமணியர் எனத் தெய்வத் திருமணங்கள் முதல் காப்பியத் திருமணங்கள் பலவும் நிகழ்ந்த மங்களகரமான நாள். ஹரிஹர சுதன் ஐயப்பன் அவதரித்ததும், குறமகள் வள்ளி அவதரித்ததும் பங்குனி உத்திர திருநாள் என்று புராணங்கள் கூறுகின்றன. தேவர்களும், அசுரர்களும், பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து அன்னை மகாலக்ஷ்மி வெளிப்பட்ட தினம் பங்குனி உத்திரத் திருநாள் என்பதால், இது அன்னைக்கு உரிய தினமாகவும் கொண்டாடப்படுகிறது.
இதனால் இந்நாளில் திருமணம் தடைபடுவோர் அம்பிகையுடன் சிவனையும், வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமானை விரதமிருந்து வழிபடவும், கருத்து வேற்றுமையால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேரவும் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இது தவிர பல்வேறு சிவன் ஆலயங்களிலும், முருகன் ஆலயங்களிலும், பங்குனி உத்திரத் திருவிழா நடைபெறுகின்றன.
ஆற்றல் உடையவனிடமிருந்து அவன் ஆற்றலை மட்டும் தனியே பிரிக்க முடியாது. அக்னியும் சூடும் போல் இனைந்தேயிருக்கும். இறைவனும், இறைவியும் அப்படி இணைந்து சரிபாதியாகச் சேர்ந்து இருப்பதே பூரணத்துவம் நிறைந்ததாகும். சிவமும் சக்தியும் இணைந்த ஶ்ரீசக்ரம், மகாமேரு எனப்போற்றப்படும். இப்படி சிவசக்தியாக விளங்கும் அன்னையின் தெய்வீகத்தை ஆதிசங்கரர் செளந்தர்ய லகரியில் போற்றும்போது, சீமந்தஸரணி என்னும் தலைவகிட்டின் முகட்டில் இடும் உச்சித்திலகமும் உலக நலம் பயக்கட்டும். குங்குமத்தை அம்பிகை உச்சியில் அணிந்து பெண்களைத் தீர்க்க சுமங்கலிகளாக வாழும்படி காக்கட்டும் என்கிறார்.
ஶ்ரீ இராஜ இராஜேஸ்வரி வடிவில் அம்பிகையைப் போற்றும் அபிராமிப்பட்டர், அந்தாதி பாடும்போது, "உதிக்கின்ற செங்கதிர் உச்சித்திலகம் உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி மென்கடிக் குங்கும தோயமென்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்றன் விழுத்துணையே " என்கின்றார்.
சிவன், சக்தி, பெருமாள், இலக்சுமி, முருகன், ஐயப்பன், எனப் பல்வேறு தெய்ங்களின் திருநாளாகினும்,
இருள்விலகிட சூரியன் உறுதுணையாவது போல், மானிடர் வாழ்வு புலரவேண்டி அன்னை செங்கதிராய்த் திகழ்கிறாள். அவள் நமக்குத் துணையாக வருவாள் எனும் நம்பிக்கையின் வழியே பங்குனி உத்திரத்தில் அம்பிகையைப் போற்றி வழிபடுகின்றார்கள். மங்கலங்கள் பல நிகழ்ந்த இந்தச் சுபத் திருநாளில் ஆரம்பிக்கும் அனைத்து முயற்சிகளும், நல்ல காரியங்களும் மங்கலகரமாக விளங்குவதோடு, மென்மேலும் சிறக்கும் என்பது நம்பிக்கை.
இந்த நன்நாளில் இறைவியைப் போற்றித் துதிக்கும் ஒரு புதிய பாடல்